Thursday, October 13, 2005

பிள்ளையார்

PA100001

'அப்பம் முப்பளம் செய்து அருளிய தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே'
பிள்ளையா எனக்கு மிகப்பிடித்த கடவுள். பிள்ளையாரில், எப்போது இருந்து பிடிப்பு ஏற்பட்டது என்று யோசித்துப்பார்த்தால், போரின் நிமிர்த்கம் இடம்பெயர்ந்து அகதியாக அளவெட்டியில் ஒரு வீட்டில் தங்கி நின்ற சமயத்தில்தான் வந்திருக்கவேண்டும் போலத் தோன்றுகின்றது. அளவெட்டி, பிள்ளையார் கோயில்களுக்கும் அம்மன கோயில்களுக்கும் பிரசித்தி பெற்றவை. கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில், அழகொல்லைப் பிள்ளையார் கோயில், பெருமாக்கடவை பிள்ளையார் கோயில் என்ற சில கோயிலக்ள் இப்போதும் ஞாபகத்திலுண்டு. நாங்கள் இருந்த வீட்டுக்கருகில்தான் பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயில் இருந்தது. அதன் அரைவாசிப்பக்கம் வயல்களால் சூழப்பட்டிருக்கும். அழகான ஒரு கேணியும் இருந்ததாய் நினைவு. அந்தச் சூழலும், பழமையின் மணம் வீசிக்கொண்டிருக்கும் கோயிலோடு அங்கிருந்த பிள்ளையாரைப் பிடித்துவிட்டது. இந்தக் கோயிலின் முன்றலில்தான் தமிழ் இளைஞர்கள் தீவிரமாக ஆயுதப்போராட்டத்தில் நுழைந்த சமயத்தில், போராட வந்த சகோதர இளைஞர்களாலேயே உமைகுமாரனும் இறைகுமாரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் (பெயர்கள் சரியா?). அதன்பிறகு பிள்ளையாரை எல்லா இடங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்திருக்கின்றேன். பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் 'பிள்ளையார் துணை' என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார் (காலம் கடந்தாலும்,அதற்கு நன்றி பிள்ளையாரப்பா). ஆனால் இப்போது திரும்பி கடந்த காலத்தை கொத்துரொட்டி செய்வதற்காய் ரொட்டியை விசுறுகின்றமாதிரி திரும்பிப் புரட்டிப் பார்த்தால், எனக்கும் பிள்ளையாருக்கும் நிறைய எதிர் முறையான குணாதியசங்கள் இருந்திருக்கின்றதெனப் புரிகின்றது. முதலாவது, பிள்ளையாருக்கு அருகில் எந்த பெண்ணும் துணையாக இருப்பதில்லை (பிள்ளையாருக்கு இச்சா கிரியா என்று இரு துணைகள் இருக்கின்றதாய் எங்கையோ வாசித்தது நினைவில் இருந்தாலும) கோயில்களில், படங்களில் தனித்துதான் இருக்கிறார்). நான் அத்ற்கு முற்றிலும் எதிர்மாறானவன் (இதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா என்று நீங்கள் முணுமுணுப்பது தெளிவாய் டெசிபெல்லில் கேட்டாலும், கூறுவது என் கடமை). இன்னுமொன்று பிள்ளையார் நல்ல muscular bodyஜக் கொண்டவர் :-). பிள்ளையாருக்கு தொப்பை கூட எவ்வளவு அழகாய் இருக்கிறது பாருங்கள்.

donald_portrait

பிள்ளையார் என்னை மறந்துவிட்டிருந்தால் அவருக்கு நினைவுபடுத்த என்னுடைய பதின்மத்தில் (அதுதான் எண்பதுகளில்) எடுத்த ஒரு படத்தையும் போட்டுவிடுகின்றேன். படம் எடுத்தவர்: கார்த்திக், எடுத்த அமைவிடம்; நான் மாவிட்டபுரம் கோபுரத்தின் உச்சியில் நிற்கையில் கார்த்திக் ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து எடுத்தது.

(சரஸ்வதி பூசையில் பிள்ளையாருக்கும் உணவு படைக்கையில் எழுந்த நனவிடைதோய்தல்)

2 comments:

Sri Rangan said...

முந்தநாள் உங்கள் கோப்பையில் இருக்கும் கடலை,உளுந்து வடை,அவல் மற்றும் பொங்கலும் சாப்பிட்டேன்.என் மைத்துனி வீட்டில் இவை கிடைத்தது.கோவில்களை நினைக்கவைக்கும் பதிவு.என் ஞாபகத்தில் அதிகம் ஞாபகம் வரும் கோவில்கள் என்னைப் பாதிக்கும் விருப்புடைய இடங்கள்.வேட்டைத் திருவிழாவை மறக்கமுடியுமோ? கடலைக்காகவும்,வடைக்காகவும் தொங்கிப் பறிக்கும் நமது கைகள் இறுதியில் பெரியவர்களிடம் வேண்டும் அடி...யோசித்துப் பார்த்தால் எங்கள் ஆலயங்கள் எமக்கு ஏதோவொரு வகையில் மகிழ்வை-வனப்பை-சிறப்பைத் தந்தவை!குளித்து பூசிப் பொட்டு வைத்துப் போகும் பொண்ணை வைத்தகண் விலகாது பாhத்திருப்பதும்,பக்கத்தில் நிற்கும்போது மூக்கில் வந்து உதைக்கும் சந்தண வாசம் மனத்தை அள்ளிக் கொண்டே போகும்.பெண்களையும்,கோவில்களையும் மறந்துவிடுதலென்பது நடவாத காரியமெனக்கு.இந்த உங்கள் பதிவோடு நமது பால்யக் காலத்துக் கோவில் தரிசனங்களும் வந்து போகிறது.'அவளை எனக்குக் கட்டி வை முருகா'என்பதும்,கற்பூரத்தை இதற்காகவே அவருக்கு இலஞ்சம் கொடுத்ததும் என் ஞாபகத்தில்!அப்படி வேண்டியும்'அவள்'கிடைக்கவில்லை!ஆனாலும் முருகனை,பிள்ளையாரை,அம்மனை,மாதாவை,இப்படியெங்கள் தெய்வங்களை மறப்பதெங்கே?அவர்களோடு சேர்ந்து நமது கனவுகளுமெல்லவா பதிவு டி.ஜே.

இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், நல்லாய்தான் கோயிலில் பொழுதுபோக்கியிருக்கின்றீர்கள் போல. நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி கோயில்கள் ஈழத்தவரின் வாழ்வோடும் கலைகளோடும் பின்னிப்பிணைந்தது என்றுதான் நினைக்கின்றேன். அதைவிட எனக்கு ஆச்சரியம் தருவது என்னவென்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாய் பலர் இருந்தாலும் கோயிலின் இடத்தை தமது படைப்புக்களில் மறைத்ததில்லை. எனக்குத் தெரிந்த, நேரில் பார்த்த உதாரணம், இரவி அருணாசலம்.
.....
உங்களைப் போல, எனக்கும் half-sareeயோடு பெண்களைப் பார்க்கவேண்டும் என்பது பெருங்கனவாய் இருந்தது. அதற்கு சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றுதான் காரணம். கோயிலுக்கு என்று என்னையும் தன்னோடு எனது அண்ணா கூட்டிக்கொண்டு போவதும், பிறகு கோயிலில் பக்கத்து வீட்டு அக்காமாரிடம் விட்டுவிட்டு கடவுள் தன்னைப் பார்க்காவிட்டால் பூசை செய்யவிடமாட்டார் என்பதுமாதிரி புறப்பட்டுவிடுவார். என்னதான் மர்மம் என்பதை ஒருநாள் கண்டுபிடித்தேன். அவரது அவசரத்துக்கு காரணம் வெளிவீதியில் கோயிலைச் சுற்றும் half-saree பெண்களை 'நலம் விசாரிப்பது'. இதை நான் ஒருமுறை எதிர்ப்புற வீதியால் சுற்றிவந்தபோது கையும் மெய்யுமாய் பிடித்தனான். அன்றைக்கே நான் சபதம் எடுத்தேன்; நான் வளர்ந்தாப்பிறகு அவர் சுகம் விசாரித்த பெண்களைவிட ஒன்றிரண்டு கூடுதலான பெண்களை நலம் விசாரிப்பதென்று. ஆனால் பதின்மத்தில் கொழும்பு கன்டா என்று வந்ததால் இந்த 'கனவு' நிறைவேறவில்லை என்பதுதான் மிகவும் கொடுமையான விடயம்.