ட்சுனாமி நினைவுகூர்தலும் பின்நோக்கிய சில பார்வைகளும்
இன்று ஸ்காபுரோ நகரின் நகரசபை திறந்தவெளி அரங்கில் சென்றவருடம் நிகழ்ந்த ட்சுனாமியின் அகோரத்தை நினைவுகூருதல் நடைபெற்றது. மிக உக்கிரமான குளிரினூடும் (பூஜ்ஜியத்துக்கு கீழே பத்துவரைக்கு இருந்தது என நினைக்கின்றேன், குளிர்க்காற்று வேறு) நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதும், அதில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்கல்லூரி/பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடப்பட்டது.
கனடாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கனடீய மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருந்ததும், அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இராணுவத்தின் தாக்குதல்களைத் கண்டித்து தமிழ்மாணவர்களுக்காய் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்னும், கனடா அரசாங்கம் ட்சுனாமிக்காய் அறிவித்த பணம் போய்ச்சேர்ந்து உருப்படியான விசயங்கள் எதுவும் ஈழத்தில் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அதையே மாணவர் ஒருவரும் பேச்சில் தெரிவித்திருந்தார். ஆக்ககுறைந்தது (அடுத்த மாதம் 23ந்திகதி வரவிருக்கும்) தேர்தலுக்கு வாக்கு கேட்க வரும் கட்சிக்காரர்களிடம் இதுகுறித்து கேள்வியைக் கேளுங்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டதை அனைவரும் கவனத்தில் கொள்ளலாம்.
தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டாமல் இருப்பதோ, அல்லது இங்குள்ள அரசியலில் எந்தப்பங்களிப்பும் செய்யாமல் இருக்காதவரை எமது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். கிட்டத்தட்ட இதைவிட இன்னும் கொடும் குளிரில் சில ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். பெப்ரவரி நான்கு எமக்கான சுதந்திர நாள் அல்ல என்று உயர்கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாள்களில் டவுன்ரவுண் ரொரண்டோவில் மிக நீண்ட ஊர்வலத்தில் நாமெல்லோரும் கத்திக் கத்தி குரல்கொடுத்தபடி நெடும் வீதிகளில் நடந்தும் எதுவும் உருப்படியாக நிகழ்ந்ததில்லை (எனக்கு அதன் நீட்சியில் மூன்றுநாள்கள் காய்ச்சல் வந்து பாடசாலைக்கு போகமுடியாதிருந்ததுதான் மிச்சம்). அதுபோல், பொங்குதமிழ் முதலாவது நிகழ்ச்சி யாழில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்தபோது, அதை நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிரிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று கனடீய அரசாங்கத்திடம் வேண்டி குளிருக்குள் ஒட்டாவாவில் இருந்த வெளிவவிவகார அமைச்சர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றோம்.
கிருஷாந்தி பாலியல் வன்புணரப்பட்ட சம்பவம் வெளியே வந்தபோது, கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்த ஒட்டாவாவில், மாணவநண்பர்கள் பேரணிக்காய் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைத் திரட்டியிருந்தார்கள். எந்த சமூகத்தின் மாணவர்களும் கனடாவின் தலைநகரில் இப்படியான ஒருவிடயத்தைச் செய்திராதபோது மிகுந்த தெம்புடனும், நம்பிக்கையுடன் அதைச் செய்திருந்தோம். குளிருக்குள் பலர் மயங்கி விழுந்தது காணாது என்று கிருஷாந்தியை அறிந்த அவரது தோழிகள் சிலரும் மேடையில் பேசும்போது உணர்ச்சிகளின் நிமிர்த்தம் மயங்கிவிழுந்ததையும் பார்த்துக்கொண்டே பாராளுமன்றத்தின் முன் குழுமியிருந்தோம். யாரோ ஒரு பெயர் தெரியாத அலுவலகரை அனுப்பி எமது மனுக்களை பெற்றுக்கொண்டபோது ஆர்ப்பாட்டங்கள் இந்த மேல்நாட்டு அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்ற உண்மை எனக்கு முதன் முதலில் விளங்கியது. எனக்குத் தெரிந்து, இந்த நிகழ்வை நடத்த பல நண்பர்கள் ஒரு செமஸ்டர் கல்வியையே தாரை வார்த்திருந்தனர். இந்நிகழ்வுக்காய் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தொலைதூரங்களில் இருந்து பயணித்து எல்லாம் மாணவ நண்பரகள் வந்திருந்தார்கள்.
அனைவரின் உழைப்பும் வீணாய்ப்போனதை, எமது குரல்கள் சப்தமின்றி அடங்கிப்போனதை, அழுத பெண்களின் கண்ணீர்த்துளிகள் பெய்தபனிக்குள் உறைந்துபோனதை, எதுவும் செய்யவியலாத இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதே அரசாஙகமும், கனடீய பத்திரிக்கைகளும், ஒரு கோடைகாலத்தில் 50ற்கும் குறைவான சிங்கள மக்கள் கலந்துகொண்டு, புலிகள் யாழ் வாசலில் நின்று ஆமிக்கு அடியடியென அடித்தபோது யாழில் இருக்கும் இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அலறியபோது, ஒட்டாவாவின் பாராளுமன்றத்தின் உள்ளேயேயும் எதிரொலித்தது. பத்திரிக்கைகள் சில முன்பக்கத்தில்கூட பெரிய செய்தியாக ஆர்ப்பாட்டச் செய்தியைப் பிரசுரித்து, தமது 'நடுநிலைமையை' எமக்குத் தெரியப்படுத்தின. அதிலிருந்து அதிகாரம் உள்ளவரின் குரல் மட்டுந்தான் அம்பலத்தில் ஏறும் என்ற உண்மை உறைக்கத்தொடங்கியது.
(இயலுமானவரை பொங்குதமிழ், தமிழர் நாள் என்று இன்னபிற மாணவர்கள் வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற்றினாலும்) என்னைப்பொறுத்தவரை, நாம் கனடீய அரசியல் பங்குபெறாதவரை, எமது வாக்குகளுக்கு வலு உண்டென்று நிரூபிக்காதவரை உருப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
அண்மையில் ஸ்காபுரோ நகரின் ஒரு எம்.பி.பியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு, பத்திரிகையில் வந்த அரசாங்க அறிவித்தலில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் மட்டுமே விபரம் வந்திருந்தது. ஆகவே அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளின் பலத்தை நிச்சயம் உணர்வார்கள் என்றபடியால் எமது இருப்பையும் தேவையும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் தெளிவாக வெளிப்படுத்தலாம்; வெளிப்படுத்தவேண்டும். கனடீய அரசால் அறிவிக்கப்பட்ட ட்சுனாமி நிதி எங்கே போனது என்ற கேள்வியுடன் வரும் தேர்தலை நாம் எதிர்நோக்குவது மிகச்சிறந்தது, அதுபோல பிற உள்ளூர் விடயங்கள் கூடவே.
மற்றும்படி ட்சுனாமியால் பாதிக்கபபட்டவர்களுக்கும், இழப்புக்களால் உள/உடல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களுக்கும் தருவதற்கு நம்பிக்கை வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பதுதான் அவலமானது. கொலை செய்யும் கலாச்சாரம், பாலன் பிறக்கும் தேவாலயத்தின் உள்ளே கூட நீண்டுவிட்டதன்பின் எதைப் பேசித்தான் என்ன பயன்?
ஒருவருக்கு கடிதம் எழுத உட்கார்ந்தபோது, யோசப் பரராஜசிங்கத்தின் கொலையை இணையத்தில் அறிந்த குழப்பத்தில், அவருக்கு இப்படி எழுதினேன்....
'இந்தக்கணத்தில் வாழ்வு என்பது, எனது அறையிலிருந்து பார்க்கையில் வெளியே வெறிசோடிப்போயிருக்கும் தெருவைப்போல வெறுமையாகவும் மிக மிக நிசப்தமாகவும் இருக்கிறது.'
அதற்கு அவர் எழுதிய பதிலைத்தான் எனக்கான குரலாக ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே விட்டுப்போகின்றேன்....
'சமூகத்தின் நிசப்தமோ, பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுக்கிறது' என்ற வரிதான் உங்களதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதே வெறுமை என்னையும் தாக்கியதுண்டு. ஆனாலும் வசந்தங்கள் வரும் நிச்சயமொருநாள்... என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய நாம்? சாளரத்தினருகே அமர்ந்து விழிவிரித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர.'
4 comments:
மிகவும் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் தான் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
என்னதான் இருந்தாலும் சிங்களம் அதிகாரபூர்வ அரசு. அதனுடைய பிரச்சாரங்களை முறியடிக்ககூடிய அளவில் நாமும் அரசியல் பலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
மீண்டும் உங்கள் கனதியான பதிவுக்கு நன்றி.
அன்புடன்
தமிழ்வாணன்
பின்னூட்டத்துக்கு நன்றி தமிழ்வாணன்.
Tamils Participation in Canadian Politics
I agree that Tamils should actively participate in Canadian politics to promote their interests. But, I strongly disagree with your implied message that the main reason to participate in Canadian politics is to advance the Tamil political causes in Sri Lanka. Advancing Tamils political causes in Sri Lanka is one of many interests of Canadian Tamils, and Tamils in general, but not necessarily the main or primary interest of most Tamils. If we make it such, it will be the exploitation of Canadian politics and resources by Tamils.
Our primary reason for participating in Canadian politics should be to promote the interest of Canada, the position of Tamils within Canada, and then the Tamils causes related to Sri Lankan politics. Reversing the order would simply be plain exploitation of Canadian politics by the Tamils.
There is an organized effort by certain Tamil groups to manage Tamil voting patterns. They will support the candidate whomever they seem fit, without consulting the wider Tamil community or the candidate’s part platform. Thus, one time they advice to vote a local Conservative candidate, in the next election they advice to vote Liberal. Most of us understand that politics is more strategic than principal based, but we must have some principals…should we not…
Consistently, NDP sides with the interests of Tamils, and consistently Tamils are “advised” to vote Liberal. It is a shame. It was a shame reveled in the “Pongu Tamil”, and soon forgotten.
Will like to discuss more about, perhaps some other time.
நற்கீரன்,
உங்கள் கருத்துக்கள் பலதுடன் உடன்படுகின்றேன். மேலே எழுதியது ஈழத்தில் நடைபெறுபவை இங்குள்ள அரசியல் அரங்கிலும் அரங்கேற வேண்டும் என்றால், நாமும் அரசியலில் பங்குபெற்றவேண்டும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தத்தான் எழுதினேன். மற்றும்படி நீங்கள் கூறுவதுமாதிரி, முதலில் கனடாவிலுள்ள முக்கிய விடயங்கள் இன்ன்பிறவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லைஅதைக் கவனத்தில் கொள்ளாவிட்டால், ஏனைய சமூகத்திலிருந்து எவ்விதமான ஆதரவும் தமிழர்கள் அரசியலில் நுழையும்போது வரப்போவதில்லை.) அதனால்தான் மேலே எழுதியதிலும், ட்சுனாமி நிதி பற்றிய கேள்விகளுடன், உள்ளூர்ப்பிரச்சினைகள் பற்றிய கேள்விகளையும் கேடகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலே எழுதியது ட்சுனாமி, ஈழ அரசியல் பற்றிய இங்குள்ள நிலைப்பாடு பற்றியதே தவிர, இங்குள்ள அரசியல் பற்றியதல்ல என்பது ஒரு குறிப்புக்காய்.
இங்கிருக்கும் அரசியல் ஞானசூனியங்கள் ஆதரவு தெரிவிக்கச் சொல்லும் முறைமைகள் பற்றி எனக்கும் நன்கு தெரியும். வளாகத்தில் ஒருவருடம் லிபரலுக்கு அங்கத்துவர் சேர்க்கின்றோம் என்று வருவார்கள், அடுத்த வருடம் கொன்சவர்ட்டி கட்சிக்கு அங்கத்துவராகுங்கள் என்று தமிழ்மாணவர்களே வந்து நிற்பார்கள். தெளிவான நீண்டகால தொலை நோக்குப் பார்வையுடன் எந்தத் தமிழ் அமைப்புக்களும் கனடீய தேர்தலை அணுகியதில்லை. அதைவிடக் கேவலம், ஒற்றுமையாக இருந்து வெல்ல வேண்டிய உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப்படாத விடயம். இந்த முறை நிச்சயம் கொன்சவர்ட்டியை வழக்கம்போல (இனவாதம், ஓரினப்பால் திருமணம் எதிர்ப்பு இன்னபிற விடயங்களுக்காய்)நிராகரிப்பேன். சென்ற தடவை எனது வாக்கு வீணாகிப்போகக்கூடாது என்று லிபரலுக்கு அளித்தாலும் இந்தமுறை அவர்களுக்கு அளிக்கப்போவதில்லை (ஸ்பொன்சர்ஷிப் ஊழல், ரொறண்டோக் குழுக்களின் வன்முறைக்கு தீர்வு காணமுடியாமல் அசட்டைசெய்யும் முறை). என்.டி.பியிற்குத்தான் எனது வாக்கு இருக்கும். ஆனால் என்ன பிரச்சினை என்றால், அனேக இடங்களில் எவருக்கும் அறிமுகமும் இல்லாத வாக்காளர்களை நிறுத்துவதுதான் அவர்களில் மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்று நினைக்கின்றேன் (கொள்கைகள், தேர்தல் விவாதம் பிடித்திருந்தாலும்). எனது அண்ணா ஒருவர் கூறியிருந்தார், தான் இந்தமுறை லிபரலுக்குத்தான் வாக்களிக்கப்போவதாய். ஒரு தெரியாத என்.டி.பி வாக்காளருக்கு வாக்குப்போட்டு கொன்சவர்ட்டிக்காரர் வருவதைத் தவிர்க்க தனக்கு வேறுவழியில்லை என்றார். அப்படித்தான் பலர் என்.டி.பிக்கு வாக்களிக்க விரும்பினாலும் கொன்சவர்ட்டிக்காரர்கள் வரக்கூடாது என்று லிபரலுக்கு வாக்களிக்கின்றனர் என்று நினைக்கின்றேன்).
மாணவர்கள், பெண்கள் போன்றவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதில் என்.டி.பி மீது மரியாதை இருந்தாலும், ஏனைய கட்சிகள் செல்வாக்காய் இருந்து வெல்லும் இடங்களில் மாணவர்களையும், பெண்களையும் நிறுத்தி தாங்கள் வெல்லக்கூடிய தொகுதிகளில் ஆண்களை நிறுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் என்.டி.பியில் உண்டு.
நற்கீரன்,நீங்களும் கனடீய தேர்தல் குறித்து விரிவாக எழுதினால் நன்றாகவிருக்கும்.
Post a Comment