Monday, December 26, 2005

ட்சுனாமி நினைவுகூர்தலும் பின்நோக்கிய சில பார்வைகளும்



இன்று ஸ்காபுரோ நகரின் நகரசபை திறந்தவெளி அரங்கில் சென்றவருடம் நிகழ்ந்த ட்சுனாமியின் அகோரத்தை நினைவுகூருதல் நடைபெற்றது. மிக உக்கிரமான குளிரினூடும் (பூஜ்ஜியத்துக்கு கீழே பத்துவரைக்கு இருந்தது என நினைக்கின்றேன், குளிர்க்காற்று வேறு) நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதும், அதில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்கல்லூரி/பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடப்பட்டது.

கனடாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கனடீய மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருந்ததும், அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இராணுவத்தின் தாக்குதல்களைத் கண்டித்து தமிழ்மாணவர்களுக்காய் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



இன்னும், கனடா அரசாங்கம் ட்சுனாமிக்காய் அறிவித்த பணம் போய்ச்சேர்ந்து உருப்படியான விசயங்கள் எதுவும் ஈழத்தில் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அதையே மாணவர் ஒருவரும் பேச்சில் தெரிவித்திருந்தார். ஆக்ககுறைந்தது (அடுத்த மாதம் 23ந்திகதி வரவிருக்கும்) தேர்தலுக்கு வாக்கு கேட்க வரும் கட்சிக்காரர்களிடம் இதுகுறித்து கேள்வியைக் கேளுங்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டதை அனைவரும் கவனத்தில் கொள்ளலாம்.



தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டாமல் இருப்பதோ, அல்லது இங்குள்ள அரசியலில் எந்தப்பங்களிப்பும் செய்யாமல் இருக்காதவரை எமது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். கிட்டத்தட்ட இதைவிட இன்னும் கொடும் குளிரில் சில ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். பெப்ரவரி நான்கு எமக்கான சுதந்திர நாள் அல்ல என்று உயர்கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாள்களில் டவுன்ரவுண் ரொரண்டோவில் மிக நீண்ட ஊர்வலத்தில் நாமெல்லோரும் கத்திக் கத்தி குரல்கொடுத்தபடி நெடும் வீதிகளில் நடந்தும் எதுவும் உருப்படியாக நிகழ்ந்ததில்லை (எனக்கு அதன் நீட்சியில் மூன்றுநாள்கள் காய்ச்சல் வந்து பாடசாலைக்கு போகமுடியாதிருந்ததுதான் மிச்சம்). அதுபோல், பொங்குதமிழ் முதலாவது நிகழ்ச்சி யாழில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்தபோது, அதை நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிரிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று கனடீய அரசாங்கத்திடம் வேண்டி குளிருக்குள் ஒட்டாவாவில் இருந்த வெளிவவிவகார அமைச்சர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றோம்.



கிருஷாந்தி பாலியல் வன்புணரப்பட்ட சம்பவம் வெளியே வந்தபோது, கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்த ஒட்டாவாவில், மாணவநண்பர்கள் பேரணிக்காய் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைத் திரட்டியிருந்தார்கள். எந்த சமூகத்தின் மாணவர்களும் கனடாவின் தலைநகரில் இப்படியான ஒருவிடயத்தைச் செய்திராதபோது மிகுந்த தெம்புடனும், நம்பிக்கையுடன் அதைச் செய்திருந்தோம். குளிருக்குள் பலர் மயங்கி விழுந்தது காணாது என்று கிருஷாந்தியை அறிந்த அவரது தோழிகள் சிலரும் மேடையில் பேசும்போது உணர்ச்சிகளின் நிமிர்த்தம் மயங்கிவிழுந்ததையும் பார்த்துக்கொண்டே பாராளுமன்றத்தின் முன் குழுமியிருந்தோம். யாரோ ஒரு பெயர் தெரியாத அலுவலகரை அனுப்பி எமது மனுக்களை பெற்றுக்கொண்டபோது ஆர்ப்பாட்டங்கள் இந்த மேல்நாட்டு அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்ற உண்மை எனக்கு முதன் முதலில் விளங்கியது. எனக்குத் தெரிந்து, இந்த நிகழ்வை நடத்த பல நண்பர்கள் ஒரு செமஸ்டர் கல்வியையே தாரை வார்த்திருந்தனர். இந்நிகழ்வுக்காய் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தொலைதூரங்களில் இருந்து பயணித்து எல்லாம் மாணவ நண்பரகள் வந்திருந்தார்கள்.

அனைவரின் உழைப்பும் வீணாய்ப்போனதை, எமது குரல்கள் சப்தமின்றி அடங்கிப்போனதை, அழுத பெண்களின் கண்ணீர்த்துளிகள் பெய்தபனிக்குள் உறைந்துபோனதை, எதுவும் செய்யவியலாத இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதே அரசாஙகமும், கனடீய பத்திரிக்கைகளும், ஒரு கோடைகாலத்தில் 50ற்கும் குறைவான சிங்கள மக்கள் கலந்துகொண்டு, புலிகள் யாழ் வாசலில் நின்று ஆமிக்கு அடியடியென அடித்தபோது யாழில் இருக்கும் இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அலறியபோது, ஒட்டாவாவின் பாராளுமன்றத்தின் உள்ளேயேயும் எதிரொலித்தது. பத்திரிக்கைகள் சில முன்பக்கத்தில்கூட பெரிய செய்தியாக ஆர்ப்பாட்டச் செய்தியைப் பிரசுரித்து, தமது 'நடுநிலைமையை' எமக்குத் தெரியப்படுத்தின. அதிலிருந்து அதிகாரம் உள்ளவரின் குரல் மட்டுந்தான் அம்பலத்தில் ஏறும் என்ற உண்மை உறைக்கத்தொடங்கியது.



(இயலுமானவரை பொங்குதமிழ், தமிழர் நாள் என்று இன்னபிற மாணவர்கள் வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற்றினாலும்) என்னைப்பொறுத்தவரை, நாம் கனடீய அரசியல் பங்குபெறாதவரை, எமது வாக்குகளுக்கு வலு உண்டென்று நிரூபிக்காதவரை உருப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

அண்மையில் ஸ்காபுரோ நகரின் ஒரு எம்.பி.பியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு, பத்திரிகையில் வந்த அரசாங்க அறிவித்தலில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் மட்டுமே விபரம் வந்திருந்தது. ஆகவே அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளின் பலத்தை நிச்சயம் உணர்வார்கள் என்றபடியால் எமது இருப்பையும் தேவையும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் தெளிவாக வெளிப்படுத்தலாம்; வெளிப்படுத்தவேண்டும். கனடீய அரசால் அறிவிக்கப்பட்ட ட்சுனாமி நிதி எங்கே போனது என்ற கேள்வியுடன் வரும் தேர்தலை நாம் எதிர்நோக்குவது மிகச்சிறந்தது, அதுபோல பிற உள்ளூர் விடயங்கள் கூடவே.

மற்றும்படி ட்சுனாமியால் பாதிக்கபபட்டவர்களுக்கும், இழப்புக்களால் உள/உடல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களுக்கும் தருவதற்கு நம்பிக்கை வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பதுதான் அவலமானது. கொலை செய்யும் கலாச்சாரம், பாலன் பிறக்கும் தேவாலயத்தின் உள்ளே கூட நீண்டுவிட்டதன்பின் எதைப் பேசித்தான் என்ன பயன்?

ஒருவருக்கு கடிதம் எழுத உட்கார்ந்தபோது, யோசப் பரராஜசிங்கத்தின் கொலையை இணையத்தில் அறிந்த குழப்பத்தில், அவருக்கு இப்படி எழுதினேன்....

'இந்தக்கணத்தில் வாழ்வு என்பது, எனது அறையிலிருந்து பார்க்கையில் வெளியே வெறிசோடிப்போயிருக்கும் தெருவைப்போல வெறுமையாகவும் மிக மிக நிசப்தமாகவும் இருக்கிறது.'

அதற்கு அவர் எழுதிய பதிலைத்தான் எனக்கான குரலாக ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே விட்டுப்போகின்றேன்....

'சமூகத்தின் நிசப்தமோ, பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுக்கிறது' என்ற வரிதான் உங்களதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதே வெறுமை என்னையும் தாக்கியதுண்டு. ஆனாலும் வசந்தங்கள் வரும் நிச்சயமொருநாள்... என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய நாம்? சாளரத்தினருகே அமர்ந்து விழிவிரித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர.'

Monday, December 19, 2005

வாசிப்பு

இங்கே அழுத்தவும்

குறிப்பு: எனது மற்ற்த்தளத்தில் காலையில் பதிந்தது இன்னும் தமிழ்மணத்தால் உள்ளெடுக்கப்படவில்லை. இந்தத்தளமாவது தமிழ்மணத்திரட்டியில் இயங்குகின்றதா என்று பார்ப்பதற்காய்.

Saturday, December 10, 2005

சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள்

File0001
அற்றம் (attamm@gmail.com)

அற்றத்தின் இரண்டாவது இதழில், மாயா ஆஞ்ஜலோவின் நேர்காணல், கவிதைகள், அவரைப் பற்றிய பிரதீபாவின் கட்டுரை என்பவை சிறப்பானவை எனலாம். முக்கியமாய், பல வினாக்களை எழுப்பி சலனமடையச்செய்ய வைக்கின்ற நேர்காணல் கவனிக்கத்தது. மாயா ஆஞ்சலோவை ஒரு பக்கமாய் மட்டும் பார்க்காது அவருக்கு வைக்கப்படுகின்ற விமர்சனங்களையும் மறந்துவிடாது குறிப்புக்களாய் இந்த் இதழில் பதிவுசெய்திருந்தது நல்லவிடயம். அத்தோடு அடேல் பாலசிங்கம் எழுதிய, விடுதலை வேட்கைக்கு தான்யா எழுதிய விமர்சனமும் முக்கியமானது. அடேலை முற்றாக நிராகரிக்காமல் அடேல் எழுதிய பலவிடயங்களையும், எழுத மறந்த/மறுத்த விடயங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது அந்தக்கட்டுரை.

ஆசிரியர்களின் தலையங்கத்தில் எழுதப்பட்ட பலவிடயங்கள் தேவையற்றது போல எனக்குபடுகின்றது. எழுத்தில் முன்வைக்காத எந்த விமர்சனத்துக்கும் பதில் கூறிக்கொண்டிருத்தல் அவசியமற்றது. அதற்காய் நேரவிரயம் செய்யாமல், மேலே நகர்ந்துகொண்டிருப்பதுதான் நல்லது. மேலும் பெயர் குறிப்பிடாத ஆக்கங்களுக்கு ஆசிரிய குழுவில் இருப்பவர்கள்தான் பொறுப்பானவர்கள் என்றாலும் ஆக்கங்களுக்கு எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் நன்றாகவிருக்கும். நாளை புதிதாய் ஒருவர் ஆசிரியர் குழுவுக்கு வரும்போதோ அல்லது எவரேனும் ஒருவர் விலகிப்போகும்போதே சில சிக்கல்கள் வரக்கூடும். கூட்டாய் படைப்புக்கள் எழுதியிருந்தாலும், அனைவரின் பெயரையும் போடுவதில் கூட பெரிய பிரச்சினை இல்லையென்று நினைகின்றேன்.

kaalam
காலம்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் அங்கீகரித்துபோவதில் நமது விமர்சகப்பெருமக்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்த இதழில் மு.பொ, ஜெயமோகனின் காடினையும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியையும் ஒப்பிட்டு எழுதிய விமர்சனம் கவனிக்கத்தக்கது.

காலம் இதழின் முக்கிய பிரச்சினையே தமிழகத்தில் வருகின்ற இதழ்களின் வடிவமைப்புடன் வருவது. காலச்சுவடு, சொல்புதிது, உயிர்மை என்று அவ்வவ்போது கூட்டணிகள் மாறுகின்றபோது, நாம் இதழைப் பார்த்தே காலம் இப்போது யாரோடு வாஞ்சையுடன் கைபோட்டுகொண்டு நிற்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இருபத்தைந்தாவது இதழ் வரை வந்துவிட்ட காலம் இதுவரை தனக்கென்று தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரத்தயங்குவது ஏனோ தெரியவில்லை. மேலும், காலம் கனடாவிலிருந்து வெளிவருகின்றது என்பதை முதற்பக்கத்தில் பார்க்காவிட்டால், எவரும் அது தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்றுதான் நம்புவார்கள். ஒரு இதழ் புலம்பெயர்ந்த சூழலில் வெளியிடும் அவலம் என்னவென்று புரிந்தாலும், 'காலம்' செல்வமும் அதன் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்களும் இது குறித்து சற்று யோசிக்கலாம். இந்த இதழில் வந்த கவிதைகள் அனைத்தையும் பெண்களே எழுதியுள்ளார்கள். ஆண்களின் கவிதைகள் நீர்த்துப்போகின்றன என்ற விமர்சனம் வைக்கப்படுகின்ற காலத்தில், சலித்துப்போன கவிதை ஜாம்பவான்களின் கவிதைகளைப் போட்டு நிரப்பாமல், புதிய கவிதை வாசிப்புக்கான சாத்தியங்களை உருவாக்குவதற்கு, காலத்தை இந்தவிடயத்தில் பாராட்டலாம்.

KaiNaaddu
கைநாட்டு (karumaiyam@gmail.com)

கைநாட்டின் முதலாவது இதழ் இது. இதழிலுள்ள விடயங்களை விமர்சிக்கப்போனால் அந்த சஞ்சிகையின் பக்கங்களைவிட அதிகம் எழுதவேண்டிவரும். வெளிப்படையாகச் சொல்வதனால் அதில் எழுதப்பட்ட பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அனைவருக்கும் தாம் விரும்புவதைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கு மாற்றாய் எந்த எதிர்க்கருத்தும் எனக்கில்லை. யாராவது நீயும் அதில் எழுதிவிட்டு இப்போது விமர்சிக்கின்றாய் என்று கூறமுன்னர் எனது கவிதையொன்றும் வந்திருக்கின்றது என்பதை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன். அங்கே பேசப்பட்ட தீவிர விடயங்களுக்கு மாறாய் எனது கவிதை தனியே முழித்துக்கொண்டு, வழமைபோல தன்பாட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு நிற்கின்றது என்பதை ஒரு தேவையில்லாத உபகுறிப்பாய் எழுதிக்கொள்கின்றேன்.

parai
பறை (www.parai.org) (info@parai.com)

பறையின் மூன்றாவது இதழ் இது. பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன் போன்றவர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நீண்ட ஆக்கங்களாய் இல்லாது, சிறு கட்டுரைகள் நிரம்பவாய் இருக்கின்றன. விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் அமிழ்ந்துபோய்க்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு(நான் உட்பட) இவ்வாறான மாற்றான சஞ்சிகைகள் வருவது நல்ல விடயம். இயலுமாயின் முன்பக்கத்தை சற்று தடித்த அட்டையில் கொண்டுவர பதிப்பாசிரியர்கள் முயலலாம்.

Friday, December 09, 2005

எதையாவது எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் விரைவில் விசர் பிடித்துவிடும் போலக்கிடக்கிறது. உங்கள் வழக்கில், 'விசர்' என்றால் என்னவென்று லீனா மணிமேகலை கேட்டபோது, என்னைப்போன்றவர்கள் உங்கள் முன்னால் இருக்கும்போது, இதற்கு அர்த்தம் தேடி அகராதியைப் புரட்டத்தேவையில்லை என்று பகிடிக்காய்க் கூறினாலும், விரைவில் மனச்சிதைவுக்கு ஆளானாலும் ஆளாகிவிடுவேன் போல ஈழத்தில் நடக்கும் அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

முன்பு எல்லாம், தினமும் இரண்டோ மூன்று முறையோ ஈழத்துச் செய்திகளை இணையத்தில், பத்திரிகையில் என்று தேடித் தேடி வாசிப்பேன். பிறகு இவ்வறான செய்திகளை வாசித்து வரும் எதுவும் செய்யமுடியாத கையாலகாத நிலையையும், கோபத்தையும் பார்த்து, மெல்லச் மெல்லச் செய்திகளை வாசிப்பதை (ஒருவித தப்பித்தல் தான்) குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன்.

நேற்று தற்செயலாய்ப் பார்த்த இந்தச்செய்தி மீண்டும் மிகப்பெரும் வெறுமையை மனதுக்குள் உண்டு பண்ணியது. என்ன செய்வது என்ற இயலா நிலையில், அப்படியே வாசித்த செய்தியை எடுத்து வலைபப்பதிவில் போட்டு விட்டு படுக்க முயற்சித்தேன் (ஆங்கிலத்தில் செய்தியைப் போட்டதால் தமிழ்மணம் சேர்க்கவில்லைப்போல) . தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது என்பது ஒருபுறம் இருக்க, பழிவாங்குவது எதுவுமறியாப் பெண்கள், பச்சிளங்குழந்தை வரை போனது மிகவும் கொடுமையாக இருந்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரகள் நடக்கும் கொலைகள் எல்லாம் 'ஒட்டுண்ணிப்படைகளும்', 'தேசத்துரோகிகளும்' செய்கின்றார்கள் என்று அடித்துக்கூறுகின்றார்கள் என்றால், மற்றப்பக்கம் 'ஓமோம் பாஸிசப்புலிகள் மட்டுந்தான் இதையெல்லாம் செய்கின்றார்கள்' என்று சுலபமாய் எழுதித்தள்ளுகின்றார்கள்.

இப்போது என்னை அதிகம் பாதித்துக்கொண்டிருப்பது, மீண்டும் கோரமாய் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ள தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. கிழக்கில் அந்த மக்களில் ஒருவராய் நின்று பார்க்காவிட்டாலும், வெளிநாடுகள் மிகப்பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையிலும், ஏறகனவே இந்த விடயத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்ப்ட்ட புலிகள் அவ்வள்வு முட்டாள்தனமாய் முஸ்லிம்கள் பிரச்சினையில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் தோன்றுகின்றது. மேலும் கெளசல்யன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாய் இருந்தது, அவர் முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த பரிவுடன் இருந்ததும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் இணக்கத்துக்காய் தீவிரமாய் உழைத்ததும் என்பதும் கவனிக்கத்தக்கது. உயிர்மையில் எழுதுகின்ற இளைய அப்துல்லா கூட, கெளசல்யன் மரணத்தின்போது பல முஸ்லிம்கள் கதறி அழுததாயும், கெளசல்யன் அக்கறையுடன் முஸ்லிம் மக்களிடையே பணியாற்றியவர் என்றுதான் குறிப்பிடுகின்றார். இதனால் முந்தி புலிகள் முஸ்லிமகளை கொலைச் செய்யவில்லை என்பதோ, பிற விடயங்களை நியாயப்படுத்துவதோ, ஜிகாத் போன்ற முஸ்லிம் வன்முறைக் குழுக்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையோ மறைப்பதோ என்று அர்த்தம் இல்லை.

கவனமாகப் பார்த்தால், ராஸிக் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளுக்கு காரணமாயிருந்தவரும், முஸ்லிம் பெயரைக் கொண்டு (பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை) இருந்து அதிரடிப் படைகள் செய்த தமிழ்மக்கள் படுகொலைக்கு காரணமாயிருந்தவரோ, உண்மையான முஸ்லிமகள் அல்ல, 'ராசிக்' ஒரு தமிழராகவும், அந்த அதிரடிப்படை அதிகாரி ஒரு சிங்கள இனத்தவராகவும் இருந்தவர்கள் என்பதன் பின்னாலுள்ள மூன்றாம் கைகளில் பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் இரண்டு பேரும் ஏன் முஸ்லிம் பெயர்களைச் சூடி இந்தக் கொலைகளை செய்திருந்தார்கள் என்றால், கிழக்கு மாகாணத்திலிருக்கும் முஸ்லிம்கள்தான் கொலைகளைச் செய்கின்றார்கள் என்ற பிரமையை வன்மத்தை தமிழ் மக்களிடையே ஆழமாய்ப் பதிக்க முயல்வது தான். அதைத்தான் இன்றைய பொழுதிலும் மூன்றாம் கைகள் திறம்பட நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள்தான் ஒற்றைப்படையாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால், 'சனநாயகம்' 'நடுநிலைமை' பேசும் எதிர்த்தரப்புக்கு இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் போல, ஈழத்தில் விழும் கொலைகள் எல்லாவற்றையும் செய்பவர்கள் 'பாசிசப் புலிகள்' மற்றும் புலிகள் தவிர வேறொருவருமில்லை என்பதே அவர்களின் 'உறுதியான' வாதம்.

நேற்றுத்தான் இன்னுமொரு செய்தியை வாசித்தேன். யாழில் ஒரு பெண், கசிப்பு விற்றதற்கும், விலை மாதராய் இருந்தற்கும் காரணமாய் சுட்டுக் கொல்லபட்டார் என்று. இப்படியானவர்களை மண்டையில் போடப்போகின்றோம் என்றால், புலம்பெயர் தேசத்தில் எத்தனை ஆண்களை முதலில் மண்டையில் போடவேண்டும் என்று யோசித்துப்பார்க்கின்றேன். ஆனால் இந்த ஆண்கள்தான், 'ஓமோம் அவள் வேசிதான், கொடுத்த தண்டணை சரிதான்' என்று நாக்கு கூசாமல் பேசுவதில் முன்னணியில் நிற்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒரு அமைதியான பொழுது எப்போதாவது ஈழத்தில் விடிகின்றபோது, இத்தனை கொலைகளுக்கும் மேலேதான், வீடு கட்டி, நம் துணைகளைப் புணர்ந்து, குழந்தைகள் பெறப்போகின்றோம் என்றால், அந்தக் குழந்தைகள் எப்படி பிறக்கப்போகின்றார்கள் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

குறிப்பு: இப்படி இவற்றை எல்லாம் எழுதுவது கூட, அர்த்தம் இல்லை என்பது புரிகிறது. ஆனால் இவ்வாறான செய்திகளை வாசிக்கும்போது இதைக்கூட எழுதாமல் இருந்தால், ஆரம்பத்தில் கூறியது மாதிரி விரைவில் விசர் பிடித்துவிடுமோ என்ற அச்சமே காரணமே தவிர, வேறொன்றுமில்லை.

Thursday, December 08, 2005

கொலைகள் விளையும் தேசம்

Revenge killing by suspected paramilitaries
[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan, Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a renegade paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE in Amparai, Tuesday. The sisters were shot as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.

Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted raids on Muslim and Tamil villages.

Usha Yogarajah, the two-years-old child, admitted in Batticaloa Hospital. She lost her mother Wednesday. Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

இவை குறித்தும் யாராவது 'சனநாயகவாதிகள்', 'நடுநிலைவாதிகள்' எழுதுங்களய்யா!

Tuesday, November 29, 2005

(அண்மையில்) படித்ததில் பிடித்தவை

ஆரம்பம் இங்கே

நிவேதா கொழும்பிலிருந்து அண்மையில் வலைப்பதிக்க ஆரம்பித்திருக்கின்றார். இறுதியாக எழுதிய கனத்துப்போன நினைவுகள் மிக அருமையாக இருக்கிறது. நேர்மையாகக் கருத்துக்களை வைக்கும்போது எந்தப்பயமோ, தயக்கமோ வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவு நல்லதொரு உதாரணம். கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், அவரது மொழி ஆளுமை. ஒரு விடயத்தை எழுதுவது என்பது பெரிய விடயமல்ல, அதை எப்படி வாசிப்பவருக்கு present செய்கின்றோம் என்பதில்தான் உண்மையான எழுத்தின் பலம் இருக்கிறது. மிக இயல்பான எழுத்து நடை நிவேதிதாவுக்கு வந்திருக்கிறது. தனது பரீட்சைகளின்பின் இன்னும் நிறைய எழுதுவார் என்று எதிர்ப்பாக்கின்றேன்.

சன்னாசி, நகுலனின் புனைவுகள், பற்றியும், சல்மான் ருஷ்டியின் நாவல் பற்றியும் எழுதிய பதிவுகள் மிக அருமையானவை. சிலருடைய வாசிப்பையும், எழுத்தையும் வாயூற வாயூறப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதில் சன்னாசியும் ஒருவர். இந்த ஆசாமிக்கு தெரியாத விடயம் ஏதாவது இருக்கிறதா என்று பலமுறை யோசிப்பதுண்டு (அப்படி நான் நினைக்கும் இன்னொருவர் பெயரிலி). சன்னாசியுடன் என்றாவது ஒருபொழுது நேர்காணல் கண்டு எப்படியெல்லாம் எழுத, வாசிக்க ஆர்வம் வந்தது என்பது பற்றியும், எப்படி இவ்வாறான் விரிவான தளத்துக்கு வாசிப்பை விசாலிக்கச்செய்தார் என்பதையும் அறிய ஆவல். மேலும் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருபவன் என்பதால் எனது ஆதங்கம் ஒன்றையும் (விமர்சனம் செய்யாமல் எப்படி ஒரு பதிவு எழுதுவது :-)) கூறவேண்டும். நேரங்கிடைத்து, சந்தர்ப்பம் வாய்த்தால், புலம்பெயர், ஈழப்படைப்புக்களை வாசித்து தனது எண்ணங்களை சன்னாசி பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பு. இப்படி பரந்த வாசிப்புடைய சன்னாசி போன்றவர்களின் விமர்சனங்கள் ஈழ/புலம்பெயர் படைப்புக்களுக்கு இன்னும் வளம் சேர்க்கும் என்பது எனது தாழ்மையான் எண்ணம்.

மரம், கடைசியாய் எழுதிய பதிவு வித்தியாசமான கோணத்தில் அண்மைக்காலப்பிரச்சினைகளை யோசிக்கவைக்கிறது. குஷ்பு விவகாரம் குறித்து தெளிவாய் எனது கருத்துக்களை வைத்ததால் அவற்றைப்பற்றி இன்னொருமுறை பேசவேண்டிய அவசியமில்லை. குஷ்பு விவகாரத்தைச் சாட்டி, ஒரே நாளில் லிபரல்களாயும், பெரியாயவாதிகளாகவும் ஆன பலபேரை நினைக்கத்தான் பயமாயிருக்கிறது. திருமாவளவனும், இராமதாசும் குஷ்பு விவகாரத்தில் அபத்தமாய் கூறியதைச் சாட்டாக வைத்து அவர்கள் இதுவரை பேசிய அனைத்துவிடயங்களையும் மட்டந்தட்டிவிட்டுப் போகின்றவர்களைப் பார்க்கும்போதுதான், மரத்தினுடைய இந்தப்பதிவு எனக்கு முக்கியமாய்ப்பட்டது.

தமிழ்க் கலாச்சாரம், குஷ்பு விவகாரம், கற்பு குறித்து அருள்செல்வனும்
மூன்று கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். நான் யோசித்துப்பார்க்காத கோணங்களை, இன்னொரு விவாதத்திற்கான சில முக்கிய புள்ளிகளை விட்டுச்செல்வதால் அவையும் முக்கியமான கட்டுரைகளாக எனக்குத் தெரிகின்றன.

(1) மரம்
(2) ஜகாரஸ் ப்ரகாஷ்
(3) கண்ணன் (பெங்களூர்)

பி.கு: மதி, நீங்கள் கூறிய கட்டுப்பாடுகளுக்கேற்ப நான் விளங்கி எழுதினேனா தெரியவில்லை. திருத்த வேண்டியிருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி.

Saturday, November 26, 2005

செல்லிடப்பேசிக்குள்ளால்...

பார்த்த காட்சிளும் பங்குபற்றிய சில நிகழ்வுகளும்


புத்தகம் வாசித்தபடி, 'காட்சிகளை' இரசிக்கும் Indigo யன்னல்கரையில்

நிலத்தைக்குடைந்து செல்லும் subway train சொற்பநேரத்தில் வெளியே வருகின்றசமயத்தில்


'கூர்' என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதைகள் வாசிப்பு நிகழ்வின்போது

பனி பெரும்மழையாய்க் கொட்டிய ஓரிரவில்....தெரு எது நடக்கும் பாதை எது என அடையாளம் மறைந்த பொழுதில்

குறும்படங்களுக்கான ஒரு பட்டறையின்போது

கவிதை வாசித்தலைக் கேட்பதற்கும் வாசிக்கவும் வந்திருந்தவர்கள்

Tuesday, November 22, 2005

'கவிதை' என்று எழுதுவதைத்தான் இல்லாமற் செய்துவிட்டார்கள். இனிப் புதிதாய் எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று (அப்பதானே fieldல் நிற்கலாம். இல்லாவிட்டால் துரத்திவிடுவார்கள் அல்லவா?) யோசிக்கலாம் என்று எனது ஏழாம் அறிவைச் சுரண்டியபோது, பிறருக்கு இலவச ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். மேலும் இதற்கு சொந்தமாய் எந்த முதலீடும் இல்லாதிருப்பதால், நக்கீரர்/நாரதர் வேலை பார்க்கும் கொழுவி போன்றவர்களின் தொல்லைகளில் இருந்தும் தப்பிக்கலாம். யாராவது அடிக்க வந்தால் கூட, இது நான் எழுதியதில்லை என யாரவது unknown personஐ கைகாட்டலாம் :-).

முக்கியமாய் கீழேயுள்ள பொன்மொழிகளை ஆண்கள் வாசித்து காயத்ரி (இது நீங்கள் சைட் அடித்த/அடிக்கும் காய்த்ரி என்னும் பெண் அல்ல) மந்திரம் மாதிரி நினைவுபடுத்தி, எதிர்காலத்தில்/நிகழ்காலத்தில் உங்களுக்கு இருக்கும் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கலாம். 'எவ்வளவு நல்ல மனுசன்' என்ற பெருமைமிகுபட்டங்களை உங்கள் துணையிடம்/காதலியிடம் பெற்றுக்கொள்ளலாம். பெண்களும் அட ஆண்களும் எங்களைப் புரிந்துகொள்ளப்பார்க்கின்றார்களே என்று புன்முறுவல் பூக்கலாம். மேலும் இப்படி உங்களின் உளவியல் புரிந்தவனாய் இருக்கின்றானே என்று என்னையும் சற்றுப் பாராட்டலாம். அதிகம் பாராட்டி நிரம்பத்தும்மச்செய்து 'ஜலதோசம்' மட்டும் வரச்செய்யவேண்டாம்.

WORDS WOMEN USE

FINE
This is the word women use to end an argument when they are right and you need to shut up.

FIVE MINUTES
If she is getting dressed, this is half an hour. Five minutes is only five minutes if you have just been given 5 more minutes to watch the game before helping around the house.

NOTHING
This is the calm before the storm. This means "something," and you should be on your toes. Arguments that begin with 'Nothing' usually end in "Fine."

GO AHEAD
This is a dare, not permission. Don't do it.

LOUD SIGH
This is not actually a word, but is a non-verbal statement often misunderstood by men. A "Loud Sigh" means she thinks you are an idiot and wonders why she is wasting her time standing here and arguing with you over "Nothing"

THAT'S OKAY
This is one of the most dangerous statements that a woman can make to a man. "That's Okay" means that she wants to think long and hard before deciding how and when you will pay for your mistake.

THANKS
A woman is thanking you. Do not question it or faint. Just say you're welcome.

WHATEVER
It's a woman's way of saying *!#@ YOU!

என்ன, இதையெல்லாம் நான் தான் எழுதினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் சோகம் என்னவெனில் இது ஒரு தோழியால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. கொஞ்சம் பொறுத்திருந்தால் நான் இதையெல்லாம் எழுதியிருப்பேன் என்று ஆண்களின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காய்ச் சொல்லிவைக்கின்றேன்.

Wednesday, November 02, 2005

கட்டாய விருப்ப ஓய்வு குறித்து ஒரு சத்தியக் (ம் அல்லாத) கடதாசி

சில வாரங்கள் (அல்லது சில மாதங்கள்) வலையில் எழுதுவதை நிறுத்தி நண்பர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற வருடம் கார்த்திகை மாதத்தில் ஏதோ ஒருநாளில்தான் வ்லைப்பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தேன். இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு பதிவுகள் எழுதியிருப்பேன் போலக்கிடக்கிறது (ஆகக்குறைந்தது பத்துப் பதிவுகளாவது உருப்படியானதா என்பது வேறு விடயம் :-) ).

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், புரட்டாதி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன். அன்றைய நாளில் பிரியமான இரண்டு தோழியரின் பிறந்த நாளும் வந்தததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வலைப்பதியவும் செய்யும் அந்த இரு தோழியருக்கும் வாழ்த்து! அத்தோடு இந்த கார்த்திகை மாதத்தில், திருமணப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் அருமைத் தோழர் ஒருவருக்கும் திருமணநாள் வாழ்த்து உரித்தாகட்டும் (I am missing the opportunity to see your wedding ceremony buddy).

இறுதியாய், கனடாவில் இயல் விருது என்று ஒரு விருது படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்பட்டபின் இவரை விட அவருக்கு வழங்கியிருக்கலாம் என்று முணுமுணுப்பதைவிட, இந்த முறை என் சிற்றறிவுகுட்பட்டவகையில் இந்த விருதுக்காய் சிலரைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கார்த்திகேசு சிவத்தம்பி
கி.ராஜநாராயணன்
அம்பை
சோ.தர்மன்
எம்.ஏ. நுஃமான்
ராஜம் கிருஷ்ணன்
வண்ணநிலவன்

நன்றி.

Tuesday, October 25, 2005

சுந்தர ராமசாமி

நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்

சுந்தர ராமசாமியின் மறைவுக்கான நினைவஞ்சலிக் கூட்டம், ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்தது. வழமைபோல நான் 'நேரத்துக்கே' சென்றதால் அ.முத்துலிங்கம், சு.ராவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்ததைத்தான் எனது ஆரம்பமாகக்கொள்கின்றேன். அ.முத்துலிங்கம், கனக செல்வநாயகம், தேவகாந்தன், திருமாவளவன், சேரன், வ.ந.கிரிதரன், பா.அ.ஜயகரன், எம்.கே.மகாலிங்கம், 'காலம்' செல்வம், சிவதாசன் என்று பலர் சு.ராவுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்தனர். 'சு.ராவுடனான படைப்புக்களுக்குள் போகாமல் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்' என்று தலைமை வகித்த எம்.கே.மகாலிங்கம் கேட்டதால், அனேகர் சு.ராவுடனான தமது தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சு.ரா பழகுவதற்கு அருமையான மனிதர் எனவும், தான் பேசுவதற்கான வெளியை (space) உருவாக்குவதில் கவனம் எடுப்பதைவிட, எதிரே இருப்பவர் பேசுவதற்கான வெளியை எப்போதும் உருவாக்கி கொண்டிருந்தவர் என்பதை நான் சு.ரா பற்றி இவர்களின் பேச்சினூடாக விளங்கிக்கொண்டேன். அனைவரின் உரைகளிலும், சு.ராவின் சடுதியான இழப்பை சற்றுத் தாங்க முடியாதது போல இருந்தது. சு.ரா தனது இறுதிக்காலத்தில், ஒரு புதிய நாவலை எழுதிக்கொண்டிருந்தார் என்றும் அது எவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை என்றார் அ.முத்துலிங்கம். சிவதாசன், சு.ரா தனது இறுதிப் பயணத்தைச் சடங்குகள் இல்லாமற் செய்ததன் மூலம், 'பிராமணர்', 'பிராமணியம்' போன்று அவருக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இல்லாமற் செய்திருக்கின்றார் எனத்தன் பேச்சில் குறிப்பிட்டு அப்படிச் செய்ததற்காய் தலைவணங்குகின்றேன் என்றார். தேவகாந்தன், சு.ரா, ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள் நடத்திய கூட்டத்திலும், கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவிலும் சு.ராவின் பங்கும் பெருமளவில் இருந்தது என்று குறிப்பிட்டார். திருமாவளவன், தனது முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்டதற்கு சு.ராவே காரணமென்றார். இரண்டாவது தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதுப்படுகின்ற காலத்தில், பசுவய்யாவின் கவிதைகளை தினம் ஒன்றாவது படித்திருக்கின்றேன், அந்தவகையில் சு.ரா தனக்கு குருவென்றார். 'காலம்' செல்வம் சுரா நட்புக்காய் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார், முக்கியமாய் குமுதம் போன்றவற்றை சு.ரா விமர்சித்துவிட்டு தீராநதியில் எழுதப்போனது நட்பின் நிமிரத்தம் என்றார். அதை, தான் விமர்சித்தபோது, ஒத்துக்கொண்டு அது தனது நெருங்கிய நண்பர் மணாவுக்காய்தான் நேர்காணலைக் கொடுத்திருந்தேன் என்று குறிப்பிட்டாராம். சு.ரா சென்னைக்கு வரும்போது கட்டாயம் ஒவ்வொருமுறையும் இரண்டு பேரைச் சந்திப்ப்பேன் என்று கூறியபோது, தான் ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் ஆக்கும் என்று நினைத்தால், சின்னக்குத்தூசியையும், மணாவையும் என்று சு.ரா கூறியபோது தனக்கு அது ஆச்சரியமாக இருந்தது என்றார் 'காலம்' செல்வம். எந்தக் குறிப்பும் இல்லாமல் சு.ராவின் சில கவிதைகளையும், நாவல்களில் வரும் பகுதியையும் அப்படியே செல்வம் ஒப்பித்தபோது, சு.ராவின் பாதிப்பு எவ்வளவு செல்வத்திடம் உள்ளது என்று விளங்கியது. முக்கியமாய், தனக்கு எமர்ஜென்சிக்காலத்தில் இந்திராகாந்திக்கு எதிராய் சு.ரா எழுதிய கவிதை பிடிக்கும் என்றார். அதிலும் 'இது உறக்கம் அல்ல தியானம்' என்ற வரிகள் தன்னை ஒருகாலத்தில் பாதித்தது என்று செல்வம் குறிப்பிட்டது நினைவிலுண்டு. சு.ராவுகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டால் நன்றாகவிருக்கும். எனெனில் அந்த விருதின் மூலம் அவரது படைப்புகளை ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்த்து அரசு வெளியிடும் என்பதால் சில்லறைப் படைப்புகளுக்குப் பதிலாய் சு.ராவின் படைப்புக்கள் பிற மொழி பேசுபவர்களை அடைந்தால் நல்லதே என்று வ.ந.கிரிதரன் குறிப்பிட, காலம் செல்வம் இடைநிறுத்தி, 'என் முன்னோர்களுக்கு கிடைக்காத விருதை எனக்குத் தந்தால் அவர்கள் முகத்திலேயே வீசி எறிவேன்' என்று சு.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கின்றார் என்பதை நினைவு கூர்ந்தார்.

வழமைபோல கூட்டம் முடிவதற்கு முன்னரே,வெளியில் நின்று சில நண்பரகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன். ரொறண்டோவில் நடந்த சு.ராவுடனான, தளையசிங்கத்தின் 'ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி' விவாதத்தைப் பற்றிச் சில விடயங்களை வ.ந.கிரிதரன் நினைவுபடுத்தினார். அப்போது நான் கனடாவுக்கே வரவில்லை என்பதால் அதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 'காலம்' செல்வமும் இணைந்துகொள்ள, 'அந்த மாதிரி சு.ராவின் பாதிப்பு உங்களுக்கு இருக்கிறது' என்று நான் வழமை போல வாயைப் பிளந்து சொல்ல, முந்தி 'காலம் என்றால் சு.ரா, சு.ரா என்றால் காலம்' என்று ஒரு காலம் இருந்தது என ஒரு நண்பர் குறிப்பிட்டார் :-) . வேறொருவர், சு.ரா என்றவுடன் சில நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஆனால் ஜெயமோகனுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல ஒரு நாவலும் இல்லை என்றார். ஜெயமோகன் ஏன் பேச்சின் நடுவில் ஓடி வந்தார் என்றால் அதற்கு நான்தான் காரணம். 'காலம்' செல்வம் யாரோ ஒருவருக்கு 'இவன் நமது கூட்டாளி' என்று அறிமுகப்படுத்தி 'என்ன நான் சொல்வது சரிதானே?' என்று என்னைக் கேட்க, 'ஓம் எல்லோருக்கும் கூட்டாளிதான், அது சரி நமது கூட்டணி இப்போது காலச்சுவட்டுடனா அல்லது ஜெயமோகனுடனா?' என்று நான் திரும்பிக் கேட்கும்போதுதான் சும்மா இருந்த ஜெயமோகனும் பேச்சினிடையே வந்துவிட்டார். மற்றப்படி, நான் முன்பு வேறு சில பதிவுகளில் குறிப்பிட விரும்பினாலும், பல நண்பர்களுக்கு அவர்கள் மீது நான் எழுத்தில் வைக்கும் விமர்சனங்கள் தெரிந்தும், விமர்சனம் வேறு நட்பு வேறு என்று இயல்பாய் அவர்கள் பேசுவதை பெரிய விடயமாகக் கருதுவதைக் குறிப்பிடவேண்டும்.. காலம் புத்தகங்களுக்கு விமர்சனங்கள் வைத்திருக்கின்றேன். தேவகாந்தனின் 'கதா காலம்' புத்தக வெளியீட்டு விழாவுக்கும் எனது கருத்தை எழுதியிருக்கின்றேன். அ.முத்துலிஙகத்தின் படைப்புக்களை பல பொழுதுகளில் கடுமையாகவே விமர்சித்திருக்கின்றேன். சுமதி ரூபன், திருமாவளவன் போன்றவர்களுடன் சில விடயங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் எவரும் முகத்தைத் திரும்பிக்கொண்டு போகாதது ஆறுதலாயிருந்தது. காலம் செல்வத்தோடு நகைச்சுவையாகக் கதைக்க முடிந்தது. அ.முத்துலிஙகம் 'எப்படி இருக்கின்றீர்? என்றபோது, அவரது சுகம் குறித்து (சற்று சுகவீனமாய் இருக்கின்றார்) கேட்கமுடிந்தது. தேவகாந்தனுடன் 'பறை'யில் புதிதாய் எழுதும் தொடர் பற்றி இரண்டு வரி பேச முடிந்தது. சுமதி ரூபனிடம், இலண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது என்று விசாரிக்க முடிந்தது. திருமாவளவன், றஷ்மியின் புதிய
தொகுப்பை காசு வாங்காமலே தந்து வாசி என்று அதே பழைய நட்புடன் இருந்தார்.

கலைச்செல்வன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் மரணங்கள், இன்னும் இந்த நண்பர்களைப் புரிந்துகொண்டு பழகவேண்டும் என்ற தவிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகக்குறைந்தது அவரவர்களின் உடல் நலங்களிலாவது கவனமாக இருங்கள் என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகின்றது. சேரனைச் சிலவருடங்களுக்கு முன் கண்டதற்கும் இப்போது பார்ப்பதற்கும் தன்நிலை குறித்து கவலை இல்லாது திரிவது போன்ற எண்ணத்தை தர, சற்றுக் கவலையாய் இருந்தது. நாங்கள் வெளியே நிற்கவும் கூட்டமும் முடிந்துவிட்டது. எம்.கே மகாலிங்கம் என்னைக் கண்டுவிட்டு, 'உம்மையும் இரண்டு வரி பேசச் சொல்லலாம் என்று தேடினால் நீர் வெளியில் வந்துவிட்டீர்?' என்றார். எழும்பி நின்று இரண்டு வரி பேசுவதற்குள், நாலைந்துமுறை பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், 'எனக்கு சு.ராவோடு தனிப்பட்ட அனுபவம் என்று ஒன்றுமில்லைத்தானே' என்று சமாளித்துவிட்டேன்.

கண்ணன் குறிப்பிட்ட மாதிரி, சு.ரா ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார் போலத்தான் எனக்கும் தோன்றியது. மேலும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்க்காத பிக்கல் பிடுங்கள் இல்லா வாழ்வையும், தனது பிள்ளைகளையும் பிறர் குற்றஞ் சொல்லமுடியாத நிலையில் ஒரு தகப்பனாய் நின்று வளர்த்துவிட்டும் போயிருக்கின்றார். அந்த வகையில் சு.ராவின் வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது. பா.அ.ஜயகரன் குறிப்பிட்ட மாதிரி, இனித்தான் சு.ராவை நிரம்ப (மீள)வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்ற கருத்தைத்தான் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியெ எனக்காய் கொண்டு வந்த செய்தியாக இருந்தது. தமது மறைவின் பின்னும் தமது இருப்பை அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் விட்டுச் செல்பவர்கள் உயர்ந்த படைப்பாளிகள், சு.ராவும் அவர்களில் ஒருவர்.

Saturday, October 22, 2005

sura
இன்று பழைய குப்பைகளைக் கிளறியபோது கண்ணில்பட்ட நாட்குறிப்புப் பதிவொன்று. நான் ஒருபோதும் நாட்குறிப்புக்கள் தொடர்ந்து எழுதியவனல்ல. 2000ம் ஆண்டு நாட்குறிப்பைப் பார்த்தபோது, நாலைந்து பக்கங்கள்தான் எழுதியிருந்தது தெரிந்தது (பிறகு வந்த வருடங்களில் அந்த நாலைந்து பக்கங்களைக்கூட எழுதியதில்லை). சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புக்கள் வாசித்தபோது எழுதிய குறிப்பாய் இருந்ததால், ஒரு நனவிடைதோய்தலாய்ப் பார்க்கமுடிந்தது.

file1
இந்தக் 'கவிதையும்' கிட்டத்தட்ட அந்த ஆண்டுகளில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இப்போது நிதானமாய்ப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியின் 'உன் கவிதையை நீ எழுது'வின் பாதிப்பு (அல்லது அப்பட்டமான கொப்பி மாதிரியும்) இருந்ததாயும் தெரிகிறது.McMaster University தமிழ் மாணவர்கள் வெளியிட்ட (விழிப்பு) புத்தகமொன்றிலும், நண்பன் ஒருவன் ஆசிரிய குழுவில் இருந்தபோது இது வெளிவந்திருந்தது. இப்படி இந்தப்பொழுதில் எழுதியிருப்பேனா என்பது ஒருபுறமிருக்க, அந்தக்காலத்தில் எப்படியிருந்திருக்கின்றேன் என்று ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

ஜந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளை ஒருமுறைச் சுரண்டிப்பார்க்கவும், சுந்தர ராமசாமியின் அந்தக்காலத்துப் பாதிப்புப் பற்றியும் நினைவு கொள்ளவும் இந்த இரு குறிப்புக்களும் உதவுவதால், அவற்றுக்கும் நன்றி :-).

Saturday, October 15, 2005

நினைவு கூர்தல்: சுந்தர ராமசாமி

PA140010

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-சுந்தர ராமசாமி (1985)

Thursday, October 13, 2005

பிள்ளையார்

PA100001

'அப்பம் முப்பளம் செய்து அருளிய தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே'
பிள்ளையா எனக்கு மிகப்பிடித்த கடவுள். பிள்ளையாரில், எப்போது இருந்து பிடிப்பு ஏற்பட்டது என்று யோசித்துப்பார்த்தால், போரின் நிமிர்த்கம் இடம்பெயர்ந்து அகதியாக அளவெட்டியில் ஒரு வீட்டில் தங்கி நின்ற சமயத்தில்தான் வந்திருக்கவேண்டும் போலத் தோன்றுகின்றது. அளவெட்டி, பிள்ளையார் கோயில்களுக்கும் அம்மன கோயில்களுக்கும் பிரசித்தி பெற்றவை. கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில், அழகொல்லைப் பிள்ளையார் கோயில், பெருமாக்கடவை பிள்ளையார் கோயில் என்ற சில கோயிலக்ள் இப்போதும் ஞாபகத்திலுண்டு. நாங்கள் இருந்த வீட்டுக்கருகில்தான் பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயில் இருந்தது. அதன் அரைவாசிப்பக்கம் வயல்களால் சூழப்பட்டிருக்கும். அழகான ஒரு கேணியும் இருந்ததாய் நினைவு. அந்தச் சூழலும், பழமையின் மணம் வீசிக்கொண்டிருக்கும் கோயிலோடு அங்கிருந்த பிள்ளையாரைப் பிடித்துவிட்டது. இந்தக் கோயிலின் முன்றலில்தான் தமிழ் இளைஞர்கள் தீவிரமாக ஆயுதப்போராட்டத்தில் நுழைந்த சமயத்தில், போராட வந்த சகோதர இளைஞர்களாலேயே உமைகுமாரனும் இறைகுமாரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் (பெயர்கள் சரியா?). அதன்பிறகு பிள்ளையாரை எல்லா இடங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்திருக்கின்றேன். பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் 'பிள்ளையார் துணை' என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார் (காலம் கடந்தாலும்,அதற்கு நன்றி பிள்ளையாரப்பா). ஆனால் இப்போது திரும்பி கடந்த காலத்தை கொத்துரொட்டி செய்வதற்காய் ரொட்டியை விசுறுகின்றமாதிரி திரும்பிப் புரட்டிப் பார்த்தால், எனக்கும் பிள்ளையாருக்கும் நிறைய எதிர் முறையான குணாதியசங்கள் இருந்திருக்கின்றதெனப் புரிகின்றது. முதலாவது, பிள்ளையாருக்கு அருகில் எந்த பெண்ணும் துணையாக இருப்பதில்லை (பிள்ளையாருக்கு இச்சா கிரியா என்று இரு துணைகள் இருக்கின்றதாய் எங்கையோ வாசித்தது நினைவில் இருந்தாலும) கோயில்களில், படங்களில் தனித்துதான் இருக்கிறார்). நான் அத்ற்கு முற்றிலும் எதிர்மாறானவன் (இதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா என்று நீங்கள் முணுமுணுப்பது தெளிவாய் டெசிபெல்லில் கேட்டாலும், கூறுவது என் கடமை). இன்னுமொன்று பிள்ளையார் நல்ல muscular bodyஜக் கொண்டவர் :-). பிள்ளையாருக்கு தொப்பை கூட எவ்வளவு அழகாய் இருக்கிறது பாருங்கள்.

donald_portrait

பிள்ளையார் என்னை மறந்துவிட்டிருந்தால் அவருக்கு நினைவுபடுத்த என்னுடைய பதின்மத்தில் (அதுதான் எண்பதுகளில்) எடுத்த ஒரு படத்தையும் போட்டுவிடுகின்றேன். படம் எடுத்தவர்: கார்த்திக், எடுத்த அமைவிடம்; நான் மாவிட்டபுரம் கோபுரத்தின் உச்சியில் நிற்கையில் கார்த்திக் ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து எடுத்தது.

(சரஸ்வதி பூசையில் பிள்ளையாருக்கும் உணவு படைக்கையில் எழுந்த நனவிடைதோய்தல்)

Saturday, October 01, 2005

படம் பார்த்தது குறித்து படம் காட்டுதல்

கஜினி

முதலிலேயே கூறிவிடுகின்றேன். இதை எழுதுவதற்கு அஸின் மற்றும் அஸின் மட்டுமே காரணம். ஆங்கிலப்படத்தின் சாயலில்தான் இதை எடுத்திருக்கின்றார்கள் என்று வாசித்திருந்தேன். நான் அந்தப் படத்தை பார்க்காததால் எதுவும் சொல்வதற்கில்லை. மற்றப்படி மலையாள, தெலுங்குப் படங்களை அப்படியே மாற்றி தமிழில் எடுக்கும்போது எழாத முணுமுணுப்புக்களைப் போல ஆங்கிலப்படங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் படங்களையும் பார்த்துவிட்டு போகின்றேன் (தமிழில் எடுக்கப்பட்ட கமலின் சில படங்களை மூல ஆங்கிலப்படங்களை விடவும் மிகவும் இரசித்துப் பார்த்திருக்கின்றேன்) . நேர்மையான இயக்குநர்கள் என்றால் மூலத்தை குறிப்பிடச்செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.



கஜினி வழமையான ஒரு பொழுதுபோக்குப் படம். அதில் லொஜிக்குகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினால், படம் nothing என்று ஒருவர் இலகுவாய் நிரூபித்துவிட்டுப் போய்விடுவார். வழமையான 'தமிழ்க்கலாச்சார' ஆபாச குடும்ப செண்டிமெண்டல்கள் இல்லாமல் இருந்தது பிடித்திருந்தது. வன்முறைக் காட்சிகள் சிலவேளைகளில் மிக அதிகமாய் இருக்கின்றது. என்னைக் கேட்டால் சிறுபிள்ளைகளை இந்தப் படத்துக்கு கூட்டிச்செல்லவேண்டாம் என்றுதான் கூறுவேன். எங்களுக்கும் முன் சீட்டில் இருந்த சிறுவன் பயந்து பதட்டபடி இருந்ததைக் கண்டிருந்தேன்.

அஸினின் நடிப்பு மிக இயல்பாயிருந்தது ( When i was watching this movie, I thought if i've got a partner like Asin's character in this movie, would be more fun :-). Alright guys...நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது எனறு உங்கே திட்டுவது கேட்கிறது. சரி கனவாவது கணடுவிட்டுப்போகின்றேன்). நகைச்சுவைப் பகுதியை அஸினுக்கு கொடுத்தே விட்டதுமாதிரி இருந்தது; நன்கு சிரிக்க வைக்கின்றார். எனது ப்ளொக்கர் படத்தில் அஸினைப் போட்டதற்கு, 'அஸின் இப்படி நடித்திருக்கின்றாரே நீ அவரின் படத்தைப் போடலாமா?' என்று எவரும் கேட்கமுடியாத அளவுக்கு நன்கு நடித்திருக்கின்றார். நயந்தாரா ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை (இறுதியில் மழையில்) ஓடிக்கொண்டிருக்கின்றார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டி பயமுறுத்துகின்றார்கள் (வல்லவன் பட சர்ச்சையில் சிக்கியவுடன் நயந்தாராவின் உதடுகளைக் காட்டாவிட்டால் சிறைக்குள் போட்டுவிடுவோம் என்று யாராவது சொன்னாரகளோ தெரியாது).



ஒளிப்பதிவு மிக அருமை, ராஜசேகருடையது. இறுதிக்காட்சிக்காய் புதுவித கமரா பாவிக்கப்பட்டது என்றும், இரட்டை வேடங்களுக்கு அது மிகச்சிறப்பாக உதவும் என்றும் ராஜசேகர் கூறியதை எங்கையோ வாசித்தது நினைவு.

சிறுமிகளை வேலைக்கு என்று கூப்பிட்டு மும்பாய்க்கு (?) விபச்சாரத்துக்கு அழைத்துச் செலகையில் அஸின் அவர்களைக் காப்பாற்றி விட்டு வில்லனிடம் கூறுவார்... "பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சினைகள்....மடாதிபதிகள், வைத்தியர்கள், வக்கீல்கள், வேலை செய்யும் இடங்க்ள்.....இப்பதானேடா பெண்கள் சமையலறைக்குள் இருந்து வெளியுலகத்துக்கு வரத்தொடங்கி இருக்கின்றார்கள்....இப்படியெல்லாம் நீங்கள் செய்யத்தொடங்கினால், மீண்டும் சமையலறையே போதும் என்று அவர்கள் முடங்கிவிடவல்லவா போகப்போகின்றார்கள்' என்று (இது எனது short term memory lostல் இருந்து loss பண்ணாமல் எழுதியது; முற்று முழுதாகச் சரியானதல்ல). அப்படிக் கேள்வி கேட்டது மிகவும் பிடித்திருந்தது (அது வில்லனுக்கு மட்டுமல்ல; படம் பார்த்துக் கொண்டிருந்த நம்மையும் பார்த்துத்தான்). அதுவும் அஸின் வாயால் கேட்டது.......



எல்லாப் பெரிய விசயங்களும் சின்னக் கேள்விகளிருந்துதானே ஆரம்பிக்கின்றது.


(இந்தப்படங்களும், அரைகுறைப் பதிவும் அஸினுக்கு)
p.s: These photos are not related to the movie, Kajani and thankx to asinonline.com

Wednesday, September 28, 2005

Niagara Visit - Aftermath

P9240043(pencil)

'இது இருளல்ல
அது ஒளியல்ல
இரண்டோடும் சேராத பொன்நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்'

P9240036

ரொறொண்டோவில் வலைப்பதிவர் சந்திப்பு நடந்தபோது, அதைக் குழப்புவதற்காய் பெயரிலியும், கார்த்திக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியுனூடாக ஊடுருவ முயன்றது நண்பர்கள் அனைவரும் அறிந்ததே. இவர்களது ஊடுருவலை நடத்தவிடாது கடும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, எமது வலைபதிவு சந்திப்பு வெற்றிகரமாக நடக்க உதவியவர், அஞஜலீனா ஜோலீ (Anjalina Jolie ). அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாய் அவரது மெழுகுப்பொம்மை நயாகரவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதையே மேலே காண்கின்றீர்கள்.

P9240024
இதை ஊரில் பூநாறி (அல்லது பீநாறி?) என்று அழைப்பதார்கள். ஈழத்தில் எங்கள் வீட்டுக்கருகில் பற்றைகளாய் படர்ந்து நின்றது நினைவில் இருக்கின்றது. நயாகராவை அழகுபடுத்துவதற்காய், இந்தச் செடியை அழகாய் கத்தரித்து பராமரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

P9240003
CN Tower

ஒரு நயன்தாராவைத் தேடி நயாகராவுக்கு

சென்ற ஞாயிற்றுக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு, ஜரோப்பாவில் இருந்து வந்திருந்த உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். நயாகராவுக்கு நான் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. இப்படித்தான், சில மாதஙகளுக்கு முன் ''ஒருவருக்கு' வேறு நகரத்திலிருந்து நயாகராவுக்குப் பயணம் செய்தபின் ஒரு 'நல்ல செய்தி' அவர் நெஞ்சில் நயாகராவாய்ப் பாயத்தொடங்கியதாம். எனக்கு நயாகரா பாயாவிட்டாலும், நெஞ்சில் ஒரு குற்றாலமாவது பாயட்டும் என்று ஆசைப்பட்டுத்தான் புறப்பட்டேன். நல்ல 'சகுனமாய்' நான் நயாகராவில் நின்ற சமயம், நயாகரா நீர்வீழ்ச்சிக்காரர் தொலைபேசியில் அழைத்து சுகமும் விசாரித்திருந்தார். அவர் யார் என்று நீங்கள் ஆவலாகக் கேட்பது புரிகின்றது. அவர் 'யாராக இருந்தால் என்ன' என்றெழுதிய பின்னூட்டத்தை விளங்கியவருக்கு மட்டும் இந்த உண்மை தெரியுமாம் :-).

P9240018
கனடாவுக்கு சொந்தமான நீர்வீழ்ச்சி

P9240017
தண்ணீரில் மிதக்கும் படகு

P9240033
அமெரிக்காவுக்கு சொந்தமான நீர்வீழ்ச்சி

P9240048

விரைவில் ஆவலோடு எதிர்பாருங்கள்!!! Niagara Visit - Aftermath வர்ணச்சித்திரம் காட்டப்படும்.

Friday, September 23, 2005

'LOVELY'

நேற்று, ரொரண்டோ நகருக்கு ஜெசிக்கா பார்க்கர் (Jessica Parker), தனது சொந்தத் தயாரிப்பான fragrance லவ்லியை (Lovely) அறிமுகஞ் செய்வதற்காய் வந்திருந்தார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற நாடகத் தொடரான Sex and the Cityயில் நடித்த முக்கியமான நான்கு பெண்மணிகளில் ஒருவர்.

P9210002
நிஜம்

நான் இவரைப் படம்பிடிப்பதற்காய் எனது படப்பெட்டியைக் தூக்கிக்கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம் 'ப்ரோ' பெயரிலி. அவர் இன்றைய கால spicy girlsயான கே.பி.சுந்தரம்பாளையும், மதுரத்தையும் விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பதால், இல்லை ப்ரோ கடந்தகாலத்திலும் hot/coolயாய் பெண்கள் இருந்திருக்க்கின்றார்கள் என்பதைப் புரிய வைக்கத்தான். 'மகன் தந்தைக்காற்றும் உதவி...' என்பதற்கிணங்க, நான் 'ப்ரோவுக்கு ப்ரோ ஆற்றும் உதவி...' என்று இப்படி படம் காட்டியதால் (('ஆற்றும்' என்று நான் இங்கே கூறியவுடன், தங்கமணி, டிசே தேநீரைத்தான் ஆற்றச்சொல்கின்றார் என்று சமையலறைக்குப் போகாவிட்டால் சரி)), பெயரிலி அவர்கள் ஜெசிக்கா பார்க்கருக்கு சற்று முன்பான 50ம் ஆண்டுகளில் கொடிகட்டிப்பறந்த Ciara, M.I.A போன்றவர்களின் படங்களை எனக்காய் எடுத்து போடவேண்டுமென்று அன்புக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

P9150031
நிழல்; வெள்ளியாக ஜெசிகாவின் காதடியில் மினுங்குவது எனது புன்சிரிப்பே அன்றி, படப்பிடித்தலின் பிழை அல்ல

ஜெசிக்கா பார்க்கரைப் நேரில் பார்ப்பதைவிட, வந்திருந்த கூட்டதை பார்ப்பது சுவாரசியம் நிறைந்தது. அதிலும் பதின்மவயதுப்பெண்கள்... ஜெசிக்கா பார்க்கரைக் கண்டவுடன் கூக்குரல் இட்டு அலறியவர்கள் எத்தனை பேர்? காதலாகிக் கசிந்து ஆனந்தக்கண்ணீர் மல்கியவர்கள் எத்தனை பேர்? ஜெசிக்கா பார்க்கரிடம் சென்று கையெழுத்து வாங்கி வந்த ஒரு பதின்மவயதுப் பெண்கள் குழுவிடம், ஜெசிக்கா எப்படிக் கதைத்தார் என்று எனக்குப் பக்கத்தில் நின்றவர் ஒருவர் வினாவ, ஒரு பிள்ளை கண்ணீரோடு ஒரு காவியம் சொல்லியதே..... அடடா அந்தக்குரலுக்கும், வா(ர்)த்தைகளோடு அசைந்த நயனங்களுக்கும் ரொறண்டோவை அப்படியேஎழுதிக்கொடுத்துவிடலாம் போல அந்தக்கணத்தில் தோன்றியது.

P9210007

ஜெசிகா பார்க்கருக்கு படம் காட்டுகிறேன் என்று ஆரம்பித்து வேறு எதையோ எல்லாம் கதைக்கின்றான் என்று நீங்கள் நினைக்கக்கூடும். யோசித்துப் பார்த்ததில் எனக்கும் ஜெசிகாவுக்கும் இரண்டு ஒற்றுமைகள் இருக்கின்றது என்று புரிந்தது. ஒன்று அவரும் என்னை மாதிரி சற்றுக் குண்டாக இருந்தது. மற்றது என்னைப் போலவே மிகவும் பிரபல்யம் வாய்ந்த நபராக இருப்பது.

P9210011
ஜெசிக்கா கையெழுத்துப் போடுகையில்

Tuesday, September 20, 2005

யுரேக்கா! யுரேக்கா! யுரேக்கா!

ஒருநாள், ஒரு பெண் வீட்டுக்கு வந்து தனது கணவனிடம், 'இத்தனை வருடங்களாக நான் அனுபவித்து வந்த தலையிடிகள் போய்விட்டன' என்று மகிழ்ச்சியாகக் கூறினாள்.

'தலையிடிகள் போய்விட்டனவா? எப்படி?' என்று அவளது கணவன் ஆச்சரியத்துடன் வினாவினான்.
எனது நண்பியொருத்தி, Hypnotistயிடம் சென்று பரிகாரம் தேடும்படி கூறினாள். Hypnotist, என்னைக் கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்த்து நானே திருப்பத் திருப்ப "I do not have a headache; I do not have a headache,I do not have a headache'என்று கூறச்சொன்னார். அந்த 'வைத்திய முறை' வேலை செய்து தலையிடிகள் இப்போது போயே போய்விட்டன என்று கூறினாள் மனைவி.

'Well, நல்ல விடயந்தானே' என்று கணவனும் மகிழ்ச்சியுடன் கூறினான்.

His wife then says, "You know, you haven't been exactly a ball of fire inthe bedroom these last few years. Why don't you go see the hypnotist and see if he can do anything for that?"

The husband agrees to try it.

Following his appointment, the husband comes home, picks up his wife and carries her into the bedroom. He puts her on the bed and says, "Don't move!, I'll be right back." He goes into the bathroom and comes back a few minutes later and jumps into bed and makes passionate love to his wife like never before. His wife says, "Boy, that was wonderful!"

The husband says, "Don't move! I will be right back."

He goes back into the bathroom, comes back and round two was even better than the first time. The wife sits up and her head is spinning. Her husband again says, "Don't move, I'll be right back."

With that, he goes back in the bathroom. This time, his wife quietly follows him and there, in the bathroom, she sees him standing at the mirror and saying,

'She's not my wife. She's not my wife. She's not my wife!'

His funeral services will be held on Wednesday.

மேலே உள்ளிட்ட பகுதியை, என்னோடு வேலை செய்யும் தோழியொருத்தி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். முக்கியமாய் இறுதி வசனம் என்னை மிகவும் பாதித்தது. எனது இனத்தைச் சேர்ந்த ஒருவர் (வேறு எது? ஆணினம்தான்) கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்று எனது புலனாய்வு மூளையை கசக்கிகொள்ளத் தொடங்கினேன். யாரை வாடகைக் கொலையாளியாக இந்த பெண் நியமித்திருப்பார் என்று யோசிக்கையில் இன்னொரு தோழி அனுப்பிய மின்னஞ்சல் வந்து சேர, கொலையாளி யார் என்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டேன், யுரேக்கா யுரேக்கா!

cat
தேடப்படும் கொலையாளியின் படம்

Thursday, September 15, 2005

சாப்பாட்டுப் பரிசுப் போட்டி

நள்ளிரவில் வீட்டை விட்டுத்துரத்தப்பட்ட இந்த பாவாத்மா யார்?

unknown

இந்த பாவாத்மா யார் என்றும் அவர் வீட்டை விட்டுத்துரத்தப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்றும் சரியாகப் பதில் கூறும் மூன்று நபர்களுக்குப் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

முதலாம் பரிசு: மதி வைத்துத்தரும் கத்தரிக்காய்ப் பாற்கறி
இரண்டாம் பரிசு: பெயரிலி காலையில் திருடிச்சாப்பிடும் நித்திலனின் சீரியல்
மூன்றாம் பரிசு: தங்கமணி ஆபிஸில் பதுக்கி வைத்திருக்கும் 'வாயப்பயம்'

ஆகா, புதையல் மீண்டும் கிடைத்துவிட்டது. தலையங்கத்தை மாற்றி விட்டிருக்கின்றேன் . இனி மலையாள மாந்திரீகம் எல்லாம் செல்லாது :-)

ஆனால் போட்டிட்டு எடுத்திடுவன்

நான் படம் போடும்போதும் எடுப்பேன். படம் போட்டாப்பிறகும் எடுப்பேன். ஏன் படம் போடமல் கூட எடுப்பேன்.

P9120021
(sept 13/2005 @ BBQ party)

கனபேருக்கு இப்ப மதியவுணவு நேரமாய் இருக்கும் என்பதால், சாப்பிட மறந்து யாராவது கடுமையாக வேலை (வேறு எங்கு தமிழ்மணத்தில்தான்) செய்துகொண்டிருந்தால் போய் கெதியாய் உங்கடை மதியவுணவை மறந்துவிடாமல் சாப்பிடுங்கோ என்று நினைவூட்டத்தான் இந்தப்படம். மேலும் hotஆவி ஆகி கொதித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த cool photo வைப் பார்த்தாவது warm ஆகுவார்கள் என்று நம்பி(க்)- கை வைக்கின்றேன் இங்கே.

Wednesday, September 14, 2005

இதுதானய்யா பரிஸ்

Tan
Downtown Torontoவில் திரையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு விளம்பரம் (sept 13/05, lunch time)

Tuesday, September 13, 2005

'சே'

che

பட உரிமை: பெயரிலிக்கும் அவரது வழக்கறிஞரான இரவிக்கும் மட்டுமே உரித்து. எவராவது சேயின் படத்தை மீள்பிரசுரம் செய்யப்போகின்றீர்கள் என்றால் அவர்களிடம் அனுமதி வாங்குமாறு அன்புடன் வேண்டபடுகின்றீர்கள்.

நமது நண்பர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறிய ஆவலாக இருப்பவர்களுக்கு அவர்கள் இருவரினதும் படம் கீழே தரப்படுகின்றது :-).

pic3

Sunday, September 11, 2005

@ Montreal

இதைக் கேட்டுக்கொண்டும் படம் பார்க்கலாம்.

Sivalingam
வல்மொறின் முருகன் கோயிலில் முன்னுள்ள சிவலிங்கம்

Church
தேவாலயத்தின் உச்சியிலிருந்து

Power Rangers
தேவாலயத்தின் முன் மூன்று பயில்வான்கள்

Coming
வாழும் நகர் நோக்கித் திரும்புகையில்

Saturday, September 10, 2005

நீர்க்குமிழ் வாழ்வு

Aaduppu

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.

-பிரமிள் (பிரமிள் கவிதைகள்)

Thursday, September 08, 2005

குதூகலக் கவிதைகள்

Chillin' (Sep 03,2004 afternoon)

mtl

மெளனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மெளனம்

எளிதாகவேயிருக்கின்றது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மெளனத்தைப் பற்றிக்கொள்வது

-சல்மா (பச்சை தேவதை)

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

keerti

இழப்பு

துரிதகதியில்
வரவேண்டியதாயிற்று

எதிர்ப்பட்ட
அந்த அழகு மலரைக் கடந்து.

-அமரதாஸ் (இயல்பினை அவாவுதல்)

பொங்கலோ பொங்கல்

photozzz 085

குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு

ஜெ.பிரான்சில் கிருபா (மெசியாவின் காயங்கள்)