நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்
சுந்தர ராமசாமியின் மறைவுக்கான நினைவஞ்சலிக் கூட்டம், ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்தது. வழமைபோல நான் 'நேரத்துக்கே' சென்றதால் அ.முத்துலிங்கம், சு.ராவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்ததைத்தான் எனது ஆரம்பமாகக்கொள்கின்றேன். அ.முத்துலிங்கம், கனக செல்வநாயகம், தேவகாந்தன், திருமாவளவன், சேரன், வ.ந.கிரிதரன், பா.அ.ஜயகரன், எம்.கே.மகாலிங்கம், 'காலம்' செல்வம், சிவதாசன் என்று பலர் சு.ராவுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்தனர். 'சு.ராவுடனான படைப்புக்களுக்குள் போகாமல் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்' என்று தலைமை வகித்த எம்.கே.மகாலிங்கம் கேட்டதால், அனேகர் சு.ராவுடனான தமது தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சு.ரா பழகுவதற்கு அருமையான மனிதர் எனவும், தான் பேசுவதற்கான வெளியை (space) உருவாக்குவதில் கவனம் எடுப்பதைவிட, எதிரே இருப்பவர் பேசுவதற்கான வெளியை எப்போதும் உருவாக்கி கொண்டிருந்தவர் என்பதை நான் சு.ரா பற்றி இவர்களின் பேச்சினூடாக விளங்கிக்கொண்டேன். அனைவரின் உரைகளிலும், சு.ராவின் சடுதியான இழப்பை சற்றுத் தாங்க முடியாதது போல இருந்தது. சு.ரா தனது இறுதிக்காலத்தில், ஒரு புதிய நாவலை எழுதிக்கொண்டிருந்தார் என்றும் அது எவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை என்றார் அ.முத்துலிங்கம். சிவதாசன், சு.ரா தனது இறுதிப் பயணத்தைச் சடங்குகள் இல்லாமற் செய்ததன் மூலம், 'பிராமணர்', 'பிராமணியம்' போன்று அவருக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இல்லாமற் செய்திருக்கின்றார் எனத்தன் பேச்சில் குறிப்பிட்டு அப்படிச் செய்ததற்காய் தலைவணங்குகின்றேன் என்றார். தேவகாந்தன், சு.ரா, ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள் நடத்திய கூட்டத்திலும், கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவிலும் சு.ராவின் பங்கும் பெருமளவில் இருந்தது என்று குறிப்பிட்டார். திருமாவளவன், தனது முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்டதற்கு சு.ராவே காரணமென்றார். இரண்டாவது தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதுப்படுகின்ற காலத்தில், பசுவய்யாவின் கவிதைகளை தினம் ஒன்றாவது படித்திருக்கின்றேன், அந்தவகையில் சு.ரா தனக்கு குருவென்றார். 'காலம்' செல்வம் சுரா நட்புக்காய் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார், முக்கியமாய் குமுதம் போன்றவற்றை சு.ரா விமர்சித்துவிட்டு தீராநதியில் எழுதப்போனது நட்பின் நிமிரத்தம் என்றார். அதை, தான் விமர்சித்தபோது, ஒத்துக்கொண்டு அது தனது நெருங்கிய நண்பர் மணாவுக்காய்தான் நேர்காணலைக் கொடுத்திருந்தேன் என்று குறிப்பிட்டாராம். சு.ரா சென்னைக்கு வரும்போது கட்டாயம் ஒவ்வொருமுறையும் இரண்டு பேரைச் சந்திப்ப்பேன் என்று கூறியபோது, தான் ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் ஆக்கும் என்று நினைத்தால், சின்னக்குத்தூசியையும், மணாவையும் என்று சு.ரா கூறியபோது தனக்கு அது ஆச்சரியமாக இருந்தது என்றார் 'காலம்' செல்வம். எந்தக் குறிப்பும் இல்லாமல் சு.ராவின் சில கவிதைகளையும், நாவல்களில் வரும் பகுதியையும் அப்படியே செல்வம் ஒப்பித்தபோது, சு.ராவின் பாதிப்பு எவ்வளவு செல்வத்திடம் உள்ளது என்று விளங்கியது. முக்கியமாய், தனக்கு எமர்ஜென்சிக்காலத்தில் இந்திராகாந்திக்கு எதிராய் சு.ரா எழுதிய கவிதை பிடிக்கும் என்றார். அதிலும் 'இது உறக்கம் அல்ல தியானம்' என்ற வரிகள் தன்னை ஒருகாலத்தில் பாதித்தது என்று செல்வம் குறிப்பிட்டது நினைவிலுண்டு. சு.ராவுகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டால் நன்றாகவிருக்கும். எனெனில் அந்த விருதின் மூலம் அவரது படைப்புகளை ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்த்து அரசு வெளியிடும் என்பதால் சில்லறைப் படைப்புகளுக்குப் பதிலாய் சு.ராவின் படைப்புக்கள் பிற மொழி பேசுபவர்களை அடைந்தால் நல்லதே என்று வ.ந.கிரிதரன் குறிப்பிட, காலம் செல்வம் இடைநிறுத்தி, 'என் முன்னோர்களுக்கு கிடைக்காத விருதை எனக்குத் தந்தால் அவர்கள் முகத்திலேயே வீசி எறிவேன்' என்று சு.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கின்றார் என்பதை நினைவு கூர்ந்தார்.
வழமைபோல கூட்டம் முடிவதற்கு முன்னரே,வெளியில் நின்று சில நண்பரகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன். ரொறண்டோவில் நடந்த சு.ராவுடனான, தளையசிங்கத்தின் 'ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி' விவாதத்தைப் பற்றிச் சில விடயங்களை வ.ந.கிரிதரன் நினைவுபடுத்தினார். அப்போது நான் கனடாவுக்கே வரவில்லை என்பதால் அதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 'காலம்' செல்வமும் இணைந்துகொள்ள, 'அந்த மாதிரி சு.ராவின் பாதிப்பு உங்களுக்கு இருக்கிறது' என்று நான் வழமை போல வாயைப் பிளந்து சொல்ல, முந்தி 'காலம் என்றால் சு.ரா, சு.ரா என்றால் காலம்' என்று ஒரு காலம் இருந்தது என ஒரு நண்பர் குறிப்பிட்டார் :-) . வேறொருவர், சு.ரா என்றவுடன் சில நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஆனால் ஜெயமோகனுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல ஒரு நாவலும் இல்லை என்றார். ஜெயமோகன் ஏன் பேச்சின் நடுவில் ஓடி வந்தார் என்றால் அதற்கு நான்தான் காரணம். 'காலம்' செல்வம் யாரோ ஒருவருக்கு 'இவன் நமது கூட்டாளி' என்று அறிமுகப்படுத்தி 'என்ன நான் சொல்வது சரிதானே?' என்று என்னைக் கேட்க, 'ஓம் எல்லோருக்கும் கூட்டாளிதான், அது சரி நமது கூட்டணி இப்போது காலச்சுவட்டுடனா அல்லது ஜெயமோகனுடனா?' என்று நான் திரும்பிக் கேட்கும்போதுதான் சும்மா இருந்த ஜெயமோகனும் பேச்சினிடையே வந்துவிட்டார். மற்றப்படி, நான் முன்பு வேறு சில பதிவுகளில் குறிப்பிட விரும்பினாலும், பல நண்பர்களுக்கு அவர்கள் மீது நான் எழுத்தில் வைக்கும் விமர்சனங்கள் தெரிந்தும், விமர்சனம் வேறு நட்பு வேறு என்று இயல்பாய் அவர்கள் பேசுவதை பெரிய விடயமாகக் கருதுவதைக் குறிப்பிடவேண்டும்.. காலம் புத்தகங்களுக்கு விமர்சனங்கள் வைத்திருக்கின்றேன். தேவகாந்தனின் 'கதா காலம்' புத்தக வெளியீட்டு விழாவுக்கும் எனது கருத்தை எழுதியிருக்கின்றேன். அ.முத்துலிஙகத்தின் படைப்புக்களை பல பொழுதுகளில் கடுமையாகவே விமர்சித்திருக்கின்றேன். சுமதி ரூபன், திருமாவளவன் போன்றவர்களுடன் சில விடயங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் எவரும் முகத்தைத் திரும்பிக்கொண்டு போகாதது ஆறுதலாயிருந்தது. காலம் செல்வத்தோடு நகைச்சுவையாகக் கதைக்க முடிந்தது. அ.முத்துலிஙகம் 'எப்படி இருக்கின்றீர்? என்றபோது, அவரது சுகம் குறித்து (சற்று சுகவீனமாய் இருக்கின்றார்) கேட்கமுடிந்தது. தேவகாந்தனுடன் 'பறை'யில் புதிதாய் எழுதும் தொடர் பற்றி இரண்டு வரி பேச முடிந்தது. சுமதி ரூபனிடம், இலண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது என்று விசாரிக்க முடிந்தது. திருமாவளவன், றஷ்மியின் புதிய
தொகுப்பை காசு வாங்காமலே தந்து வாசி என்று அதே பழைய நட்புடன் இருந்தார்.
கலைச்செல்வன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் மரணங்கள், இன்னும் இந்த நண்பர்களைப் புரிந்துகொண்டு பழகவேண்டும் என்ற தவிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகக்குறைந்தது அவரவர்களின் உடல் நலங்களிலாவது கவனமாக இருங்கள் என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகின்றது. சேரனைச் சிலவருடங்களுக்கு முன் கண்டதற்கும் இப்போது பார்ப்பதற்கும் தன்நிலை குறித்து கவலை இல்லாது திரிவது போன்ற எண்ணத்தை தர, சற்றுக் கவலையாய் இருந்தது. நாங்கள் வெளியே நிற்கவும் கூட்டமும் முடிந்துவிட்டது. எம்.கே மகாலிங்கம் என்னைக் கண்டுவிட்டு, 'உம்மையும் இரண்டு வரி பேசச் சொல்லலாம் என்று தேடினால் நீர் வெளியில் வந்துவிட்டீர்?' என்றார். எழும்பி நின்று இரண்டு வரி பேசுவதற்குள், நாலைந்துமுறை பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், 'எனக்கு சு.ராவோடு தனிப்பட்ட அனுபவம் என்று ஒன்றுமில்லைத்தானே' என்று சமாளித்துவிட்டேன்.
கண்ணன் குறிப்பிட்ட மாதிரி, சு.ரா ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார் போலத்தான் எனக்கும் தோன்றியது. மேலும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்க்காத பிக்கல் பிடுங்கள் இல்லா வாழ்வையும், தனது பிள்ளைகளையும் பிறர் குற்றஞ் சொல்லமுடியாத நிலையில் ஒரு தகப்பனாய் நின்று வளர்த்துவிட்டும் போயிருக்கின்றார். அந்த வகையில் சு.ராவின் வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது. பா.அ.ஜயகரன் குறிப்பிட்ட மாதிரி, இனித்தான் சு.ராவை நிரம்ப (மீள)வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்ற கருத்தைத்தான் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியெ எனக்காய் கொண்டு வந்த செய்தியாக இருந்தது. தமது மறைவின் பின்னும் தமது இருப்பை அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் விட்டுச் செல்பவர்கள் உயர்ந்த படைப்பாளிகள், சு.ராவும் அவர்களில் ஒருவர்.
12 comments:
Sorry, I just have found lots of mistakes on this above post. I will correct them ASAP. Thank you.
பதிவுக்கு நன்றி.
---தான் பேசுவதற்கான வெளியை உருவாக்குவதில் கவனம் எடுப்பதைவிட, எதிரே இருப்பவர் பேசுவதற்கான வெளியை எப்போதும் உருவாக்கி கொன்டிருப்பவர் ---
என்னுடைய மிகச்சிறிய அனுபவத்தில், நானும் இதை உணர்ந்தேன்!
டிஜே,
அருமையான பதிவு©
அதற்காக ப்ரோவின் நன்றி©
விபரங்களுக்கு நன்றி. பதிவுகளுக்கு (கிரிதரனுடையது அல்ல ;-)) அப்பால், உயிரோடு இருக்கும் படைப்பாளிகளைப் பற்றிப் புரிந்துகொள்ள, இறந்து போகும் ஒரு படைப்பாளிதான் உதவுகின்றான் என்ற சந்தேகம் எனக்கு நிரம்பி வழிவதுண்டு. சுராவின் மரணமும் அதையே வெளிக்கொணர்ந்திருக்கின்றது. சுராவினைக் காட்டமாக விமர்சித்தவர்கள் இடதுசாரிகள்தானாமே?
டீசே
நிகழ்வில் முதல் உரை என்னுடையது தவற விட்டு விட்டீர்கள். சுராவின் மறைவின் போது நான் லண்டனில் நின்றேன். அதனால் உடன் தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்துடன் கதைக்க முடியவில்லை. இன்றுதான் கண்ணனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. எப்போது மிகவும் சந்தோஷமாகக் குரலை உயர்த்திக் கதைக்கும் கண்ணனின் குரல் மிகவும் சோர்ந்து போய் இருந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். தாயாரும் மிகவும் துவண்டு போயுள்ளதாகக் கூறினார். எனக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
சுரா என்னோடு அம்மா போட்டு மிகவும் அன்பாகவும் கிண்டலாகவும் கதைக்கும் ஒருவர். வயதுக்கு மூத்தவர் பெரிய எழுத்தாளர் என்று நான் கொண்டிருந்த தயக்கத்தை ஒரு நொடியில் போகச் செய்து சரளமாக உரையாடும் ஒரு நல்ல நண்பர் என்பது என் எண்ணம். நிச்சயமாக அவரது மறைவு பற்றி அறிந்த போது மிகவும் வேதனையாகவும் திகைப்பாகவும் இருந்தது.
டி சே, இந்தப்பதிவுக்கு நன்றி ப்ரோ.
அருமையான பதிவு©
அதற்காக ப்ரோவின் நன்றி©
ன்றி தமிழன் அவர்களே சு.ரா வின் படைப்புகளை படித்து ஈர்க்கப்பட்டு அவரை ஒரு முறையேனும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு முடியாமல் போனவன் நான். அவருடைய காகங்கள் தொகுப்பை தவிர அனைத்து புத்தகங்களையும் வாங்கி வாசித்திருக்கிறேன். என்னுடைய படைப்பு முயற்சிகளுக்கும் மானசீக தூண்டுதலை அவரிடமே பெற்றேன். அவர் தன் தகுதிக்கு உரிய கவனிப்பை பெறவில்லை என்ற உணர்வு என்னிடம் உள்ளது. முக்கியமாக அவர் கட்டுரைகள்.
நீங்கள் எழுதியது எனக்கு மிகவும் மகிழ்சசியாக உள்ளது. பதிவுக்கு நன்றி.
good write up no ©
write ur own views also no ©
Thanks for this post.
- Suresh Kannan
டி.சே சிங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததொரு சந்திப்பில் சுரா பற்றி நிறையவே உள்வாங்கிக்கொண்டேன்.கண்ணனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூட சுராவைச் சந்திக்கவேண்டுமென்றதற்கு இந்தியா வந்தால் வாரும் என்றார்.இப்போது சந்திக்க முடியாது எனும் போது உண்மையிலேயே இழப்பாகத்தான் தெரிகிறது.அவரது எழுத்துகளைப் படித்தாவது சமனஞ் செய்யவேண்டும்
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
.....
கறுப்பி, உங்களின் உரையைக் கேட்கமுடியாமைக்கு எனது வழமையான 'நேரத்துக்கு நிகழ்ச்சிகளுக்குப் போகும் நல்ல பழக்கமே' காரணம். நீங்கள் பேசிய/கூறவிரும்பிய விடயங்களை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
.....
முத்து, சு.ராவின் படைப்புக்களை நீங்கள் நிரம்ப படித்திருப்பதால் சுராவின் படைப்புக்கள் குறித்து நேரங்கிடைக்கும்போது ஒரு பதிவு எழுதலாமே.
......
ஈழ்நாதன், நீங்கள் குறிப்பிட்டமாதிரித்தான் சு.ராவின் படைப்புக்களை வாசித்தல்தான் அவரது இழப்பைச் சமனஞ் செய்யும் என்று நானும் நினைக்கின்றேன். இன்னும் புளியமரத்தின் கதை வாசித்து முடிக்கவில்லை. அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்த கட்டம், ஒரு நெருக்கடியான காலகட்டம் என்பதால், தொடர்ந்து நாவலுக்குள் நுழைய முடியாது போகவே வாசிப்பதை நிறுத்தியிருந்தேன். ஆறுதலாக இன்னொரு முறை ஆரம்பத்திலிருந்து வாசித்துப் பார்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய நிகழ்வுக்கு என்னால் வரமுடியாமற்போயிற்று. விரிவான உங்கள் பதிவிற்கு நன்றி. (எஞ்சிய தகவல்களை நிறைவு செய்த கறுப்பிக்கும்).
Post a Comment