Saturday, December 10, 2005
சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள்
அற்றம் (attamm@gmail.com)
அற்றத்தின் இரண்டாவது இதழில், மாயா ஆஞ்ஜலோவின் நேர்காணல், கவிதைகள், அவரைப் பற்றிய பிரதீபாவின் கட்டுரை என்பவை சிறப்பானவை எனலாம். முக்கியமாய், பல வினாக்களை எழுப்பி சலனமடையச்செய்ய வைக்கின்ற நேர்காணல் கவனிக்கத்தது. மாயா ஆஞ்சலோவை ஒரு பக்கமாய் மட்டும் பார்க்காது அவருக்கு வைக்கப்படுகின்ற விமர்சனங்களையும் மறந்துவிடாது குறிப்புக்களாய் இந்த் இதழில் பதிவுசெய்திருந்தது நல்லவிடயம். அத்தோடு அடேல் பாலசிங்கம் எழுதிய, விடுதலை வேட்கைக்கு தான்யா எழுதிய விமர்சனமும் முக்கியமானது. அடேலை முற்றாக நிராகரிக்காமல் அடேல் எழுதிய பலவிடயங்களையும், எழுத மறந்த/மறுத்த விடயங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது அந்தக்கட்டுரை.
ஆசிரியர்களின் தலையங்கத்தில் எழுதப்பட்ட பலவிடயங்கள் தேவையற்றது போல எனக்குபடுகின்றது. எழுத்தில் முன்வைக்காத எந்த விமர்சனத்துக்கும் பதில் கூறிக்கொண்டிருத்தல் அவசியமற்றது. அதற்காய் நேரவிரயம் செய்யாமல், மேலே நகர்ந்துகொண்டிருப்பதுதான் நல்லது. மேலும் பெயர் குறிப்பிடாத ஆக்கங்களுக்கு ஆசிரிய குழுவில் இருப்பவர்கள்தான் பொறுப்பானவர்கள் என்றாலும் ஆக்கங்களுக்கு எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் நன்றாகவிருக்கும். நாளை புதிதாய் ஒருவர் ஆசிரியர் குழுவுக்கு வரும்போதோ அல்லது எவரேனும் ஒருவர் விலகிப்போகும்போதே சில சிக்கல்கள் வரக்கூடும். கூட்டாய் படைப்புக்கள் எழுதியிருந்தாலும், அனைவரின் பெயரையும் போடுவதில் கூட பெரிய பிரச்சினை இல்லையென்று நினைகின்றேன்.
காலம்
காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் அங்கீகரித்துபோவதில் நமது விமர்சகப்பெருமக்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்த இதழில் மு.பொ, ஜெயமோகனின் காடினையும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியையும் ஒப்பிட்டு எழுதிய விமர்சனம் கவனிக்கத்தக்கது.
காலம் இதழின் முக்கிய பிரச்சினையே தமிழகத்தில் வருகின்ற இதழ்களின் வடிவமைப்புடன் வருவது. காலச்சுவடு, சொல்புதிது, உயிர்மை என்று அவ்வவ்போது கூட்டணிகள் மாறுகின்றபோது, நாம் இதழைப் பார்த்தே காலம் இப்போது யாரோடு வாஞ்சையுடன் கைபோட்டுகொண்டு நிற்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இருபத்தைந்தாவது இதழ் வரை வந்துவிட்ட காலம் இதுவரை தனக்கென்று தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரத்தயங்குவது ஏனோ தெரியவில்லை. மேலும், காலம் கனடாவிலிருந்து வெளிவருகின்றது என்பதை முதற்பக்கத்தில் பார்க்காவிட்டால், எவரும் அது தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்றுதான் நம்புவார்கள். ஒரு இதழ் புலம்பெயர்ந்த சூழலில் வெளியிடும் அவலம் என்னவென்று புரிந்தாலும், 'காலம்' செல்வமும் அதன் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்களும் இது குறித்து சற்று யோசிக்கலாம். இந்த இதழில் வந்த கவிதைகள் அனைத்தையும் பெண்களே எழுதியுள்ளார்கள். ஆண்களின் கவிதைகள் நீர்த்துப்போகின்றன என்ற விமர்சனம் வைக்கப்படுகின்ற காலத்தில், சலித்துப்போன கவிதை ஜாம்பவான்களின் கவிதைகளைப் போட்டு நிரப்பாமல், புதிய கவிதை வாசிப்புக்கான சாத்தியங்களை உருவாக்குவதற்கு, காலத்தை இந்தவிடயத்தில் பாராட்டலாம்.
கைநாட்டு (karumaiyam@gmail.com)
கைநாட்டின் முதலாவது இதழ் இது. இதழிலுள்ள விடயங்களை விமர்சிக்கப்போனால் அந்த சஞ்சிகையின் பக்கங்களைவிட அதிகம் எழுதவேண்டிவரும். வெளிப்படையாகச் சொல்வதனால் அதில் எழுதப்பட்ட பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அனைவருக்கும் தாம் விரும்புவதைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கு மாற்றாய் எந்த எதிர்க்கருத்தும் எனக்கில்லை. யாராவது நீயும் அதில் எழுதிவிட்டு இப்போது விமர்சிக்கின்றாய் என்று கூறமுன்னர் எனது கவிதையொன்றும் வந்திருக்கின்றது என்பதை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன். அங்கே பேசப்பட்ட தீவிர விடயங்களுக்கு மாறாய் எனது கவிதை தனியே முழித்துக்கொண்டு, வழமைபோல தன்பாட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு நிற்கின்றது என்பதை ஒரு தேவையில்லாத உபகுறிப்பாய் எழுதிக்கொள்கின்றேன்.
பறை (www.parai.org) (info@parai.com)
பறையின் மூன்றாவது இதழ் இது. பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன் போன்றவர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நீண்ட ஆக்கங்களாய் இல்லாது, சிறு கட்டுரைகள் நிரம்பவாய் இருக்கின்றன. விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் அமிழ்ந்துபோய்க்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு(நான் உட்பட) இவ்வாறான மாற்றான சஞ்சிகைகள் வருவது நல்ல விடயம். இயலுமாயின் முன்பக்கத்தை சற்று தடித்த அட்டையில் கொண்டுவர பதிப்பாசிரியர்கள் முயலலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்ல அறிமுகம் டிசே.
பறை வாசிககுமபொழுது அது அச்சடிக்கபட்டிருக்கும் விதத்தைக் கவனித்தீரா டிஜே?
முதல் பக்கத்திலுள்ள படத்தின் மை அடுத்த பக்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.சில பக்கங்களில் தலைப்புகள் பாதி வெட்டுப்பட்ட நிலை.
டிஜே ToTamil வாசித்ததுண்டா?
www.totamil.com
அன்புள்ள டி.சே
என்னிடம் சுமார் 10 காலம் இதழ்கள் இருக்கின்றன.காலம் இதழ் கட்டமைப்பில் வெகு நேர்த்தியாக உள்ளது.
சிற்றிதழ் அறிமுகப்படுத்தும் பொழுது முகவரியையும் சேர்த்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பதிவுக்கு நன்றி
என்றும் அன்பகலா
மரவண்டு
நல்லது ப்ரோ
Romba nallathu bro :)
Romba romba nallathu bro :)
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இத்தனை காலமும் ப்ரோக்கள் மட்டுந்தான் இருந்தார்கள். இப்போது 'இன்னொரு ப்ரோ', 'மற்றொரு ப்ரோ' என்று புதிய ப்ரோக்கள் வந்துவிட்டார்கள். சரி family tree ஐ extend செய்யவேண்டியதுதான் :-).
//பறை வாசிககுமபொழுது அது அச்சடிக்கபட்டிருக்கும் விதத்தைக் கவனித்தீரா டிஜே?
முதல் பக்கத்திலுள்ள படத்தின் மை அடுத்த பக்கத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.சில பக்கங்களில் தலைப்புகள் பாதி வெட்டுப்பட்ட நிலை.//
சினேகிதி, நானும் நீங்கள் கூறியதை அவதானித்திருந்தேன். ஒரு பிரஸ்ஸும் சொந்தமாய் வைத்திருப்பவர்கள், இப்படியான விடயங்களில் கவனமாக இருக்கலாம். அதன் பதிப்பாசிரியர்களிடம் இவற்றை நான் நேரடியாகவே கூறியுமிருக்கின்றேன். மேலும் பிற நாடுகளுக்கு பறை இதழ்களை அனுப்புவது என்றால் இப்படியான தரத்தில் அனுப்புவது நல்லது அல்லவென்றும் கூற்யிருந்தேன். செலவே இதற்குக் காரணம் என்றார்கள் :-(.
...
ரொரண்டோ தமிழ் கிடைக்கும்போது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். என்னோடு படித்த மற்றும் தெரிந்த நண்பர்கள்தான் இதைச் செய்கின்றார்கள். முக்கியமாய் புலம்பெயர்ச்சூழலில் உள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி பத்திரிகை வெளியிடுவது நல்லவிடயம். அவர்கள் வெளியிட்ட, இங்குள்ள இளைஞர் வன்முறை பற்றிய சிறப்பிதழ் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மிக நிதானமாய், நேர்மையாய் அந்த விடயத்தை அணுகியிருந்தார்கள்.
நன்றி கணேஷ். முகவரியைக் கொடுக்கமுடியாவிட்டாலும், இயலுமாயின் இந்த சஞ்சிகைகளின் மின்னஞ்சல்களையாவது விரைவில் இணைத்துவிடுகின்றேன். மேலும் நான் மேலே எழுதிய பதிவில் குறிப்பிட மறந்த ஒரு விடயம். இந்தச் சஞ்சிகைகள் பிறரிடமிருந்து ஆக்கங்களை எதிர்ப்பார்க்கின்றன என்றே நம்புகின்றேன். எனவே ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் படைப்புக்களை இந்த இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமே.
கணேஷ், சஞ்சிகைகளின் மின்னஞ்சல் முகவரிகளை உங்கள் விருப்புக்கேற்ப இணைத்துவிட்டேன். காலம் இதழ் தற்சமயம் கைவசமில்லை. இதழ் கிடைத்தவுடன் அந்தா இதழின் முகவரியையும் இணைத்து விடுகின்றேன். நன்றி.
\\என்னோடு படித்த மற்றும் தெரிந்த நண்பர்கள்தான் இதைச் செய்கின்றார்கள். \\
tat's y i asked u :-)
Post a Comment