Saturday, February 12, 2011

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்

(ஃபேஸ்புக்கில் பெரிய பின்னூட்டமானாதால் சில பகுதிகள் தவறியும் மாறியும் வந்தன. எனவே சேகரத்திற்காய்)

கேள்வி கேட்கத் தெரிந்த மனமே, உனக்கு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாதா?" எனப் பாடிக்கொண்டு கீழே எழுதுவதை வாசிக்கவும்(இதை 'நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா' என்ற பாடலின் 'பண்'னில் பாடினால் இன்னும் நன்று)
-----------------------------------------------------------------------
ஷோபா,நீங்கள் ஊரில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போன்றவற்றில் விண்ணராய் இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம் (நீங்கள் சொல்லாடல்/நீட்ஷே/ ஆறுமுகம் எனப் 'பாராட்டும்போது' திரும்பி நானும் 'ஜஸ்' வைக்காவிட்டால் தமிழ் மரபுக்கு முரணாகி விடுமல்லவா?). எனென்றால் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காது அப்படியே எட்டி எட்டிப் பாய்ந்து விடுகின்றீர்கள். சரி அதற்காக நானும் எட்டிப் பாய்வதா? கொஞ்சம் பொறுங்கள் வரலாற்றை மீளக்கொண்டுவருகின்றேன். அதற்கு முன்...
.........................
1.
இலங்கையில் நடக்கும் மாநாடு குறித்து நேற்றும் ஒரு நண்பரோடு கதைத்ததையே மீண்டும் எழுதுகின்றேன். இம்மாநாடு குறித்து 'ஏன் நடத்தவேண்டும்?' என்று சொல்வதற்கும் 'ஏன் நடத்தக்கூடாது?' என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதை ஒரே அறிக்கையில் இரண்டு கேள்விகளையும் முன்வைத்து நாங்கள் எழுதவேண்டும் என்று கூறியிருந்தேன். காலம் கனிந்தால் அது ஓர் 'அரி'க்'கை'யாகக் கூட மாறக்கூடும். யாருக்குத் தெரியும்.

உண்மையில் இன்று இரண்டு பக்கத்திலும் வரும் அறிக்கைகளும் தங்களது வாதத்திற்கு வலுவான் 'உண்மை'யைப் பேசுகின்றன தவிர, எல்லாப் பக்கத்தையும் 'உண்மை'களையும் பேசவில்லை எனபதே சோகமானது. அதாவது அவரவர் தங்களுக்கு பாதுகாப்பான களத்திலிருந்து தற்காப்பு ஆட்டம் ஆடுகின்றார்கள். இந்த முரண்களிலிருந்து இன்னும் பல இருக்கின்றது.  இம்மாநாடு குறித்து பொதுவில் எழுதவில்லையே தவிர என் நட்பு வட்டத்தில் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கின்றேன். எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்ற கட்டாயமா என்ன?

2.
/அறிக்கை அரசியலில் உடன்பாடில்லை/ என  எழுதியது இப்போது வெளிவிடப்படும் அறிக்கை அனைத்தும் உண்மையான நிலவரங்களைக் கதைப்பதில்லை, அது சார்ந்த/எதிர்க்கும் குழுக்களின் அரசியலை மட்டுமே முன்வைக்கின்றன. எனவே இந்த அறிக்கைகளின் பின்னாலுள்ள அரசியலில் தான் உடன்பாடில்லையே தவிர அறிக்கைகளை வெளியிடுவதில் உடன்பாடில்லை எனச் சொல்ல வரவில்லை. வரும் வெள்ளி நடக்கும் கூட்டத்திலும் நாங்கள் அறிக்கை ஒன்றுதான் சமர்பிக்க உள்ளோம். அறிக்கை உடன்பாட்டிலை எனச் சொன்னால் அது முரணாய் அல்லவா இருக்கிறது.

இப்போதுதான் உங்கள் தேங்கிப் போன அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் எழுதினேன். திருப்பியும் 'பிஸ்ரலா'?  பிஸ்ரலா வேண்டாம் வேண்டாமெனச் சனம் திருப்பிப் போனாலும், ச்சீய் இந்தா பிடியெனக் கொடுக்காமல் விடமாட்டியள் போல. மாறுங்களப்பு, எத்தனை காலந்தான் ஒரே க்ளிஷேயைச் சொல்லிக் கொண்டிருக்கப்போகின்றீர்கள்.

3.
என்னுடிய 'சிறப்பான' கருத்தை நாடு கடந்த அரசுக்கு அனுப்பக் கஷ்டப்படவேண்டாம். நான் கேட்ட கேள்வி நேரடியாக உங்களிடம். அதற்கு முதல் 'தில்' இருந்தால் பதில் அளியுங்கள்.

மேலும் நாடு கடந்த அரசின் உருத்திரகுமாரன் பக்கத்தில் இருக்கின்றார். நானே அனுப்பிக் கொள்கின்றேன். வேண்டுமென்றால் எதுவும் நெடியவனிடம் அனுப்புவதாய் இருந்தால் உங்களுக்கு அனுப்பிவிடுகின்றேன். நீங்கள் அவருக்கு அனுப்பி விடுங்கள். ஆனால் அதையும் பிறகு 'கொரில்லா' வில் வந்த றொக்கிராஜ் தலைவருக்கு அனுப்புவதற்கு எழுதிப்போட்டு பொக்கற்றுக்குள் வைத்து படங்காட்டியது மாதிரித் திரியக்கூடாது. ஓமோம். இப்பவே சொல்லிப் போட்டன்.

மற்றது, உங்களின் ஸ்ரையிலே ஒரு ஸ்டேட்மெண்டையும் எதிர்க்கால நன்மைக்காய் இப்போதே விடுகின்றேன். 'நான் ஷோபாசக்தியின் அரசியலை 100% எதிர்க்கின்றேன். ஆனால் நாடு கடந்த அரசின் அரசியலை 200% எதிர்க்கின்றேன்'.

4.
ஷோபா உங்களோடு இருக்கும் பிரச்சினை இதுதான். நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது திருப்ப 'முட்டையில் மயிர் பிடுங்குகின்ற' மாதிரி கேள்வி கேட்பது. கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையைப் போல பதில் சொல்வதற்கான தார்மீக உரிமையும் இருக்கின்றது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இனி இதற்கான சில உதாரணங்கள்.- கற்சுறாவும் நாகார்ஜூனனும் ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இட்டவுடன், நீங்கள் ரூவீற்றரில் 'நண்பர்களே கற்சுறாவும் நாகார்ஜூனனும் முக்கியாமான பின்னூட்டங்களை இட்டிருக்கின்றார்கள், அவசியம் வாசிக்கவேண்டும்' என்று அறிவிப்பு விட்டிருந்தீர்கள். ஆனால் அதே கற்சுறா நீங்கள் வெகுசன் இதழில் எழுதுவது பற்றிச் சொன்ன கருத்தை எழுதியபோது 'நண்பர்களே, நான் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்ததை கற்சுறா அம்பலப்படுத்தியிருக்கின்றார்' வந்து பாருங்கள்' என எழுதமாட்டீர்கள். ஏன் கற்சுறாவின் நியாயமான கேள்வியை மவுனமாகக் கடந்து போகின்றீர்கள்? இது கள்ள மவுனமில்லையா ஷோபா? உங்களுக்கு பாதுகாப்பாய்/சார்ப்பாய் இருக்கும் கேள்விகளை எதிரிகொள்ளும் நீங்கள் மற்றவற்றை ஒதுக்குவதை எந்த அறத்தின்பால் நியாயப்படுத்துவீர்கள்?

தேடகம் வைத்த 'தேசிய இனப்பிரச்சினைக்கான...' கருத்தரங்கில் நாடு கடந்த அரசின் பிரதிநிதியிடம் கேள்விகள் கேட்கக் கேட்க -இப்படித்தான் நீங்கள் முழுப்பூசணிக்காயை மறைத்தது மாதிரி- எட்டி எட்டிப் பாய்ந்து வேறு தோ ஏதோ எல்லாம் பதில் சொன்னார். ஏற்கனவே என்னுடைய 'சிறந்த கருத்தை' நாடு கடந்த அரசுக்கு அனுப்பப் போகின்றேன் என்றும் கூறியிருந்தீர்கள். எனக்கென்னவோ நீங்களும் நாடு கடந்த அரசிடம் இந்த விடயத்தில் எதுவும் ரெயினிங் எடுத்தியளோ என்ற சந்தேகமாய் இருக்கிறது.

- வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

- ஆனால் பெரும் முரண் என்றால், வளர்மதியின் கேள்விகளைச் சாமர்த்தியமாய் மறைத்துவிட்டு இப்போது அருள் எழிலனிடம் 'ஆயிரம் கேள்விகள் என்றாலும் கேள் பதில் சொல்கிறேன்' என மார் தட்டுகின்றீர்கள். இஃது எவ்வளவு அபத்தமானது என்று எப்போதாவது எண்ணிக்கொண்டீர்களா?

இப்படி ஃபேஸ்புக்கில் நீங்கள் முரணாக நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தும் உங்களின் நண்பர்கள் என்பவர்கள் எதுவும் உங்களிடம் சொல்லவில்லையே என்று குறித்துத்தான் கவலைப்படுகின்றேன்.

(எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான்/ தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்)

No comments: