Sunday, June 24, 2007

Gay Parade - Toronto

June 24, 2007

Unstoppable: மேலதிக விபரங்களுக்கு


P6290426


P6290398


P6290404



P6290418


P6290411


P6290420


P6290433


P6290405


Pride Paradeற்குப் போய் படங்களை ஆரம்பக்கட்டத்தில் எடுத்துக்கொண்டிருந்தபோதே புகைப்படப்பெட்டி என்னோடு மல்லுக்கட்டத்தொடங்கியது. சென்றவருடம் கரீபானாவில் அழகாய் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை zoom செய்து படமெடுத்துக்கொண்டிருந்தபோது குறுக்காலை நடந்துபோன இன்னொரு பெண் தவறுதலாகத் தட்டியதால் அப்படியே சீமெந்துத் தரையில் கமரா விழுந்திருந்தது. திருத்தியெடுத்திருந்தாலும் முன்னர் போல இயங்குவது இல்லை; விலை சற்று அதிகமாய் வாங்கியதால் உடனே குப்பையில் எறியவும் மனமில்லை. எனவே இன்றும் ஆரம்பக்கட்டத்தோடு புகைபடப்பெட்டி உறங்குநிலைக்குப் போயிருந்தது. ஏதோ கொஞ்சப்படங்களாவது எடுக்க முடிந்ததே என்றவளவில் ஆசுவாசப்படவேண்டியதுதான்.

Friday, June 22, 2007

கியூபாவில் கிள்ளியவை மற்றும் SICKO

கியூபாவில் கடைக்கு, வங்கிக்கு, மற்றும் போகின்ற இடங்களில் நாங்கள் சந்தித்தவர்களில் அநேகர் நாங்களும் கியூபர்கள் என்றவகையில் எங்களுடன் ஸ்பானிஷ் மொழியிலேயே உரையாடத் தொடங்கிருந்தார்கள். எமக்கு சென்னோரிட்டா, கிராசியஸ், சர்வேசா போன்ற 'பொறுக்கி'யெடுத்த சொற்களைத் தவிர வேறோன்றும் ஸ்பானிஷ் மொழியில் தெரியாது; அத்துடன் நாங்கள் கியூபர்கள் அல்ல என்றபோது, பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்று அநேகர் சொல்லியிருந்தார்கள். ஆகவே அடுத்த முறை, கியூபா போகின்றபோது ஸ்பானிஷ் மொழி அறிந்துகொண்டுபோய் கியூபர்களாக மாறிக் கலக்குவதாய்த் தீர்மானித்திருந்தோம். இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் தந்த உற்சாகத்தில் நண்பன் பயணியர் கையேட்டை விரித்துவைத்து ஒன்றிலிருந்து பத்துவரை ஸ்பானிஷில் சொல்லக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தான் என்பது வேறுவிடயம். அங்கிருந்த மக்கள் மிக நட்பாயிருந்தார்கள்; அதேபோன்று பலருக்கு 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை' போல கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெயரும் விருப்பமும் இருக்கிறது.

கியூபாவில் நின்ற நாட்களின் மலரும் நினைவுகளை அவிழ்த்தால், நிறைய மலர்கள் நறுமணத்துடன் வலையில் மலரக்கூடும். அதெல்லாம் இப்போது வேண்டாம். அங்கே கொய்த சிலவற்றைப் பதிவு செய்கின்றேன். இரண்டு கால்களுடன் அலைந்து திரிந்த 'இயற்கை'யை இரசிக்கவே எங்களுக்கு நேரம் போதாமல் இருந்தபோது புகைப்படப்பெட்டிக்குள் வந்த இயற்கை அப்படி இப்படித்தான் இருக்கும். மன்னிக்குக!

இப்பொது ஏன் கியூபா பற்றி நினைவுக்கு வந்தது என்றால், மைக்கல் மூர் (ஃபரனைட் 9/11ற்கு பிறகு) SICKO என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கின்றார். எப்படி அமெரிககாவில் Health System இருக்கின்றது என்பதை கியூபாவின் Health System யோடு ஒப்பிட்டு எடுத்திருக்கின்றார். கியூபா புரட்சியின் பின், ஃபிடல் காஸ்ரோ போன்றவர்களால் கியூபாவின் மருத்துவ அமைப்பு மிகச்சிறப்பாக (அனைவருக்கும் இலவசமாக) இயங்கிவருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. இம்மாத இறுதியில் திரையரங்கிற்கு வரவிருக்கும் SICKOவை முடிந்தால் பாருங்கள். இணையத்தில், உங்கள் படம் திரையங்கில் வெளியிடமுன்னரே வெளிவந்துவிட்டதே என்று மூரிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு அது பற்றி கவலையில்லை, தனது பெயரைக் களவெடுத்து தங்களது படம் என்று போடாமல் வேறு என்ன செய்தாலும் பரவாயில்லை. படம் எடுத்ததன் நோக்கமே பரவலாய் பலரைப் போய்ச்சேரவேண்டும் என்று மூர் குறிப்பிட்டிருந்தார். 9/11 ஆல் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளையும் கியூபாவிற்கு அழைத்துச்சென்று அங்கே படமெடுத்தத்தற்காய் அமெரிக்க அரச இயந்திரத்தால் தீவிர விசாரணைக்கும் மைக்கல் மூர் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


































Tuesday, June 19, 2007

சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வு

-தமிழ்ச்செல்வியை முன்வைத்து-

ஷ்ரேயா (தமிழ்ச்செல்வி) அறிமுகமாகும் காட்சி நமது தமிழ்ப்பண்பாட்டிற்கு முன்னுதாரணமாய்க் கொள்ளக்கூடியது. ஓம்...(இது கந்தன் அருளிய பிரணவமந்திரம் அல்ல) கோயில்தான் ஷ்ரேயா அறிமுகமாகின்றார். அவர் அந்தப்பொழுதில் அணிந்திருந்தது சேலையா அல்லது half--saree யா (பாவாடை& தாவணியா) என்பது ஆழமான ஆய்வுக்கு வழிகோலக்கூடியது.

இரண்டாவது காட்சியில் ஷ்ரேயாவைப் 'பொண்ணு பார்க்கப்படுவதனான படலத்தில்' ஆடுகின்றார், பாடுகின்றார்..அவ்வாறு எங்களைப் பயமுறுத்திப் பார்த்துத் தோற்கின்றார். படத்தில் முதல் முதலாக அவரது இடுப்புத் தாவணி கொஞ்சம் விலகுகிறது.

அடக்க ஒடுக்கமாய் சாறி கட்டும் தமிழ்ப்பெண்ணாகவிருக்கும் ஷ்ரேயா (அதனாற்றான் சிவாஜி சார் காதலிக்கிறார்). சிவாஜியின் காதலியானவுடன் இடுப்பு இன்னபிற cleavages தெரிய ஆட்டமாடுகின்றார். இதன் மூலம் தமிழ் கலாசார பெண்கள், ஆண்களைக் காதலிப்பார்களாயின் அவர்களுக்கு எந்த (அரைகுறை) ஆடையும் அணியும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற போதனையை இப்படம் கற்றுத்தருகின்றது. காதலித்தவுடன் உரிமை, உடமை, பொஸஸ்சிவ்னெஸ் இருபாலார் 'இடை'யும் கூடுமென்று அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள். ஆனால் நமது தமிழ்க் கலாசாரத்தில் தொப்புள் என்ன பரப்பளவில் தமது காதலிகளுக்கு இருக்கின்றது என்று பொதுவெளியில் காட்டவும் தயங்காத மிகத் திறந்த மனதுடையவர்களாக தமிழ் ஆண் சிங்கங்கள் இருக்கின்றார்கள் என்பதை இப்படம் தொப்புள் சாட்சிகளுடன் ஆவணப்படுத்துகின்றது. அந்தளவில் கல்தோன்றா மண்தோன்றா மூத்த குடிகள் நாமென்பதையும் நாகரிகத்தைப் பிறருக்கு கற்றுத்தந்தவர்கள் நாமே என்ற வரலாற்றை மீளவும் தூசி தட்டவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

ஜோசியத்தின்படியே எல்லாம் நிகழும் என்றபடியால், நீங்கள் காதலித்தாலும் ஜோசியம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டும். டீப்பாய் காதலித்தால் என்ன, ரிப்-ரொப்பாய் காதலித்தால் என்ன, ஜோசியம்/ஜோசியர் காதலிக்கக்கூடாது என்றால் காதலிக்கக்கூடாதுதான்...இல்லையெனில் பெரும் பாரதூரமான் விளைவுகள் உருவாகும், அத்றகு முக்கிய உதாரணமே ஷ்ரேயாவின் கண்ணில் வரும் கிளிசரின் கண்ணீர்த்துளிகள் (அல்லது தமிழ்க் கலாசாரத்தின் கறுப்புத்துளிகள் எனவும் சொல்லலாம்)

ஷ்ரேயா மெல்லிய நீல சேலையில் அழகாக இருக்கின்றார். ஆகவே இனி அனைத்துத் தமிழ்ப்பெண்களும் மெல்லிய நீல நிற சாறியைத் நமது தமிழ் அடையாளக் கலராக ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை....அது see-throughவாய் இருக்கவேண்டும். பின் பக்க blouse, emptyஆக இருத்தல் விருப்பத்தக்கது. எனெனில் பிறகு தொப்புளுக்கு ஒரு நீதி தமக்கு ஒரு நீதியா என முதுகு கோபிக்கக்கூடும்.

ஷ்ரேயாவுக்கு காதல் வரும் காட்சியில் ரெயினுக்கும் முன் சிவாஜி சாரின் கால் (ஓமொன்று சொல் இல்லாட்டி தற்கொலை என்ற சபதத்தின்படி)தண்டவாளத்தில் சிக்குகிறது. அந்தப்பெரிய உருப்படியைக் கண்டு நிற்பாட்டமுடியாத வண்டலூர் ரெயின் ஷ்ரேயா தன் தாவணியைத் தூக்கிப்போட்டு blouse யோடு ஓடும்போது மட்டும் நிற்கிறது (ஆகவே அந்த ரெயின் ஒரு ஆண் என்பது நிரூபணமாகிறது). அப்படியே குனிந்து நிற்கும் ஷ்ரேயாவை கமரா மேலிருந்து தன் கலைத்தாகத்தோடு படம் எடுக்கிறது இந்நூற்றாண்டில் தவறவிடக்கூடாத நூறு ஒளிப்படங்களில் ஒன்றென ரைம்ஸில் வரக்கூடிய அரிய காட்சி அது.

தொப்புள் காட்டாவிட்டால் தமிழ் ஆண்கள் டூயட் பாடமாட்டார்கள் என்பதால் தொப்புளைக் காட்டாமல் ஒருபாட்டும் ஷ்ரேயா ஆடிவிடவில்லை.. அவ்வப்போது தடாகத்தில் மெல்லிய ஆடைகளுடன் நீந்தவும் செய்கிறார். ஆனால் தலை துவட்டும் காட்சியைக் காணவில்லை. அவருக்கு 'ஜலதோசம்' பிடித்துவிடுமே என்று படம் முடியும்வரை உங்கள் உள்ளம் -என்னைப்போல அதிர்ந்தால் - நீங்கள் ஒரு மனிதாபிமானமுள்ள தமிழ் ஆண் என்பது உறுதிப்படுத்தப்படும்..

இடைவெளிக்குப் பின் நெடும் நேரமாய் ஷ்ரேயாவைக் காணவில்லை. சிலவேளை ஸ்கிரினிலிருந்து வெளியே வந்து ஒய்வெடுக்க அரங்கின் இருக்கையில் எங்காவது இருக்கின்றாரோயெனத் தேடத்தொடங்கினேன். மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் சேலை கட்டியிருக்கவில்லை என்பதாலும் தொப்புளின் பரப்பை வெளியே பறைசாற்றிக்கொண்டிருக்காததாலும் அவர்கள் தமிழ்ப்பெண்களாக இருக்கச் சாத்தியமில்லை. (ஆனால் தமிழில் கசமுசாவென்று கதைத்துக்கொண்டிருந்தார்கள்).

சிவாஜியின் laptop சிபிஜக்கு காட்டிக்கொடுத்து சின்னத்திரை வில்லி மாதிரி வந்து ஷ்ரேயா ஒருகாட்சியில் கண்ணீர் வடிக்கிறார். அப்போது மட்டும் அவரது இடுப்பு தாவணியால் மறைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்காட்சியில் ஷ்ரேயா ஸ்கிரினில் hi hi (or bye bye) என கையைக்காட்டுகிறார். மூன்று மணித்தியாலமாய் தமிழ்க் கலைத்தாகம் கொண்ட ஒரு படத்தைப் பார்த்த்தால் கையில் வைத்திருந்த ஆறு ரிக்கெட்டுக்களை ரென்சனின் சுக்குநூறாக கிழித்திருந்தது கூட எனக்குத் தெரியவில்லை என்பதில் இந்தப்படத்தின் அருமை பெருமை உங்களுக்குப் புரியும். அருமையான படத்தில் அற்புதமாய் நடித்த ஷ்ரேயாவுக்கு அந்த கடதாசித்துண்டுகளை ஸ்கிரினை நோக்கி எறிந்து எனது அன்பைக் காணிக்கையாக்கினேன்.

------------------
நானாவது பரவாயில்லை, எனக்கு ஓசியில் ride கொடுத்து ஓசியில் ரிக்கெட்டும் எடுத்துத் தந்த நண்பனுக்கு எப்படியிருக்கும்? அவனுக்காகவே இந்தப்பதிவு சமர்ப்...பணம்!

தோழா, ஷ்ரேயா போல ஒரு தமிழ்ப்பெண் உனக்குக் கிடைக்க கடவுக.
------------------

சிவாஜி சாருக்கு அவனவன் பாலாபிஷேகம், பூந்தி இலட்டு அபிஷேகம், நடுரோட்டில் ஆடறுத்து ரத்தாபிஷேகம் என்று செய்யும்போது, நம் தமிழ்ப்பெண் ஷ்ரேயாவிற்கு என்னாளானது... ஒரு பெங்குவின் ஆட்டம்!

.

Sunday, June 10, 2007

ஏ.ஆர்.ரஹ்மான் - ரொரண்டோ

-June 10, 2007-

ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி 7.30 Air Canada Centreல் ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டு பயமுறுத்திக்கொண்டிருக்க, காருக்கான தரிப்பிடம் கிடைக்காது மெட்ரோ ரொரண்டோவில் அவதிப்பட்டபடியிருந்தோம். ஏ.ஆர்.ஆர் தனது நிகழ்ச்சியை நேரத்திற்குத் தொடங்கிவிடுவார் என்பதைவிட, நிகழ்ச்சிக்கு வருகின்ற பெண்களை நாம் நேரத்திற்குச் சென்று வாசலில் நின்று வரவேற்காது போனால் அவர்களின் முகம் வாடிப்போய்விடுமே என்ற கவலையே அதிகம் எமக்குள் இருந்தது. நண்பனும், இப்படிப் பெண்கள் -ஆடை, அலங்காரத்திற்கு- நேரம் மினக்கெடுத்தி வெளிக்கிட்டு வரும்போது நாம் அவர்களை பார்த்து இரசிக்காவிட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று எனது அலைவரிசையில் நின்று உரையாடிக்கொண்டிருந்தான் (ஆனால், நண்பா செப்ரெம்பர் -உன் registrationற்குப் பின்- நாம் இப்படியெல்லாம் கலர் பார்ப்பதை ஆய்வுகள் செய்யமுடியுமா என்ன?)

P6150140

ஒரு மாதிரி காரைப் பார்க் செய்துவிட்டுப் போனால் இருக்கைகளைச் சரியாகக் காட்டும் பெண் ஒருவர், 'நீ அணிந்திருக்கும் ஆர்ஜெண்ரீனா ரீசேர்ட் நல்லாயிருக்கிறது' என்று என்னை குளிரவைத்து நண்பனைக் கொதிக்கவைத்தார். அந்த ஸ்பானிஷ் பெண்ணோடு 'கடலை போடுவதா'? அல்லது இருக்கைகளில் எங்களைக் காணாது ஆம்பல் முகம் சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதா என்று நினைப்பதற்குள் நிகழ்வு ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டது.

P6150161

நிகழ்வில் அதிகமாய் ஹிந்திப் பாடல்களைப் பாடினார்கள் (தமிழர்கள் பெரும்பான்மையாய் வருவார்கள் என்று தெரிந்தும்/ அரங்கில் இருந்தும்). அதனால் சோர்ந்து போயிருந்த எம்மை முன்னுக்கு இருந்த வட இந்தியாப் பெண்களும், பின்னுக்கு இருந்த தமிழ்ப்பெண்களும் ஆடியாடி, கத்திக்குழறி(?) உற்சாகப்படுத்தியபடியிருந்தார்கள். நணபனுக்கு *சர்வேசா அருந்தாமலே உருவேறுதல் நிகழ்ந்து, தமிழ் ஹிந்தி என்று வேறுபாடில்லாமல் எல்லாப்பாடல்களுக்கும் சாமியாடத்தொடங்கியிருந்தான். நான், அவனுக்கு அவ்வப்போது கூக்குரலிலிட்டு, ரிதம் ஏற்றி வேப்பிலை அடித்துக்கொண்டிருந்தேன். 'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே....ஹம்மா, ஹம்மா, ' என்று ரஹ்மான் உச்சஸ்தாயியில் பாடத்தொடங்கும்போது எனக்கும் உருவேறியிருந்தது; கஞ்சா அடிக்காமலேயே நானும் எங்கையோ உயர உயரப் பறக்கத் தொடங்கியிருந்தேன்.

P6150167
ஆடிக்கொண்டிருக்கும்போது, ரஹ்மானின் பாடல்களைப் போல, எனக்குப் பிரியமான பெண்ணும் ஏன் இவ்வளவு குளிர்மையாக மனதிற்குள் வந்துபோய்க்கொண்டிருக்கின்றாள் என்பது என்றுமே புரிவதில்லை....ல்லை...லை.

P6150172

நாலைந்து வருடங்களுக்கு முன் ரஹ்மானின் பாடல்கள் மீதிருந்த பைத்தியம் இப்போதில்லை. மேலும் சிவாஜி படப்பாடல்களில் அநேகமானவற்றைப் பாடியதைத் தவிர்த்து வெவ்வேறு தமிழ்ப்படங்களிலிருந்து சில பாடல்களைப் பாடியிருக்கலாம். சிவாஜியில் 'ஆம்பலை'த் தவிர மிச்சம் எல்லாம் வீணான பாடல்கள் என்பது எனது துணிவு.

P6160190

இப்படியான நிகழ்ச்சிக்குப் போயும், இறுக்கமாய் இருந்து இரசிக்கும் elite மனநிலையை, தமிழ்க் கலாசார பின்புலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்று நானும் நண்பனும் இடையிடை அலசிக்கொண்டிருந்தோம். பார்ட்டிகளுக்குப் போய் தண்ணியடித்து மனுசன்மார் டான்ஸ் ஆடி fun அடித்துக்கொண்டிருக்கும்போது, இறுக்கமாய் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களிலிருந்து இந்த உரையாடலை ஆரம்பிக்கலாம்.

P6150155

அந்தவளவில் வட இந்தியக் கலாசாரம் வித்தியாசமானது. பெண்களையும் தமது கொண்டாட்டங்களில் அநேக இடங்களில் உள்வாங்கிகொண்டிருப்பதாய் நான் வாசித்தளவில் அறிந்து வைத்திருக்கின்றேன். நல்லதை எவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். வறட்சியான தமிழ்க்கலாச்சாரம் பற்றி பின்னர் உரையாடலாம். எனெனில் எனக்கு இப்போது தூக்கம் வருகின்றது.

*beer in spanish

சிவத்தம்பி பவளவிழா

-காலம் சிறப்பிதழ் வெளியீடு & புத்தகக் கண்காட்சி-
ஜூன் 09, 2007

siv1
சிவத்தம்பிக்காய் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிலவருடங்களுக்கு முன்பாய் மூன்று நாட்கள் (?) நடந்த கருத்தரங்கிலிருந்தும், சிவத்தம்பி கூத்துப்பற்றி விபரமாய்க்கூறும் ஒளிப்படமும் காட்டப்பட்டது. இவற்றிலிருந்து நிறைய விபரங்களை சிவத்தம்பி குறித்து அறிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது. முக்கியமாய் கூத்துப்பற்றி அவர் விபரமாய் உரையாடுவது பல விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் அழைத்துச்செல்லக்கூடியவை. கூத்துப்பற்றிய சிவத்தம்பியின் விபரணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இப்படி ஒரு தமிழர் அழகாய் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கின்றாரே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது முடிவில் இயக்கம் தர்மஸிறி பண்டாரநாயக்கா என்று போடப்பட்டபோது, அட அதுதானே என்ற உணர்வு மனதிற்குள் வந்ததையும் குறிப்பிடத்தான்வேண்டும்.


siv13
'காலம்' - சிவத்தம்பி பவளவிழா (+ தாசீசியஸ் இயல்விருது) சிறப்பிதழ் வீ.அரசுவினால் வெளியிடப்பட்டபோது...


siv7
சிவத்தம்பியின் பால்ய நணபரொருவர், வீ.அரசு, சந்திரகாந்தன் அடிகள் & தாசீசியஸ்.


siv19
வந்திருந்த பார்வையாளர்களில் ஒருபகுதி.

siv11
உ.சேரன்


siv22
'காலம்' புத்தகக்கண்காட்சியில்...

(நன்றி: Photos by Ramanan - looktamil.com )

இம்முறை விரும்பிய சில புத்தகங்கள் கிடைத்திருந்தன, சில வாங்கமுடியாமற்போயின. சாருவின் 'ராஸலீலா' வாங்கவேண்டும் என்ற ஆவலில் (சாரு எனக்கு தனிப்பட்டு அறிவுறுத்தியபடி :-) ) 'காலம்' செல்வத்திடம் கேட்டபோது, வந்திருந்த ஒரு பிரதியையும் யாரோ ஒருவர் வாங்கிச் சென்றுவிட்டார் என்று கையை விரித்திருந்தார். ஜெயமோகனின் 'கொற்றவை' வாங்கவேண்டும் என்ற விருப்பை அதன் விலை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது :-(.

சில புத்தகங்கள்
(1) வடு - கே. ஏ. குணசேகரன்
(2) மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக்கவிதைகள்) - தமிழாக்கம்: வ.கீதா- எஸ்.வி.ராஜதுரை (தேடிய ஒரு நூல் கையில் கிடைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி)
(3) புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ (மொ-பெ:சா.தேவதாஸ்)
(3) அக்கரைக்குப் போன அம்மாவுக்கு - ஹம்சத்வனி (ஈழத்துக்கவிஞர், 80களின் ஆரம்பத்திலும் மத்தியிலும் தீவிரமாய் இயங்கியிருக்கிறார். தமிழ்ச்செல்வன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தற்சமயம் கனடா, மொன்றியலில் வசித்துவருகின்றார் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து பேசப்படும் ஒன்றிரண்டு ஈழத்து மையப்புள்ளி கவிஞர்களால் காலம் புதைத்த ஒரு கவிஞராக இவர் இருக்கக்கூடும். ஹம்சத்வனியின் சில தொகுப்புகளை வாசித்திருக்கின்றேன். 80களின் ஈழக்கவிதைகளோடு வைத்துப்பார்க்கும்போது அலட்டடில்லாது நல்ல கவிதைகளை எழுதியிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது)
(5)பெண் வழிகள் (மலையாளப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)- தமிழில்: சுகுமாரன்
(6) கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா

Friday, June 01, 2007

தமிழியல் மாநாடு

-வெள்ளிக்கிழமை-

P6050110

'புலம் பெயர் சூழலில் தமிழ் மொழி கற்றல்/கற்பித்தல்' அமர்வில், பார்வதி கந்தசாமி, குலம் சண்முகம் & செல்வா கனகநாயகம்

P6050111

பார்வையாளர்களில் ஒரு பகுதி

P6050118

சுமதி ரூபன், அ.மங்கை, வீ.அரசு & சித்திரலேகா மெளனகுரு

P6050117

டி.பி.எஸ்.ஜெயராஜ், சேரன் மற்றும் பார்வையாளர்கள்

P6050122

சென்ற ஆண்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாய் வெளியிட்டபோது பொ.கனகசபாபதி, சேரன் மற்றும் சிலர்.

P6050114

அமர்வுகள் நடைபெற்ற வளாகம்.

Wednesday, May 30, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு இரத்தும்...

இதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்

எதிர்வரும் ஜூன் 02 நடைபெற இருந்த வலைப்பதிவர் சந்திப்பு -தவிர்க்கக் கூடிய காரணங்களால்- இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

siva1

மற்றும்படி -தொடர்புகொண்ட- தமிழியல் மாநாட்டுக்கு சமூகமளிக்கும் நண்பர்களைச் சந்திக்கலாம். வேறு சில வலைப்பதிவுகள் எழுதாத நண்பர்களும் வருகை தருவார்கள் என நம்புகின்றேன். வலைப்பதிவர்கள் என்ற தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே தவிர்க்கப்படுகின்றது. அவ்வளவே :-).

siva3

--------------------------------

வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன். என்கின்றபோதும் நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.

Wednesday, May 16, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு?

வருகின்ற மே 31-ஜூன் 02 வரை தமிழியல் மாநாடு ரொரண்டோவில் நடைபெறவுள்ளது. சென்ற முறை கட்டணம் இல்லாது அனுமதித்தவர்கள், இம்முறை மதியவுணவு தருகின்றோம் கட்டணம் கட்டி வாருங்களென பயமுறுத்திக்கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இம்மாநாட்டில் வலைப்பதிவுகள் எழுதுபவர்களும் கலந்துகொள்ளக்கூடும் என ந்மபுகின்றேன்.

எனவே ஜூன் 02, சனிக்கிழமை அன்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாமொரு அறிமுகக் கலந்துரையாடலைச் செய்யலாம் என்று நம்புகின்றேன். வலையில் பதிபவர்கள் மட்டுமில்லாது, வலைப்பதிவுகளை வாசிப்பவர்களும் கலந்துகொண்டால் இனியதொரு பொழுதாய் அது அமையக்கூடும்.

பின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.

மின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு: dj_tamilan25@yahoo.ca

Saturday, May 12, 2007

இதமாகட்டும் இந்தச் சனிக்கிழமை

A dream


அதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின ஆளுமைகளினூடாக பேசுவதைப் பார்க்கலாம். இவ்விரு பாடகர்ளும் பிற ராப்/R&B பாடர்களின் பாடல் வரிகளிலிருந்து வித்தியாசமாய் எழுதுபவர்கள். பல பாடகர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுப்பதுடன், பாடல்களை அவர்களுக்காய் இசைகோர்த்து தயாரித்தும் கொடுப்பவர்கள். Will I Am, Black Eyed Peasன் முக்கிய ஒரு பாடகர். இப்பாடல் Freedom writers என்ற படத்திற்காய் தயாரிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் எமினெத்திற்கு பிறகு எனக்கு அதிகம் பிடித்த இன்னொரு பாடகர் Common.

Promiscuous


Nelly Furtado நமது நாட்டுக்காரி. கனடாவின் கிழக்குப்பகுதியான வன்கூவரில் பிறந்து வளர்ந்தாலும், போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். அண்மையில் வந்த அவரது Loose இறுவட்டு பெருமளவில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. Grammy போல, கனடாவின் முக்கிய இசைவிருது நிகழ்வான Junoவில் Nelly முக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தவர் . இந்தப்பாடலைப் பார்த்து ஆடாமல் இருந்தால்தான் அதிசயம்.

Timberland தனது நிறுவனத்திலும் Nellyஐ ஒரு பாடகராக இணைத்திருக்கின்றார். தனித்தனிப் பாடலாக Tamberland பிறருக்காய் பாடிய/தயாரித்த பாடல்களை இரசித்த எனக்கு, அவரின் அண்மையில் வெளிவந்த Shock Value இறுவட்டை வாங்கிக்கேட்டபோது ஏமாற்றமாயிருந்தது. இதே Timbarland தயாரிக்க அதில் பாடவிருந்த M.I.Aன் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Nobody wanna see us 2gether, don't matter...


Akon புகழின் உச்சியில் (வேறு விடயங்களிலும் கூட) ஏறிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்திருப்போம். ஆபிரிக்க (செனகல்) நாட்டுப் பின்னணியில் வந்தவர்; பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர். இப்படியொரு ஆபிரிக்கர், அமெரிக்க R&B /Rap ல் பெருமளவு இரசிகர்களைக் கொண்டிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளகூடியது. அவரின் இரண்டாவது இறுவட்டான Konvicted பல Billboard சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கின்றன. எமினெமோடு smack thatம், Snoop Dogg டன், I wanna love you பாடலும் தொடர்ந்து எங்கும் ஒலி/ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

R.Kelly ஐயும் Shaggy ஐயும் கலந்து நினைவுபடுத்தும் ஒரு குரல் Akonனினது. Akonன் இந்தப்பாடலோடு, R.Kelly யின் Ignition பாடலையும் மற்றும் R.Kelly, Cassidyயோடு பாடிய் Hotel ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது புரியும். கறுப்பினத்தவர்களில் கூட கறுப்பாய் இருப்பது குறைத்து மதிப்பிடுகின்றது என்பதை அதிக நேர்காணலில் Akon அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஏன் தான் இவ்வளவு கறுப்பாய் இருக்கின்றேன் என்று சில கறுப்பினச் சிறுவர்களால் கூட கேட்கப்படும்போது எவ்வாறான சிந்தனைகள் சிறுவர்களிடம் புகுத்தப்படுகின்றது என்று கவலைப்பட்டிருக்கின்றார்.

இப்பாடல், தாங்கள் காதலிப்பதை வேறொருவரும் விரும்பவில்லை என்பதைக் கூறுகின்றது. ஆனால் எமது காதலுக்கான உரிமைக்காய் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிறது. Fight for our right to love என்பது அநேகருக்குப் பொதுவாய் இருக்கிறது போலும்.

Sunday, May 06, 2007

நான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பும்

Spider-man-1 பார்த்த முதலாவது சந்தர்ப்பம் அழகானது (அது ஒரு கனாக்காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம்). இரண்டாவது படம் எப்படிப் பார்த்தேன் என்று நினைவினில்லை. மூன்றாவது படம் வெள்ளி மாலையில் இங்கு திரையங்குகளில் வந்திறங்கியபோது, அண்ணாவின் மகனோடும் (கீர்த்தி), நண்பனோடும் பார்ப்பது என்று முடிவுசெய்து வெளிக்கிட்டோம். ஆனால் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கு ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் எல்லாக் காட்சிகளும் நிரம்பிவிட்டிருந்தன். இணையத்தின் ஊடாக பதிவு செய்து போயிருக்கலாம் என்றாலும், குறித்த நேரத்திற்குப் போவதில் வல்லவர்கள் என்பதால், அப்படிப் பதிவு செய்து போக நான் பிரியப்படவில்லை.

என்றாலும் இன்று (வெள்ளி) ஸ்படைர் மான் பார்க்காது வீட்டிற்குத்திரும்புவது எமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்து நகரின் வெவ்வேறு திசைகளில் இருந்த மூன்று தியேட்டர்களுக்கு காரை விரட்டினோம். ஆனால் அங்கும் இருக்கைகள் நிரம்பிவிட்டிருந்தன. பின்னிரவுக் காட்சிகளுக்குப் போயிருக்கலாமென்றாலும் அண்ணாவின் மகன் நித்திரையாகிவிடுவான் என்பதால் நாளை போவோமென திரும்பி வந்திருந்தோம்.

இனியென்ன செய்வது? கீர்த்தியை வீட்டில் இறக்கிவிட்டு, இவ்வெள்ளியை எப்படிக் கழிப்பது என்று நானும் நண்பனும் நினைத்தபடி, வருடமொன்றுக்குப் பின்பாக -manualவாக- காரைக் கழுவிக்கொண்டு, வளாக நண்பர்கள் சிலரை அழைத்தோம். சரி, இன்று Toronto (Raptors) Vs New Jersey (Nets) basketball playoff game போகிறது அதையாவது பார்ப்பமென்று ஒரு loungeற்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கினோம். வழமைபோல நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோமோ அந்த அணி தோற்றுப்போகும் என்ற 'விதி'யிருப்பதால் Raptors playoff ஆட்டத்திலிருந்து (4-2) இல்லாமற்போயிருந்தார்கள். இந்தமுறையாவது சிலவருடங்களுக்கு முன்புவரை நானிருந்த/எனக்கு மிகப்படித்த நகரமாகிய ஒட்டாவாவின் ஹொக்கி அணியாவது (Ottawa Senators) stanley cup ஐ வெல்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் பாலிப்பாராக.

இவ்வாறாக, chicken wings ஐயும், french fries ஐயும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு நண்பர்கள் நாம் நனவிடை தோய்ந்துகொண்டிருந்தோம். நனவுகளை இன்னும் கொஞ்சம் அழகாக்க தண்ணியை வித்தியாசமான வர்ணங்களில் அவ்வப்போது mix பண்ணிக்கொண்டிருந்தோம். மற்றப்பக்கம் சற்று இருட்டான dance floorல் DJ spin பண்ணத்தொடங்கியிருந்தார். Ne-Yoவும், Casseyயும் கிறங்கலான குரல்களில் பாடிக்கொண்டிருக்க, 'இப்படி சின்னப்புள்ளத்தனமாய் பாடலாமா' என்று 50Centம், Jim Jones வந்து அடிக்கடி அவர்களை அதட்டிக்கொண்டிருந்தார்கள். பதின்மங்களை அப்போதுதான் தாண்டியவர்கள் என்று நினைக்கத்தக்க பெண்கள் சிறகுகளை விரித்து dance floorல் high highயாய் பறக்கத்தொடங்கியிருந்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆடமுடியவில்லையே என்று - மனசால் இப்போதும் பதின்மத்தில் இருந்தாலும் ஆண்டுகளில் அதைத்தாண்டி எங்கையோ தூக்கியெறியப்பட்ட என்னைப்போன்றவர்கள்- வயசை உயர்த்திக்கொண்டிருக்கும் கடவுளை இரண்டு நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டு, பக்கத்திலிருந்த wing machine
ல் பிட்ஸாவும், சிக்கினும் வாங்கி வயிற்றுக்குள் அமுத்தினோம்.

வானம் மற்றும் மனம் மப்பாய் இருப்பது (போல) தோன்றிய எனக்கு அடுத்த நாள் கீர்த்தியை பகற்காட்சியிற்கு கூட்டிக்கொண்டுச்செல்வதாய் கொடுத்த வாக்குறுதி மேகத்தைப் போல மிதந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் சனிக்கிழமை விடிய 12.10 p.m எழும்பியபோது (நேரத்தில் பிழையல்ல), தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மூன்றாம் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தோழரொருவர் அதிகம் கவலைபட்டுக்கொண்டிருந்தார். மனுசருக்கு ஸ்பைடர் மான் பார்க்க முடியாதிருக்கின்றதெனும் முக்கிய பிரச்சினையிருக்க, உங்களுடைய பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வழமைபோல தத்துவப் புடலங்காயை அறிவைச் சீவிக்கொடுத்தபின், கீர்த்தியையும் நண்பனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப்போனால் அங்கே ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ரிக்கெட் கிடைக்கும் என்றார்கள். இன்றைக்கு தோல்வியுடன் திரும்பிப்போவதில்லையென மதிய உணவுப் பசிக்காய் pizza-pizzaவில் ஓடர்பண்ணிவிட்டு mallற்கு போய்க்கொண்டிருந்த பெண்களை patioவிலிருந்து sight அடிக்கத்தொடங்கினேன். திரும்பவும் என் மனவிசாரம் வேதாளம் போல மேப்பிள் மரத்தில் ஏறத்தொடங்கியது; எனக்கு மட்டும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது, நான் இரசிக்கின்ற பெண்களுக்கு மட்டும் ஏன் வயசு ஏறுவதேயில்லையென்று.

குறிப்பிட்ட நேரத்தை விட, ஒன்றரை மணித்தியாலம் பிந்தி படத்தை நாங்கள் பார்க்க ஆரம்பிக்க, படத்தின் இடைநடுவில் அண்ணா தொலைபேசி அழைத்து தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னேரம் வேறொரு நிகழ்வுக்குப் போகவேண்டியிருப்பதால் கெதியாய் கீர்த்தியைக் கூட்டிக்கொண்டு வாவென்று. உள்ளே ஸ்படைர் மான் தன்ரை girl-friendஐ propose செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையில்தான் இப்படி proposal செய்யமுடியாதிருக்கிறது படத்திலாவது பார்ப்பமென்றால் அதற்குமா இப்படி குறுக்கீடுகள் வரவேண்டும்? அரங்கைவிட்டு வெளியே போய் தொலைபேசியில் கதைத்தபின் உள்ளே வந்து பார்த்தால் வேறு காட்சியிற்கு கதை நகர்ந்திருந்தது.
-------------
எங்கே ஸ்படைர் மானின் கதையென்று கேட்கின்றீர்களா? மேலே நான் எழுதியதை வாசித்தபோது எப்படி உங்களுக்கு விசர் வந்ததோ அதைவிட இரண்டு மடங்கு விசர் எனக்கு அந்தப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. ஆகவே,நான் பெற்ற இன்பத்தை நீங்களும் ......!

இப்படியாக அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து pursuit of happynessஐயும், வடிவேலின் 'நகைச்சுவை கதம்பம்' என்ற டிவிடியையும் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
-------------
....எனினும் கீர்த்தியிற்கு படம் பிடித்திருந்ததாய்ச் சொன்னான். Meet the Robinsonsஐ இன்னும் கூடவாய் இரசித்தேனென்றான். TMNT பார்க்கவேண்டுமென்றான்.

குழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது.

Friday, March 09, 2007

பெண் பார்க்கப்போன நண்பர்களின் கதை

ஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காயப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இந்த வழக்கம் இருக்கின்றதா அல்லது வழக்கொழிந்துபோய்விட்டதா என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், நமது நண்பர்கள் பெண் பார்க்கப்போனால் எப்படியிருக்கும் என்று கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை சற்று நழுவவிட்டேன்.

இனி...............

கானா பிரபா:
பி: வாவென் மலையாளச் சேச்சியே...நானுன் பட்டியாய் காலம் முழுக்க இருப்பேன். உன் கொப்பர் பிடித்திருக்கா என்று கேட்டால்... கெதியாய் சொல்லடி..ஓமென்று.
பெண்: என்ன பட்டியோ....அது யாரு? ஆடு மாடுகளை அடைக்கிற பட்டியா உது?
பி: இல்லை நாய்.
பெ: என்னை நாயெண்டால் செருப்பைக் கழட்டி அடிப்பேன்.
(பிரபா மனதிற்குள்.....) ஆ...இவாவுக்கு மலையாளந்தான் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...இப்ப பார்த்தால் தமிழும் விளங்காது போல.
பெ: சரி உம்மடைபாட்டில் முழியை உருட்டாமல் இதைச் சொல்லும்..... நான் கேள்விப்படது உண்மையோ ...
பி:: என்ன கேள்விப்பட்டனீர்...?
பெ: இல்லை நீர் முந்தி யாரையோ ஒரு பெடிச்சியை வேலிப்பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்தனீர் என்றொரு கதை உலாவுகிறதே....உண்மையோ?
பி: ஆ... ஷ்ரேயா இதை உம்மட்டையும் சொல்லிப்போட்டாவோ?
பெ: அவா ஒன்டும் சொல்லவில்லை...உங்கை வலைப்பதிவுகளில் உதுதான் பெரிய நியூசாய் எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கினம்.
பி: அதொன்டும் பெரிய கதையில்லை....நான் முந்தி ரியூசனுக்குப் போகேக்கை, ரீயுசனுக்குப் பக்கத்து வீட்டிலை இருந்த ஒரு பெட்டை வேலிப்பொட்டுக்காலை என்னைப் பார்த்து அடிக்கடி விசிலடிப்பா... அது பத்தாது என்டு ஒருநாள் 'அலைபாயுதே கண்ணா' என்டெல்லோ என்னைப் பார்த்து பாடினவா...
பெ: அவா தன்ரை பாட்டில் பாடியிருப்பா உமக்கு உம்மைப்பார்த்து பாடினதாய் ஒரு நினைப்பு.
பி: கொஞ்ச நேரம் சும்மாயிரும்......இவா இப்படிப் பாடி என்னை நக்கலடித்தால் சும்மா விடமுடியுமோ..? அடுத்த நாள் அவா வேலிப்பொட்டுக்குள்ளாலை இருந்து எனக்கு விசிலடிக்க முன்னர், அவாவுக்கு விசிலடிக்க நான் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்...
பெ: ஓகோ அப்படியா..பிறகு...?
பி: யாரோ அங்காலை சரசரவென்று நடந்துவாற சருகுச் சத்தம் கேட்டுது....நான் உடனே உய் உய் உய்ய்ங்.. என்று நல்ல சத்தத்தோடு விசிலடித்தேன்....ஆனால்....
பெ: என்னப்பா நடந்தது?
பி ஆனால் நடந்துவந்தது அவாவில்லை, அவாவின்ரை தேப்பன்...அந்தாள் வந்து வேலிப்பொட்டுக்குள்ளாலை ஒணான் எட்டிப்பார்க்கிறமாதிரி பார்த்திச்சு.
பெ: பிறகு...?
பி உமக்கு வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுகிறது கைவந்த கலை போல. பிறகென்ன...அவர் துரத்த நான் ஓட....நான் ஓட அவர் துரத்த...இணுவிலிருந்து ஆரம்பித்து கோட்டை முனியப்பர் கோயிலைக் கடக்கும்வரை என்ரை மூச்சு எனக்குச் சொந்தமாய் இருக்கவில்லை.

பிரபாவிற்கு பிடித்த படங்கள்: 'ஜெயம்' ரவி மலையாளச் சேச்சிகளுடன் நடித்த -காதல் ரேஸிங்- படங்கள்.
-----------------

பெயரிலி:
காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில் உன்னைக் கண்டபொழுது நான் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கங்கள் எல்லாம் நீட்சேயாக நீட்சியடைந்து மார்க்வெஸ் நாவலில் கடைசிப்பக்கமாய் முடிந்துகொண்டிருக்கையில் உன் விரல்களிலாத காலில் வாசனையாக அலைந்துகொண்டிருந்த காற்சங்கிலியின் கோழிக்கறி சுவையில் நான் மயங்கிய அந்தக்கணமே தண்டவாளத்தில் நசிந்துபோய்க்கிடந்த பச்சையமில்லாத காளான் முனையாய் காதல் என் நெஞ்சில் வந்து குத்தத்தொடங்குகையில்....
என்னப்பா தண்ணி வேணுமோ...முற்றுப்புள்ளியில்லாது பேசினால் இப்படித்தான் மூச்சுவாங்கும்...
உனக்கெங்கே விளங்கிப்போகின்றது எனது அவதி? எனது உயிர் கண்டி தலதா மாளிகையின் புத்தரின் தந்தப்பல்லிலும், கோணமலை இராவணன் வெட்டிலும், ஷங்காய் ஷம்பெயினிலும் தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் யுகங்களைத் தாண்டிய.....
போதும் போதும் உங்கடை அலம்பலை நிறுத்துங்கோ. நான் இப்பவே உங்களைத் திருமணஞ்செய்ய ஓமொன்று சொல்கின்றேன்..
ஆகா பெண்ணே...நான் கவித்துவமாய் உரையாடியது எல்லாம் விளங்கிவிட்டதா கண்ணே?
இல்லை...இப்படியான கொடூரத்தை இன்னொரு பெண்ணும் கேட்டு தற்கொலை செய்யக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காய் ஓமொன்று சொன்னேன்.

பெயரிலிக்கு பிடித்த படங்கள்: Bombay, கில்லி, ரன்.
-----------------------

சுகன்:
புத்தனின் தாழ் பணிந்து காதல் வந்தனம் சொல்கிறேன் கண்ணே!
என்ன புத்தரோ...அவரே மனுசி வேண்டாம் என்று வீட்டைவிட்டு ஓடிபோனவர்...எனக்கும் அந்த நிலையா எதிர்காலத்தில் வரப்போகிறது?
புத்தரை புத்தராய் பார்க்காதே; புத்தர் என்பது புத்தராயுமில்லை..புத்தராய் இருக்காதது புத்தருமில்லை..
என்னப்பா ஒரே குழப்புகிறியள்....சரி கொஞ்சகாலத்துக்கு முன் முஸ்லிமாய் மாறப்போகிறியள் என்டெல்லோ கதை வந்தது...
சா...மனுசர் நிம்மதியாய் ஒருவிசயம் செய்ய இவங்கள் விடமாட்டாங்கள்...உதை யார் உமக்குச் சொன்னது?
நீங்கள்தானே மதம் கடவுள் என்டு ஒன்டும் வேண்டாம் என்கிறனியள்...பிறகேன் மதம் மாறப்போகிறேன் ...புத்தர், அல்லா என்று ஓடித்திரிந்துகொண்டிருக்கிறியள்..?
கேட்டாயடி ஒரு கேள்வி என் செல்லக்கிளியே ..இப்ப பாரும்... மதமில்லை என்று சொல்கிறதும் ஒன்டுதான்... அல்லது எல்லா மதங்களிலையும் இருக்கிறன் என்டு சொல்கிறதும் ஒன்டுதான்.
ஆ... இவர் திருப்ப குழப்பத்தொடங்கிவிட்டார்.
இப்ப என்ன சொல்கிறீர்?
உங்களைக் கலியாண்ஞ்செய்ய எனக்கும் சம்மதம்தான்....ஆனால் முள்முருங்கையை நடுகிறதுக்கு பதிலாய் எலுமிச்சை மரம் நடச்சொல்லவேணும்
ஏன்...? எதற்கு...?
பின்ன, உங்களுக்கு அடிக்கடி பித்தம் வர அதைத் தெளிவிக்க, நான் தேசிக்காய் கடையிலை வாங்கி கட்டுபடியாகுமோ?

சுகனுக்குப் பிடித்த படங்கள்: இராம நாராயணன் இயக்கிய அம்மன் படங்கள்.
-------------------

சயந்தன்:
இதென்ன பொம்பிளை பார்க்க வந்திருக்கின்றீர்....மனுசர் ஒருத்தரையும் காணவில்லை..ஒரே நாயும் பூனையுமாய் இருக்கிறதே.
அதுவா நான், நாய் பூனை படங்கள் என்னுடைய வலைப்பதிவில் போட்டவுடன் பூனை பாட்டி, பூனை தாத்தா பூனை மாமா, பூனை அத்தை என்று கனபேர் என்னோடு உறவாகிட்டினம்.
ஓகோ அதுவா... அது சரி யார் உந்தப்பூனை? எங்களைப் பார்க்கப்பிடிக்காமல் வாசற்பக்கம் ஜயப்பனுக்கு மாலை போட்டதுமாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறது?
அது வேறு யாருமில்லை வசந்தன்தான்..அவருக்கு பொம்பிளையள் என்டாலே பிடிக்காது.
அப்படியோ?
அதைவிடும் பொம்பிளை பார்க்கிற சம்பிரதாயத்திலை பாட்டுப்பாடவேண்டும் என்டுவினம். எனக்கொரு பூனைப்பாட்டு பாடிக்காட்டும்.
பூனைப்பாட்டோ?
ஓமோம்..ஏதோ ஒரு படத்தில் நமீதா 'மியாவ் மியாவ்' என்டு செக்ஸியாய் ஒரு பாட்டுப்பாடுவாவே...அதைப்பாடும்.
(அந்தப்பெண் பார்க்கின்ற புலிப்பார்வையில், சயந்தனும் அவரது பூனைப்பட்டாளமும் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்....)

சயந்தனுக்குப் பிடித்த படங்கள்: Cat woman, 101 Dalmations
--------------------

ஷோபா சக்தி:
'ஷோபா ஷோபா'
இஞ்சை பாருங்கோ என்னுடைய பெயர் ஷோபா இல்லை.
ஷோபாவின் படங்கள் பார்த்ததிலிருந்து எனக்கு எல்லோரும் ஷோபாவாய் தெரிகின்றார்கள். நீரும் ஷோபாதான்.
இந்தாளுக்கு பித்தம் கூடிப்போய்விட்டது...உதுக்குத்தான் சொல்கிறது...அடிக்கடி சாருவோடு கதைக்கவேண்டாம் என்டு.
ஷோபா ஷோபா நீ எங்கையடி போனாய்?
இதென்ன? சோபா செட்டிலை இருந்துகொண்டு ஷோபா எங்கையடி போனாய் என்டால்?
ஷோபா ஷோபா நீயின்றி என் ஒரு அணுவும் அசையாது...
இஞ்சை பாருங்கோ...நீங்கள் இப்படி திருப்பத் திருப்ப ஷோபா ஷோபா என்டு கூப்பிட பக்கத்து வீட்டு ஷோபா நாய்க்குட்டி கூட இங்கை வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கிது.
ஷோபா ஷோபா
ஜயோ என்னால் தாங்கமுடியாதிருக்கிறது...நான் அழப்போகிறன்.
(என்று கூறிவிட்டு அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழுகின்றார்...)
ஷோபாசக்தியோ 'ஷோபா, ஷோபா' என்று -குணா படத்தில் கமல் 'அபிராமி அபிராமி' என்று பீலிங்காய் கூப்பிடுகின்ற மாதிரி- அரற்றியபடி பெண்ணின் வீட்டைவிட்டுப் புறப்படுகின்றார். 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல' என்று பாடியபடி, அடுத்து 'பெண் பார்க்கப்போன சோகக்கதை' யை எழுதத்தொடங்குகின்றார்.

ஷோபா சக்தியிற்கு பிடித்த படங்கள்: முன்பு ஷோபா நடித்த படங்கள் அனைத்தும்... இப்போது -எஸ்.ரா, 'கொரில்லா' புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்ததிலிருந்து- ரஜினியின் அனைத்துப் படங்களும்.
--------------------------

சோமிதரன்:
நீர் இப்படி சிரிக்கிறதை நான் படம்பிடித்தால் ஒரு ஈழத்து ஜஸ்வர்யா உலகிற்கு கிடைப்பா...
சும்மா லொல்லுக்கதை கதைக்கவேண்டாம்
நீர் உரையாடுகிற விதம் அப்படியே நந்திதா தாஸை நினைவுபடுத்துகிறது.
சனியன்...! இந்த சாறி என்ரை உடம்பிலை நிற்கமாட்டேன் என்கிறது
அப்ப, நான் விஜய் அசினுக்கு 'சிவகாசி'யிலை மடிசார் புடவை கட்டிவிட்டதுமாதிரி உமக்கு கட்டிவிடவோ?
எங்கடை வீட்டில வளர்க்கிற நாயிற்கு பத்து வேட்டைப்பற்கள் இருக்கிறது
நாயிற்கும் சாறிக்கும் என்ன தொடர்பு?
இல்லை நீர் சாறி கட்டிவிடப்போகின்றேன் எண்டனீர்....அதுக்கு நான் உமக்கு நன்றி செலுத்தவேண்டும்தானே...
('சோமி', 'சோமி' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது)
யாரப்பா அது?
அது டிசே, ஏதோ 'சே'யைப் பற்றி கதைக்கோணுமாம்...கெதியாய் வரட்டாம்..
சேயைப் பற்றிக் கதைக்கபோகிறியளோ..இல்லை தவறணைக்குப்போய் கள்ளுக்குடிக்கப்போகிறியளோ?
இரண்டுமே எஙகளுக்கு போதை தாற விடயந்தான்.
நாசமாய்ப் போவாங்கள்...கள்ளுக்குடிக்கின்றதென்றால் போய் கள்ளைக் குடியுங்கோவன்...ஏன் எங்கடை நேரத்தை வீணடிக்கிறியள்?

(சோமி: இந்த விசரன் டிசேயோடு இருந்தால், தனக்கு கலியாணம் வாழ்க்கையிலை நடக்காது என்டு திட்டியபடி கள்ளுக்கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்குகின்றார்)

சோமிக்குப் பிடித்த படங்கள்: அஸின், ஜஸ்வர்யா சாறி கட்டி நடித்த அனைத்துப் படங்களும்.
-----------------

வசந்தன்:
இஞ்சைப்பா, நீங்கள் புட்போல் விளையாடுகிறபோதே எனக்கு உங்களில் ஒரு கண்.
என்ன ஒரு கண்ணோ...அப்ப எங்கை உம்மடை மற்றக்கண்?
அதுவும் ஒரு நாள் நீங்கள் புருஸ்லி மாதிரி பாய்ந்து ஒரு கோல் அடித்தியளே...அண்டைக்கு மயங்கின நான் இன்னும் எழும்பவில்லை
உதென்ன விசர்க்கதை...புட்போலுக்கும் புருஸ்லிக்கும் என்ன தொடர்பு.... பேய்க்காட்ட வேண்டாம்.
இதைக்கூட மறந்திட்டீங்களா...ஒருநாள் எனக்கு கள்ளமாய் விளாங்காய் பிடுங்கிக்கொண்டு வந்து வெட்கப்பட்டுக்கொண்டு தந்ததை....
சும்மா சொறிக்கதை கதையாதையும்.
இப்ப சொல்லுங்கோ... என்னைக் கலியாணம் செய்ய விருப்பமா இல்லையா?
சாத்தான்கள் எல்லாம் பெண்கள் வடிவில் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகின்றனவே...பரலோகத்திலிருக்கும் பரமபிதாவோ என்னைக் காப்பாற்ற மாட்டீரா?
இப்ப நீர் இப்படி அழுது குழறுகிறீர்.....என்னைப் பிடிக்காவிட்டால் ஏன் இங்கை வந்தனீர்...உந்தச் சந்தியில் இருக்கின்ற சேர்ச்சிற்குப் போய் பாதராகி இருக்கலாமே?
ஒமோம்...இங்கை வரமுன்னர் அங்கை போய்விட்டுத்தான் வாறன்.
பிரமச்சாரியாக இருக்கப்போகின்றீர் என்றால் ஏன் என்னைப் பெண்ணு பார்க்க வந்தனீர்?
இல்லை சேர்ச்சில் ஒரு கன்னியாஸ்திரியும் இல்லை...உம்மை ஒரு கன்னியாஸ்திரீயாக ஆக்கவெல்லோ வந்தனான்.
அம்மா அம்மா இந்த ஆள் ஒரே கெட்டவார்தைகளால் என்னைத் திட்டுகின்றார்
(அந்தப்பெண்ணின் அழுகுரல் கேட்டு அவரின் தாயார் ஓடிவந்து, அரிசி புடைக்கிற சுளகால் வசந்தனைச் சுழற்றி சுழற்றி அடிக்கத் தொடங்குகின்றார்.)

வசந்தனுக்குப்பிடித்த படங்கள்: தேவதாஸ், சலஙகை ஒலி, லவ் ரூடே போன்ற தோல்வியில் முடியும் காதற்படங்கள்.
---------------

(ஒரளவு புரிதல்கள் உள்ள நண்பர்களையே மேலே குறிப்பிட்டிருக்கின்றேன். எனினும் எவரையேனும் தனிப்பட்டுக்காயப்படுத்தின் தெரியப்படுத்தவும். அந்தப்பகுதியை அகற்றிவிடுகின்றேன்.)

Saturday, February 10, 2007

வின்ரரில் நயாகரா

வசந்தகாலத்தில் எப்படி இருந்த நயாகரா குளிர்காலத்தில் இப்படி ஆயிற்றே?

a1


airport 087

a4



a7


a12


a9


என்ன கொடுமை இது சரவணா?