எதையாவது எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் விரைவில் விசர் பிடித்துவிடும் போலக்கிடக்கிறது. உங்கள் வழக்கில், 'விசர்' என்றால் என்னவென்று லீனா மணிமேகலை கேட்டபோது, என்னைப்போன்றவர்கள் உங்கள் முன்னால் இருக்கும்போது, இதற்கு அர்த்தம் தேடி அகராதியைப் புரட்டத்தேவையில்லை என்று பகிடிக்காய்க் கூறினாலும், விரைவில் மனச்சிதைவுக்கு ஆளானாலும் ஆளாகிவிடுவேன் போல ஈழத்தில் நடக்கும் அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.
முன்பு எல்லாம், தினமும் இரண்டோ மூன்று முறையோ ஈழத்துச் செய்திகளை இணையத்தில், பத்திரிகையில் என்று தேடித் தேடி வாசிப்பேன். பிறகு இவ்வறான செய்திகளை வாசித்து வரும் எதுவும் செய்யமுடியாத கையாலகாத நிலையையும், கோபத்தையும் பார்த்து, மெல்லச் மெல்லச் செய்திகளை வாசிப்பதை (ஒருவித தப்பித்தல் தான்) குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன்.
நேற்று தற்செயலாய்ப் பார்த்த இந்தச்செய்தி மீண்டும் மிகப்பெரும் வெறுமையை மனதுக்குள் உண்டு பண்ணியது. என்ன செய்வது என்ற இயலா நிலையில், அப்படியே வாசித்த செய்தியை எடுத்து வலைபப்பதிவில் போட்டு விட்டு படுக்க முயற்சித்தேன் (ஆங்கிலத்தில் செய்தியைப் போட்டதால் தமிழ்மணம் சேர்க்கவில்லைப்போல) . தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது என்பது ஒருபுறம் இருக்க, பழிவாங்குவது எதுவுமறியாப் பெண்கள், பச்சிளங்குழந்தை வரை போனது மிகவும் கொடுமையாக இருந்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரகள் நடக்கும் கொலைகள் எல்லாம் 'ஒட்டுண்ணிப்படைகளும்', 'தேசத்துரோகிகளும்' செய்கின்றார்கள் என்று அடித்துக்கூறுகின்றார்கள் என்றால், மற்றப்பக்கம் 'ஓமோம் பாஸிசப்புலிகள் மட்டுந்தான் இதையெல்லாம் செய்கின்றார்கள்' என்று சுலபமாய் எழுதித்தள்ளுகின்றார்கள்.
இப்போது என்னை அதிகம் பாதித்துக்கொண்டிருப்பது, மீண்டும் கோரமாய் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ள தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. கிழக்கில் அந்த மக்களில் ஒருவராய் நின்று பார்க்காவிட்டாலும், வெளிநாடுகள் மிகப்பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையிலும், ஏறகனவே இந்த விடயத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்ப்ட்ட புலிகள் அவ்வள்வு முட்டாள்தனமாய் முஸ்லிம்கள் பிரச்சினையில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் தோன்றுகின்றது. மேலும் கெளசல்யன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாய் இருந்தது, அவர் முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த பரிவுடன் இருந்ததும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் இணக்கத்துக்காய் தீவிரமாய் உழைத்ததும் என்பதும் கவனிக்கத்தக்கது. உயிர்மையில் எழுதுகின்ற இளைய அப்துல்லா கூட, கெளசல்யன் மரணத்தின்போது பல முஸ்லிம்கள் கதறி அழுததாயும், கெளசல்யன் அக்கறையுடன் முஸ்லிம் மக்களிடையே பணியாற்றியவர் என்றுதான் குறிப்பிடுகின்றார். இதனால் முந்தி புலிகள் முஸ்லிமகளை கொலைச் செய்யவில்லை என்பதோ, பிற விடயங்களை நியாயப்படுத்துவதோ, ஜிகாத் போன்ற முஸ்லிம் வன்முறைக் குழுக்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையோ மறைப்பதோ என்று அர்த்தம் இல்லை.
கவனமாகப் பார்த்தால், ராஸிக் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளுக்கு காரணமாயிருந்தவரும், முஸ்லிம் பெயரைக் கொண்டு (பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை) இருந்து அதிரடிப் படைகள் செய்த தமிழ்மக்கள் படுகொலைக்கு காரணமாயிருந்தவரோ, உண்மையான முஸ்லிமகள் அல்ல, 'ராசிக்' ஒரு தமிழராகவும், அந்த அதிரடிப்படை அதிகாரி ஒரு சிங்கள இனத்தவராகவும் இருந்தவர்கள் என்பதன் பின்னாலுள்ள மூன்றாம் கைகளில் பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் இரண்டு பேரும் ஏன் முஸ்லிம் பெயர்களைச் சூடி இந்தக் கொலைகளை செய்திருந்தார்கள் என்றால், கிழக்கு மாகாணத்திலிருக்கும் முஸ்லிம்கள்தான் கொலைகளைச் செய்கின்றார்கள் என்ற பிரமையை வன்மத்தை தமிழ் மக்களிடையே ஆழமாய்ப் பதிக்க முயல்வது தான். அதைத்தான் இன்றைய பொழுதிலும் மூன்றாம் கைகள் திறம்பட நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.
சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள்தான் ஒற்றைப்படையாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால், 'சனநாயகம்' 'நடுநிலைமை' பேசும் எதிர்த்தரப்புக்கு இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் போல, ஈழத்தில் விழும் கொலைகள் எல்லாவற்றையும் செய்பவர்கள் 'பாசிசப் புலிகள்' மற்றும் புலிகள் தவிர வேறொருவருமில்லை என்பதே அவர்களின் 'உறுதியான' வாதம்.
நேற்றுத்தான் இன்னுமொரு செய்தியை வாசித்தேன். யாழில் ஒரு பெண், கசிப்பு விற்றதற்கும், விலை மாதராய் இருந்தற்கும் காரணமாய் சுட்டுக் கொல்லபட்டார் என்று. இப்படியானவர்களை மண்டையில் போடப்போகின்றோம் என்றால், புலம்பெயர் தேசத்தில் எத்தனை ஆண்களை முதலில் மண்டையில் போடவேண்டும் என்று யோசித்துப்பார்க்கின்றேன். ஆனால் இந்த ஆண்கள்தான், 'ஓமோம் அவள் வேசிதான், கொடுத்த தண்டணை சரிதான்' என்று நாக்கு கூசாமல் பேசுவதில் முன்னணியில் நிற்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஒரு அமைதியான பொழுது எப்போதாவது ஈழத்தில் விடிகின்றபோது, இத்தனை கொலைகளுக்கும் மேலேதான், வீடு கட்டி, நம் துணைகளைப் புணர்ந்து, குழந்தைகள் பெறப்போகின்றோம் என்றால், அந்தக் குழந்தைகள் எப்படி பிறக்கப்போகின்றார்கள் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
குறிப்பு: இப்படி இவற்றை எல்லாம் எழுதுவது கூட, அர்த்தம் இல்லை என்பது புரிகிறது. ஆனால் இவ்வாறான செய்திகளை வாசிக்கும்போது இதைக்கூட எழுதாமல் இருந்தால், ஆரம்பத்தில் கூறியது மாதிரி விரைவில் விசர் பிடித்துவிடுமோ என்ற அச்சமே காரணமே தவிர, வேறொன்றுமில்லை.
5 comments:
"......."மனம் நொந்துகொள்வதும் ,செய்திகளைத் தொகுப்பதும் தேவையானதுதாம்.எனினும் இதற்குப்பின்னாலுள்ள அரசியலையும்,அதை வழி நடத்தும் நலன்களையும்-இந்த நலன்கள் எல்லை தாண்டிய வலுக்கரங்களோடு பின்னப்பட்டதையும் நீங்கள் பார்க்காது தப்பித்தல் எதனால்?வெறுமனவே மூன்றாவது கையென்பதைவிட ,இத்தகைய கட்டுரைகள் எழுதும்போது எதுக்கும் கட்டுப்படத் தேவையில்லை இளங்கோ!இவற்றை அலசக்கூடிய ஆற்றலுடைய நீங்கள் சரியான முறைகளில் கட்டுரைகளை எழுத விரும்பாதுபோனால் மௌனித்திருப்பதே மேல்!
//சரியான முறைகளில் கட்டுரைகளை எழுத விரும்பாதுபோனால் மௌனித்திருப்பதே மேல்!//
அதேயேதான் அதிக பொழுதுகளில் செய்கின்றேன் சிறிரங்கன். அதைவிட கிட்டத்தட்ட நாட்டைவிட்டு ஓடிவந்து தசாப்தம் தாண்டப்போகின்ற வேளையில், அங்கே இருப்பவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் ஒரு துளிதானும் உணராது, எழுதத் தொடங்குவது கூட ஒருவித குற்றவுணர்ச்சியைத் தருகின்றது. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது மாதிரி, ஏதோ ஈழத்தில் இருந்திருக்கின்றேன் என்ற உணர்வு அவ்வபோது வந்து அரற்றும்போது இப்படி ஏதோ எனக்காய் நானே எழுதவேண்டியிருக்கிறது. இடைச்செருகலாய்... இலக்கியமோ, இசையோ இன்னபிறவற்றில் உள்ள ஈடுபாட்டைப்போல, எனக்கு அரசிய்லில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை (எனது சகோதர்கள், தந்தை இதற்கு எதிர்மாறு). அதே சமயம் அரசியலைத் தவிர்த்து எந்த இலக்கியமுமில்லை என்பதுவும் தெளிவாகத் தெரியும் என்பதால், அவ்வபோது இது போன்றவற்றைப் பேசுகின்றேன். அவ்வளவே.
மேலும்,
//சரியான முறைகளில் கட்டுரைகளை எழுத விரும்பாதுபோனால் மௌனித்திருப்பதே மேல்!//
எனக்கு இதைப் பரிந்துரைக்கும் நீங்களும், பிற கட்டுரைகள் காழ்ப்புணர்வில், ஒற்றைச் சார்பில் எழுதப்படும்போது பிறருக்கும் பரிந்துரைப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஆக்குறைந்தது, நீங்கள் உங்கள் தளத்தில் இணைப்புக் கொடுத்திருக்கும் தேனீ போன்ற இணையத்தளங்களில் வரும் கட்டுரைகளுக்காவது.
நன்றி.
டிசே,
நேர்மையான பதிவு. உங்களைப்போலவே என்னக்கு இந்த நிகழ்வுகள் மன உளச்சலை
ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு அமைப்புகளும், குழுக்கழும் தமது இருப்பையும் நலன்களையும் பேண செய்யும் வேலைகள் இந்த படுக்கொலைகள். மனிதம் சிதைவதைக்கண்டு எதையும் செய்ய முடியாத நிலமை.
யார் வாழ்வது யார் சாவது என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிர்ணையுக்கிறார்கள். இந்தச் செயல்களுக்கு எதிராக எழுதலாம், பேசலாம். ஆனால், இவை எந்தவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வலுவிழந்து கொண்டே போகிறது...
இப்படியே போகிறது வாழ்வு.
-தர்சன்
தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை சீர் குலைக்க சதி! இரு சமூகங்களையும் அவதானமாக இருக்குமாறு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்.
தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை சீர் குலைக்க மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் உணர்ச்சி வசப்படாமல் அவதானமாக இருக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டிக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம் அமைப்பினர் தேசியத் தலைவருக்கு அனுப்பிய செய்தி கிடைக்கப் பெற்று அது தொடர்பான நடவடிக்ககைகளை விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடம் மேற்கொண்டுள்ளது என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் இன்று ஊடகவியலாளரிடம் நோர்வேத் தூதுவரை சந்தித்தன் பின்னர் கருத்துக் கூறும் போது தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைப்பீடம் கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளை விளக்கி கூறுமாறும் அவர்களோடு நல்லுறவுகளை ஏற்படுத்துமாறும் அறிவித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்;ப்பாணத்தில் முஸ்லிம்களை வெளியேறுமாறு சில அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட போது இது சிறிலங்கா புலனாய்வுத்துறையினதும் அதனோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களினதும் சதித் திட்டம் எனக் குறிப்பிட்ட அவர் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் இன்றி அவர்களின் தாயகத்தில் வாழமுடியும் எனவும், தமிழ் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்திற்காகவே விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Antha sinhala ranuva athikariyin
muslim peyar:MUNAS
Post a Comment