Friday, March 03, 2006

கே.டானியல்

கே.டானியல் ஈழத்து பஞ்சம இலக்கியங்களின் முன்னோடியாக மட்டுமில்லாது, தமிழ்நாட்டு தலித்திலக்கியத்தின் பிதாமகராகவும் பல தலித்துக்ககளால் கொண்டாடப்படுபவர். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில், பெண் கவிஞர்கள் குறித்துப் பேசப்படுகின்றபோது, தொடர்ந்தும் ஈழத்துப் பெண்கவிஞர்களின் பங்களிப்பு, பல படைப்பிலக்கியவாதிகள் மற்றும் விமர்சகர்களால் மறைக்கப்படுவதுபோன்று, தமிழக தலித்துக்கள் கே.டானியலை இருட்டிப்புச் செய்து, தங்களை மட்டும் முன்னோடியாக நிலை நிறுத்திய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. ஆறுதல் தரும் விடயமும் கூட.

சென்ற வருடம் அ.மார்க்ஸ் தொகுத்த, கே.டானியனின் கடிதங்களை வாசித்தபோது ஒரு எழுத்தாளருக்குரிய டானியலின் ஆதஙகங்களும், கனவுகளும், அலைவுகளும், சலிப்புக்களும் வெளிப்படையாகத் துலங்கின. தற்போது அடையாளம் பதிப்பகம், கே.டானியலின் ஆறு நாவல்களையும் ஒரு முழுமையான தொகுப்பாக கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

'தகப்பன் கொடி' போன்ற தமிழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாவலையும், பல நல்ல கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அழகிய பெரியவன் கே.டானியலின் படைப்புக்கள் பற்றி இப்படி எழுதுகின்றார்....

'மூத்த தலித் எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் ஆறு நாவல்களையும் ஒரே தொகுப்பாக "அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெரிய, தடிமனான புத்தகம். நேர்த்தியான பதிப்பு. இந்த ஆறு நாவல்களில் "அடிமைகள்', "கோவிந்தன்' ஆகிய இரு நாவல்களும் அடிமைகளின் வாழ்வைச் சொல்வதால் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகின்றன.

சாதியக் கொடுமைகளுடன் அடிமை முறையும் இணைந்தேதான் தொடக்கக் கால இந்தியச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆண்டை அடிமை முறை என்பது, நேற்று வரை இருந்த, இன்றளவும் வேறு வடிவங்களில் தொடருகின்ற ஓர் அடிமை முறையே. காளைக்குப் பதிலாக அடிமையான கீழ்ச் சாதிக்காரரை நுகத்தில் வைத்துப் பூட்டி உழுத கதைகளை கேரளத்தின் வரலாற்றில் படிக்க முடிகிறது. தமிழகத்தில் நிலவிய அடிமை முறைகளைப் பற்றி ஆ. சிவசுப்பிரமணியத்தின் ("தமிழகத்தில் அடிமை முறை') நூலின் வாயிலாக விரிவாக நாம் அறியலாம்.

கருப்பர்களின் அடிமைத்தனத்தை விடவும் இந்திய சாதிமுறை மிகக் கொடூரமானதென்கிறார் அம்பேத்கர். சாதியக் கொடுமைகளோடு, அடிமை முறையின் துன்பங்களும் இணைந்து, இந்திய தலித் ஒருவன் வாழ்வு கற்பனைக்கெட்டாத நரக வாழ்வாக நிலைப்பெற்று இருந்திருக்கிறது. இந்த வாழ்வை தமிழகத்தில் எழுதப்பட்ட எந்த தொடக்கக் கால நாவலும், கதையும் பதிவு செய்யவில்லை. இன்றளவிலும்கூட வெளிவந்திருக்கும் படைப்புகள், தலித் அடிமை முறையின் வலுவான வரலாற்றுப் பின்னணியையும், கதைக்களனையும் கொண்டு எழுதப்பட்டதாக இல்லை. ஆனால், கே. டானியலின் நாவல்கள் இதைச் செய்திருக்கின்றன.

"அடிமைகள்' நாவல் 1890 முதல் 1956 வரைக்குமான அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலவெளியில் நடைபெறும் நிகழ்வுகளைச் சொல்கிறது. யாழ்ப்பாணம், அதன் கிராமப் பகுதிகள் ஆகியவற்றில் நிகழும் சமூக மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.

"சாதிப் பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்காத தமிழர்களின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பது, எனது துணிவான முடிவு. இது சரியானதே. அதனாலேயே நான் இந்த இயல்பான தமிழனின் வாழ்க்கையை இலக்கியம் ஆக்குகிறேன்' என்று கருதும் டானியல், அதற்கு ஏற்ற மாதிரியே சாதியின் அத்தனை சலுகைகளையும், மேன்மைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கிற ஆதிக்க சாதித் தமிழர்களின் வாழ்வை மிக நெருக்கமாக நின்று பார்க்கும்படி செய்கிறார்.

வேலுப்பிள்ளை, சீதேவி நாச்சியார் ஆகியோரின் வாழ்வை முன்வைத்துக்கொண்டு கிளை கிளையாகப் பிரிந்து பரவுகிறது நாவல். சீதேவியின் அப்பா யாழ்ப்பாணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் புகழ்ப் பெற்ற புத்தூர் பல்லக்கு தலித் தம்பி. வேலுப்பிள்ளையின் தந்தையோ யாழ்ப்பாணம் கோட்டையில் வேலை செய்தவர். இந்த வகையான செல்வாக்கு மிகுந்த குடும்பங்களுக்கிடையிலே நடக்கும் திருமணத்துக்கு, ஓர் அடிமைக் குடும்பம் சீர்வரிசையாகத் தரப்படுகிறது. அடிமைக் குடும்பங்களை மணப்பெண் சார்பாக சீர்வரிசையாகத் தருவது என்பது, அப்போது இருந்த வழக்கம். அப்படி சீதேவி நாச்சியாருக்குத் தரப்படும் அடிமைகளான இத்தினி, எல்லுப்போலை ஆகியோடமிருந்து தொடங்கி சுமார் 12 கிளைக் கதைகளாக இருக்கிறது நாவல்.

இந்த நாவலை இரு பகுதிகளாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம். அக்காலத்திலேயே ஈழத்தில் இருந்த சாதிய நடைமுறைகள் கட்டுப்பாடுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் இது ஒரு பகுதி. இந்தக் கொடுமைகளை எதிர்த்திடும் தலித்துகளின் செயல்பாடுகள் இது மற்றொரு பகுதி. வெறுமனே தலித்துகளின் அவலங்களை மட்டுமே சொல்லிவிட்டு நிற்கவில்லை கே. டானியலின் நாவல்கள். அவலங்களின் சித்தப்புக்கும் இணையாக தலித் மக்கள் காட்டிய எதிர்ப்புகளையும் அது பதிவு செய்கிறது. இது டானியலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம் ஆகும். இந்நாவலில் வரும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் வலுவாக தமது எதிர்ப்புணர்வைக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர். தமது கணவர்களை எதிர்த்துப் பேசி, சாதிய இழிவிலிருந்து அவனை தப்பும்படி தூண்டுகிறவர்களாக இருக்கின்றனர்.

ஆதிக்க சாதியர்க்குத் தொண்டூழியம் புரிபவர்களாக கோவியக்குடிகள், மாராயக் குடிகள், பள்ளக்குடிகள், நளக்குடிகள் பண்டாரம், கட்டாடி, பரியாரி என்று வகை வகையான அடிமைச் சாதிகள் நாவலில் குறிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து வேலையை, உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சாதியினர், அவர்கள் தடைகளை மீறுகையில் கொல்லவும் செய்கின்றனர். சுயநலம் கருதி சாதியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி காயம் சாதித்துக் கொள்கிறவர்கள், வகை வகையான கட்டுப்பாடுகளைப் போட்டு இறுக்கியும் வைக்கின்றனர்.

சாதி இந்துவான தன் ஆண்டையுடன் "கோச்' வண்டியில் உட்கார்ந்து போகும் அடிமை எல்லுப்போலை வெட்டிக் கொல்லப்படுகிறான். கோச் வண்டியில் சாதிக்காரர்கள் மட்டும்தான் ஏறலாம். யாழ்ப்பாணத்துக்கு ரயில் வருகிறபோது, அதில் எல்லா சாதியினரும் உட்கார்ந்து பயணம் செய்வார்கள் என்பதற்காகவே சாதி இந்துக்களால் மறியல் செய்யப்படுகிறது. தலித்துகள் கோவிலில் நுழையவும், தண்ணீர் எடுக்கவும், தெருவைப் பயன்படுத்தவும் தடை இருக்கிறது. மருத்துவர்கள் அவர்களைத் தீண்டி நாடி அறிவதில்லை. சாதி இந்துக்களின் தெருவில் நடக்கிறபோது காவோலை பிடித்திழுத்தபடிதான் நடக்க வேண்டும். இப்படி எண்ணற்ற சாதியக் கட்டுமானங்கள். இதைத் தமது திறத்தாலும், திறமையாலும் தலித்துகள் மீறுகிறபோது கும்பிடுகிறார்கள் சாதி இந்துக்கள்.

நாவலில் வரும் ஆட்டிறைச்சிப் பரியாரியும், கயித்தான் துரும்பனும், இத்தினியும், பண்டாயன், அண்ணாவி செல்லன் போன்ற தலித் பாத்திரங்கள் வலுவான எதிர்ப்புகளை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதிக்கு எதிராகக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர்.

தலித்துகளின் களிப்பு, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை மிக இயல்பாக எழுதிப் போகிறார் டானியல். ஈழத்தைப் புரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக இந்த நாவல் இருக்கிறதென்று கருதுகிறேன். இந்த நாவலை வாசிக்கும் முன்பாக தொலைக்காட்சியில் பணியாற்றும் ஈழத் தமிழர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழகத்தின் கிராமங்களுக்குப் போகிறபோது, சேரியும், ஊருமாகப் பிந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்ததாகச் சொன்னார். ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதென்றார். டானியலின் நாவல்கள் படம் பிடிக்கும் மிகச் சிக்கலான, கடுமையான சாதிய முறையைக் கொண்ட ஈழம் இன்று சாதியற்றதாக மாறிவிட்டிருக்கிறது என்பதைக் கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிசமாகவே அங்கு சாதி ஒழிக்கப்பட்டு விட்டிருந்தால், அதைவிடப் பேரானந்தம் வேறில்லை.'

(நன்றி: கீற்று & தலித் முரசு)