ஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காயப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இந்த வழக்கம் இருக்கின்றதா அல்லது வழக்கொழிந்துபோய்விட்டதா என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், நமது நண்பர்கள் பெண் பார்க்கப்போனால் எப்படியிருக்கும் என்று கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை சற்று நழுவவிட்டேன்.
இனி...............
கானா பிரபா:
பி: வாவென் மலையாளச் சேச்சியே...நானுன் பட்டியாய் காலம் முழுக்க இருப்பேன். உன் கொப்பர் பிடித்திருக்கா என்று கேட்டால்... கெதியாய் சொல்லடி..ஓமென்று.
பெண்: என்ன பட்டியோ....அது யாரு? ஆடு மாடுகளை அடைக்கிற பட்டியா உது?
பி: இல்லை நாய்.
பெ: என்னை நாயெண்டால் செருப்பைக் கழட்டி அடிப்பேன்.
(பிரபா மனதிற்குள்.....) ஆ...இவாவுக்கு மலையாளந்தான் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...இப்ப பார்த்தால் தமிழும் விளங்காது போல.
பெ: சரி உம்மடைபாட்டில் முழியை உருட்டாமல் இதைச் சொல்லும்..... நான் கேள்விப்படது உண்மையோ ...
பி:: என்ன கேள்விப்பட்டனீர்...?
பெ: இல்லை நீர் முந்தி யாரையோ ஒரு பெடிச்சியை வேலிப்பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்தனீர் என்றொரு கதை உலாவுகிறதே....உண்மையோ?
பி: ஆ... ஷ்ரேயா இதை உம்மட்டையும் சொல்லிப்போட்டாவோ?
பெ: அவா ஒன்டும் சொல்லவில்லை...உங்கை வலைப்பதிவுகளில் உதுதான் பெரிய நியூசாய் எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கினம்.
பி: அதொன்டும் பெரிய கதையில்லை....நான் முந்தி ரியூசனுக்குப் போகேக்கை, ரீயுசனுக்குப் பக்கத்து வீட்டிலை இருந்த ஒரு பெட்டை வேலிப்பொட்டுக்காலை என்னைப் பார்த்து அடிக்கடி விசிலடிப்பா... அது பத்தாது என்டு ஒருநாள் 'அலைபாயுதே கண்ணா' என்டெல்லோ என்னைப் பார்த்து பாடினவா...
பெ: அவா தன்ரை பாட்டில் பாடியிருப்பா உமக்கு உம்மைப்பார்த்து பாடினதாய் ஒரு நினைப்பு.
பி: கொஞ்ச நேரம் சும்மாயிரும்......இவா இப்படிப் பாடி என்னை நக்கலடித்தால் சும்மா விடமுடியுமோ..? அடுத்த நாள் அவா வேலிப்பொட்டுக்குள்ளாலை இருந்து எனக்கு விசிலடிக்க முன்னர், அவாவுக்கு விசிலடிக்க நான் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்...
பெ: ஓகோ அப்படியா..பிறகு...?
பி: யாரோ அங்காலை சரசரவென்று நடந்துவாற சருகுச் சத்தம் கேட்டுது....நான் உடனே உய் உய் உய்ய்ங்.. என்று நல்ல சத்தத்தோடு விசிலடித்தேன்....ஆனால்....
பெ: என்னப்பா நடந்தது?
பி ஆனால் நடந்துவந்தது அவாவில்லை, அவாவின்ரை தேப்பன்...அந்தாள் வந்து வேலிப்பொட்டுக்குள்ளாலை ஒணான் எட்டிப்பார்க்கிறமாதிரி பார்த்திச்சு.
பெ: பிறகு...?
பி உமக்கு வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுகிறது கைவந்த கலை போல. பிறகென்ன...அவர் துரத்த நான் ஓட....நான் ஓட அவர் துரத்த...இணுவிலிருந்து ஆரம்பித்து கோட்டை முனியப்பர் கோயிலைக் கடக்கும்வரை என்ரை மூச்சு எனக்குச் சொந்தமாய் இருக்கவில்லை.
பிரபாவிற்கு பிடித்த படங்கள்: 'ஜெயம்' ரவி மலையாளச் சேச்சிகளுடன் நடித்த -காதல் ரேஸிங்- படங்கள்.
-----------------
பெயரிலி:
காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில் உன்னைக் கண்டபொழுது நான் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கங்கள் எல்லாம் நீட்சேயாக நீட்சியடைந்து மார்க்வெஸ் நாவலில் கடைசிப்பக்கமாய் முடிந்துகொண்டிருக்கையில் உன் விரல்களிலாத காலில் வாசனையாக அலைந்துகொண்டிருந்த காற்சங்கிலியின் கோழிக்கறி சுவையில் நான் மயங்கிய அந்தக்கணமே தண்டவாளத்தில் நசிந்துபோய்க்கிடந்த பச்சையமில்லாத காளான் முனையாய் காதல் என் நெஞ்சில் வந்து குத்தத்தொடங்குகையில்....
என்னப்பா தண்ணி வேணுமோ...முற்றுப்புள்ளியில்லாது பேசினால் இப்படித்தான் மூச்சுவாங்கும்...
உனக்கெங்கே விளங்கிப்போகின்றது எனது அவதி? எனது உயிர் கண்டி தலதா மாளிகையின் புத்தரின் தந்தப்பல்லிலும், கோணமலை இராவணன் வெட்டிலும், ஷங்காய் ஷம்பெயினிலும் தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் யுகங்களைத் தாண்டிய.....
போதும் போதும் உங்கடை அலம்பலை நிறுத்துங்கோ. நான் இப்பவே உங்களைத் திருமணஞ்செய்ய ஓமொன்று சொல்கின்றேன்..
ஆகா பெண்ணே...நான் கவித்துவமாய் உரையாடியது எல்லாம் விளங்கிவிட்டதா கண்ணே?
இல்லை...இப்படியான கொடூரத்தை இன்னொரு பெண்ணும் கேட்டு தற்கொலை செய்யக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காய் ஓமொன்று சொன்னேன்.
பெயரிலிக்கு பிடித்த படங்கள்: Bombay, கில்லி, ரன்.
-----------------------
சுகன்:
புத்தனின் தாழ் பணிந்து காதல் வந்தனம் சொல்கிறேன் கண்ணே!
என்ன புத்தரோ...அவரே மனுசி வேண்டாம் என்று வீட்டைவிட்டு ஓடிபோனவர்...எனக்கும் அந்த நிலையா எதிர்காலத்தில் வரப்போகிறது?
புத்தரை புத்தராய் பார்க்காதே; புத்தர் என்பது புத்தராயுமில்லை..புத்தராய் இருக்காதது புத்தருமில்லை..
என்னப்பா ஒரே குழப்புகிறியள்....சரி கொஞ்சகாலத்துக்கு முன் முஸ்லிமாய் மாறப்போகிறியள் என்டெல்லோ கதை வந்தது...
சா...மனுசர் நிம்மதியாய் ஒருவிசயம் செய்ய இவங்கள் விடமாட்டாங்கள்...உதை யார் உமக்குச் சொன்னது?
நீங்கள்தானே மதம் கடவுள் என்டு ஒன்டும் வேண்டாம் என்கிறனியள்...பிறகேன் மதம் மாறப்போகிறேன் ...புத்தர், அல்லா என்று ஓடித்திரிந்துகொண்டிருக்கிறியள்..?
கேட்டாயடி ஒரு கேள்வி என் செல்லக்கிளியே ..இப்ப பாரும்... மதமில்லை என்று சொல்கிறதும் ஒன்டுதான்... அல்லது எல்லா மதங்களிலையும் இருக்கிறன் என்டு சொல்கிறதும் ஒன்டுதான்.
ஆ... இவர் திருப்ப குழப்பத்தொடங்கிவிட்டார்.
இப்ப என்ன சொல்கிறீர்?
உங்களைக் கலியாண்ஞ்செய்ய எனக்கும் சம்மதம்தான்....ஆனால் முள்முருங்கையை நடுகிறதுக்கு பதிலாய் எலுமிச்சை மரம் நடச்சொல்லவேணும்
ஏன்...? எதற்கு...?
பின்ன, உங்களுக்கு அடிக்கடி பித்தம் வர அதைத் தெளிவிக்க, நான் தேசிக்காய் கடையிலை வாங்கி கட்டுபடியாகுமோ?
சுகனுக்குப் பிடித்த படங்கள்: இராம நாராயணன் இயக்கிய அம்மன் படங்கள்.
-------------------
சயந்தன்:
இதென்ன பொம்பிளை பார்க்க வந்திருக்கின்றீர்....மனுசர் ஒருத்தரையும் காணவில்லை..ஒரே நாயும் பூனையுமாய் இருக்கிறதே.
அதுவா நான், நாய் பூனை படங்கள் என்னுடைய வலைப்பதிவில் போட்டவுடன் பூனை பாட்டி, பூனை தாத்தா பூனை மாமா, பூனை அத்தை என்று கனபேர் என்னோடு உறவாகிட்டினம்.
ஓகோ அதுவா... அது சரி யார் உந்தப்பூனை? எங்களைப் பார்க்கப்பிடிக்காமல் வாசற்பக்கம் ஜயப்பனுக்கு மாலை போட்டதுமாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறது?
அது வேறு யாருமில்லை வசந்தன்தான்..அவருக்கு பொம்பிளையள் என்டாலே பிடிக்காது.
அப்படியோ?
அதைவிடும் பொம்பிளை பார்க்கிற சம்பிரதாயத்திலை பாட்டுப்பாடவேண்டும் என்டுவினம். எனக்கொரு பூனைப்பாட்டு பாடிக்காட்டும்.
பூனைப்பாட்டோ?
ஓமோம்..ஏதோ ஒரு படத்தில் நமீதா 'மியாவ் மியாவ்' என்டு செக்ஸியாய் ஒரு பாட்டுப்பாடுவாவே...அதைப்பாடும்.
(அந்தப்பெண் பார்க்கின்ற புலிப்பார்வையில், சயந்தனும் அவரது பூனைப்பட்டாளமும் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்....)
சயந்தனுக்குப் பிடித்த படங்கள்: Cat woman, 101 Dalmations
--------------------
ஷோபா சக்தி:
'ஷோபா ஷோபா'
இஞ்சை பாருங்கோ என்னுடைய பெயர் ஷோபா இல்லை.
ஷோபாவின் படங்கள் பார்த்ததிலிருந்து எனக்கு எல்லோரும் ஷோபாவாய் தெரிகின்றார்கள். நீரும் ஷோபாதான்.
இந்தாளுக்கு பித்தம் கூடிப்போய்விட்டது...உதுக்குத்தான் சொல்கிறது...அடிக்கடி சாருவோடு கதைக்கவேண்டாம் என்டு.
ஷோபா ஷோபா நீ எங்கையடி போனாய்?
இதென்ன? சோபா செட்டிலை இருந்துகொண்டு ஷோபா எங்கையடி போனாய் என்டால்?
ஷோபா ஷோபா நீயின்றி என் ஒரு அணுவும் அசையாது...
இஞ்சை பாருங்கோ...நீங்கள் இப்படி திருப்பத் திருப்ப ஷோபா ஷோபா என்டு கூப்பிட பக்கத்து வீட்டு ஷோபா நாய்க்குட்டி கூட இங்கை வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கிது.
ஷோபா ஷோபா
ஜயோ என்னால் தாங்கமுடியாதிருக்கிறது...நான் அழப்போகிறன்.
(என்று கூறிவிட்டு அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழுகின்றார்...)
ஷோபாசக்தியோ 'ஷோபா, ஷோபா' என்று -குணா படத்தில் கமல் 'அபிராமி அபிராமி' என்று பீலிங்காய் கூப்பிடுகின்ற மாதிரி- அரற்றியபடி பெண்ணின் வீட்டைவிட்டுப் புறப்படுகின்றார். 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல' என்று பாடியபடி, அடுத்து 'பெண் பார்க்கப்போன சோகக்கதை' யை எழுதத்தொடங்குகின்றார்.
ஷோபா சக்தியிற்கு பிடித்த படங்கள்: முன்பு ஷோபா நடித்த படங்கள் அனைத்தும்... இப்போது -எஸ்.ரா, 'கொரில்லா' புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்ததிலிருந்து- ரஜினியின் அனைத்துப் படங்களும்.
--------------------------
சோமிதரன்:
நீர் இப்படி சிரிக்கிறதை நான் படம்பிடித்தால் ஒரு ஈழத்து ஜஸ்வர்யா உலகிற்கு கிடைப்பா...
சும்மா லொல்லுக்கதை கதைக்கவேண்டாம்
நீர் உரையாடுகிற விதம் அப்படியே நந்திதா தாஸை நினைவுபடுத்துகிறது.
சனியன்...! இந்த சாறி என்ரை உடம்பிலை நிற்கமாட்டேன் என்கிறது
அப்ப, நான் விஜய் அசினுக்கு 'சிவகாசி'யிலை மடிசார் புடவை கட்டிவிட்டதுமாதிரி உமக்கு கட்டிவிடவோ?
எங்கடை வீட்டில வளர்க்கிற நாயிற்கு பத்து வேட்டைப்பற்கள் இருக்கிறது
நாயிற்கும் சாறிக்கும் என்ன தொடர்பு?
இல்லை நீர் சாறி கட்டிவிடப்போகின்றேன் எண்டனீர்....அதுக்கு நான் உமக்கு நன்றி செலுத்தவேண்டும்தானே...
('சோமி', 'சோமி' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது)
யாரப்பா அது?
அது டிசே, ஏதோ 'சே'யைப் பற்றி கதைக்கோணுமாம்...கெதியாய் வரட்டாம்..
சேயைப் பற்றிக் கதைக்கபோகிறியளோ..இல்லை தவறணைக்குப்போய் கள்ளுக்குடிக்கப்போகிறியளோ?
இரண்டுமே எஙகளுக்கு போதை தாற விடயந்தான்.
நாசமாய்ப் போவாங்கள்...கள்ளுக்குடிக்கின்றதென்றால் போய் கள்ளைக் குடியுங்கோவன்...ஏன் எங்கடை நேரத்தை வீணடிக்கிறியள்?
(சோமி: இந்த விசரன் டிசேயோடு இருந்தால், தனக்கு கலியாணம் வாழ்க்கையிலை நடக்காது என்டு திட்டியபடி கள்ளுக்கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்குகின்றார்)
சோமிக்குப் பிடித்த படங்கள்: அஸின், ஜஸ்வர்யா சாறி கட்டி நடித்த அனைத்துப் படங்களும்.
-----------------
வசந்தன்:
இஞ்சைப்பா, நீங்கள் புட்போல் விளையாடுகிறபோதே எனக்கு உங்களில் ஒரு கண்.
என்ன ஒரு கண்ணோ...அப்ப எங்கை உம்மடை மற்றக்கண்?
அதுவும் ஒரு நாள் நீங்கள் புருஸ்லி மாதிரி பாய்ந்து ஒரு கோல் அடித்தியளே...அண்டைக்கு மயங்கின நான் இன்னும் எழும்பவில்லை
உதென்ன விசர்க்கதை...புட்போலுக்கும் புருஸ்லிக்கும் என்ன தொடர்பு.... பேய்க்காட்ட வேண்டாம்.
இதைக்கூட மறந்திட்டீங்களா...ஒருநாள் எனக்கு கள்ளமாய் விளாங்காய் பிடுங்கிக்கொண்டு வந்து வெட்கப்பட்டுக்கொண்டு தந்ததை....
சும்மா சொறிக்கதை கதையாதையும்.
இப்ப சொல்லுங்கோ... என்னைக் கலியாணம் செய்ய விருப்பமா இல்லையா?
சாத்தான்கள் எல்லாம் பெண்கள் வடிவில் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகின்றனவே...பரலோகத்திலிருக்கும் பரமபிதாவோ என்னைக் காப்பாற்ற மாட்டீரா?
இப்ப நீர் இப்படி அழுது குழறுகிறீர்.....என்னைப் பிடிக்காவிட்டால் ஏன் இங்கை வந்தனீர்...உந்தச் சந்தியில் இருக்கின்ற சேர்ச்சிற்குப் போய் பாதராகி இருக்கலாமே?
ஒமோம்...இங்கை வரமுன்னர் அங்கை போய்விட்டுத்தான் வாறன்.
பிரமச்சாரியாக இருக்கப்போகின்றீர் என்றால் ஏன் என்னைப் பெண்ணு பார்க்க வந்தனீர்?
இல்லை சேர்ச்சில் ஒரு கன்னியாஸ்திரியும் இல்லை...உம்மை ஒரு கன்னியாஸ்திரீயாக ஆக்கவெல்லோ வந்தனான்.
அம்மா அம்மா இந்த ஆள் ஒரே கெட்டவார்தைகளால் என்னைத் திட்டுகின்றார்
(அந்தப்பெண்ணின் அழுகுரல் கேட்டு அவரின் தாயார் ஓடிவந்து, அரிசி புடைக்கிற சுளகால் வசந்தனைச் சுழற்றி சுழற்றி அடிக்கத் தொடங்குகின்றார்.)
வசந்தனுக்குப்பிடித்த படங்கள்: தேவதாஸ், சலஙகை ஒலி, லவ் ரூடே போன்ற தோல்வியில் முடியும் காதற்படங்கள்.
---------------
(ஒரளவு புரிதல்கள் உள்ள நண்பர்களையே மேலே குறிப்பிட்டிருக்கின்றேன். எனினும் எவரையேனும் தனிப்பட்டுக்காயப்படுத்தின் தெரியப்படுத்தவும். அந்தப்பகுதியை அகற்றிவிடுகின்றேன்.)