என்னவொரு அற்புதமான படம். தமிழ்ச் சினிமாவின் இன்னொரு மைற்கல் அது. உலகச்சினிமாத் தரத்திற்கு தமிழ்த்திரையை உயர்த்திவிடும், எவரும் தவிர்க்காது பார்க்கவேண்டிய வர்ணச்சித்திரம். ஈவ்-ரீஸிங் போன்றவற்றை just like that மாதிரி எடுக்கவேண்டும் என்ற அறிவுரை கூறும் அருமையான படம். நாயகன் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை செய்வது அந்த நல்ல காரியத்தைத்தான். அடுத்த ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கப் பயமாயிருக்கிறது. பாலியல் வன்புணர்வையும் just like that மாதிரி எடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
படத்தின் நாயகனைப் பார்த்து, 'உனக்கு லூசா லூசா'? என்று பாவனா அடிக்கடி கேட்பார். முதலில் விளங்கவில்லை, ஏன் இப்படி பாவனா கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்று. பிறகுதான் நன்கு விளங்கியது. பாவனா நாயகனைக் கேட்கவில்லை, திரையிலிருந்து படம் பார்க்க வந்த எங்களைப் பார்த்துத்தான், இப்படியொரு அற்புதமான படத்தைப் பார்க்க வந்த 'நீங்கள்தான் லூசு லூசு' என்று சொல்லியிருக்கின்றார் போலும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று திரையரங்குச் சென்ற எங்களை -இந்த சனியையும் இழவுச் சனியாக மாற்றி- இரத்தக்கண்ணீர் வரச்செய்துவிட்டார்கள். நகைச்சுவை என்றபெயரில் கோமாளித்தனம் காட்டுவது போதாது என்று கூடவே வாயால் டமாரமடித்து செவிப்பறையை நோகவைத்து தலையிடியைத்தான் வரச்செய்து கொண்டிருந்தார்கள். வந்த விசருக்கு எப்படி திரைச்சீலையைக் கிழிக்காமல் சும்மா வந்தோம் என்று நினைக்க இன்னும் வியப்பாய்த்தானிருக்கிறது.
'சித்திரம் பேசுதடி'யே பார்த்துவிட்டு அஸினை 'கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய்' என்று கூறிவிட்டு, பாவனாவை பீடத்தில் ஏற்றிவைப்போம் என்று எண்ணியிருந்தேன். இனி 'நான் கடவுள்' வரும் வரை அந்த முடிவை பரிசீலனை செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருக்கின்றேன்.
இந்த லூசுப்படத்தைப் பற்றிய லூசுப் பதிவை வாசிக்க வந்த நீங்களும் லூசாக ஆகக்கூடாது என்பதற்காய் இடைக்கிடை பாவனாவைச் சிரிக்கவைத்திருக்கின்றேன். ஆகவே தயவுசெய்து என்னைத் திட்டாதீர்கள் :-).