Friday, February 17, 2006

பெரியார்!

பெரியார், '‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.

ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. 'நிறப்பிரிகை' குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது 'புதிய கோடாங்கி'- 'கவிதாசரண்' என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).

இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.

கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.

நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்

கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.

(நன்றி - உன்னதம்)

My special thankx to Keetru

8 comments:

Thangamani said...

நன்றி டிசே!

//பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே.//

தனது அடையாளம் என்ற ஒன்றை முழுமையாகத் துறந்தவராக பெரியார் பலமுறை வெளிப்பட்டிருக்கிறார். அப்படியான ஒரு முறைதான் அவர் நிர்வாணமாக நின்றது; இந்தியாவில் நிர்வாணம் விமர்சிக்கப்படுவது வேடிக்கையும், வேதனையுமானதாகும். மேலும் சமீபத்தில் பாண்டிச்சேரிக்கு வந்த ஒரு வயதான திகம்பர (நிர்வாண) ஜெயின் துறவி திக/ கம்யூனிஸ்ட்டுகளால் சூழப்பட்டு-எதிர்க்கப்பட்டது இன்றை பெரியாரியவாதிகளின் புரிதலை மட்டுமல்ல, தமிழகத்தின் பொது புத்தி எவ்வளவு குறுகி/மேற்கு மயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்று.

//பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். //

தனக்கென எந்த வழியும்/ நம்பிக்கையும்/ கோட்பாடும் இல்லாத சுயதேடலை மட்டும் தனது வழியாகக் கொண்டவர்களை, அச்சத்தாலும், சமூக அடையாளங்கள் தவிர வேறெந்த சுயபுரிதல்கள் இல்லாதவர்களும் அளவிட முயல்வது இவ்வாறுதான் முடியும். ஏனெனில் அவர்கள் காப்பாற்ற நம்பிக்கைகளும், வழிபட சமூக நிறுவனங்களும் உள்ளன.

//பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது.//

அவரது தொடக்கமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் என்பதைவிட சாதியழிந்த, சுயமரியாதைகொண்ட சமூக எனக்கொள்ளலாம். அதன் நீட்சியும் இறுதியும் இவர்களால் புரிந்துகொள்ளமுடியாதது.

எந்த ஒரு விடுதலையாளனையும் ஒரு அடையாளத்தோடு பிணைத்து ஒதுக்குதல், மூலையில் நிறுத்துதல் வழமை, எளிது. அம்பேத்காரைக் கூட அப்படி தலித் அடையாளத்தோடு பிணைக்கமுடிந்துள்ளது. ஆனால் பெரியாரை அப்படி செய்ய அவர் அனுமதிப்பதில்லை என்பதுதான் இவர்களுக்கெல்லாம் நேர்ந்த பெரிய சோகமும், வேதனையும்.

Muthu said...

//‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.//

பெரியாரின் மேல் மறுபரிசீலனை என்ற பெயரில் பல புனைவுகள் சுமத்தப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் இந்த ரமேஷ் - பிரேமின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

thiru said...

பெரியார் ஒரு தானி மனிதரல்ல. அவர் ஒரு இயக்கம். தலித் என்ற அடையாளத்தில் சிக்குண்டு கிடக்கமலே சாதிய அமைப்பையும் அதன் மூலவேரையும் கிள்ளி எறிந்த மாமனிதரவர். தலித்துகளுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என பெங்களூர் குணா போன்ற சில அரைவேக்காட்டு விளம்பரம் விரும்பிகள் பரப்ப ஆரம்பித்த புழுத்துபோன குற்றச்சாட்டு இவை. நூற்றாண்டுகள் கடந்தாலும் பெரியாரின் சகாப்தம் மூழங்கிக்கொண்டே இருக்கும். பெரியாரியம் என்பது வள்ளுவம் போல வாழ்வியல்.

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
....
திரு, பெங்களூர் குணா முற்றாக பெரியாரை நிராகரித்து மறுவாசிப்புச் செய்ததில்லை என்றுதான் வாசித்திருக்கின்றேன். இது குறித்து அறிந்த நண்பர்கள் விடயங்களைப் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

Unknown said...

//பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது//

இது 100% உண்மை. பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் எந்த திரித்தலுக்கும் செவி கொடுக்கப் போவதில்லை., இத்தகைய திரித்தல்களால் அவருடைய கொள்கைகள் அதிகமாக முன்னெடுத்துச் செல்லவேபடுகின்றன.

ROSAVASANTH said...

Dj, I am sorry to write in English. Thank you very much for recording Ramesh-prem's view. It was very exiting to read that.

மு. சுந்தரமூர்த்தி said...

//பெங்களூர் குணா முற்றாக பெரியாரை நிராகரித்து மறுவாசிப்புச் செய்ததில்லை என்றுதான் வாசித்திருக்கின்றேன்.//

பெங்களூர் குணாவின் பெரியார் பற்றிய மதிப்பீடு ரவிக்குமார் போன்றவர்களின் தலித் அறிவுஜீவிகளின் மதிப்பீடுகளைவிட மோசனமானது. ரவிக்குமாராவது பெரியார் தலித்துகளுக்கு தான் ஒன்று செய்யவில்லை. மற்ற தமிழர்களுக்காக போராடியிருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்வார். ஆனால் குணாவின் மதிப்பீடு பெரியாரின் "திராவிட ஒற்றுமை" என்ற பெயரில் அடிமைப்படுத்த நினைத்த கன்னடத்துக்காரரின் சதி என்ற பார்வையின்பாற்பட்டது. "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற அவரது நூல் கிடைத்தால் வாசித்துப் பார்க்கவும். "தமிழ் மார்க்சியவாதி" என்று எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவரை வாசித்தபோது எனக்குத் தெரிந்தது குணா ஒரு தமிழ்த் தூய்மைவாதம் பேசும் "தீவிர தமிழ் வலதுசாரி" என்பது மட்டுமே.

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
.....
சுந்தரமூர்த்தி, நீங்களும் திரு கூறுவதைப்போலத்தான் கூறுகின்றீர்கள். குணா எழுதிய புத்தகம் கிடைத்தால் வாசிக்க ஆவலாக இருக்கின்றேன். இவரது எந்தக் கட்டுரையோ அல்லது புத்தகங்களோ வாசித்ததில்லை. வேறு சிலர் எழுதிய கட்டுரைகளில் இவரைப் பற்றிக் குறிப்பிடப்படும்போது மட்டும் வாசித்து அறிந்து வைத்திருந்தேன். விபரங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
...
அவன்/ள் 'தமிழரல்ல' என்று எவர் எப்போது பேசத்தொடங்கினாலும் அலுப்பே வரும். சில வருடங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழரல்ல, மலையாளி என்று எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது எரிச்சல்தான் வந்தது. ஜெயமோகனை அவரது படைப்புக்களால் நிராகரிப்பது என்பது வேறுவிடயம். அடையாளங்களை வைத்து நிராகரிப்பது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது. அதுபோல அண்மையில் ட்சுனாமி அழிவின்போது விவேக் ஒபராய் வந்து உதவியபோது, நமது 'தமிழ்' நடிகர்கள் -இந்தி நடிகருக்கு இங்கென்ன வேலையென- வைத்த ஒப்பாரியைப் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது. பெப்ரவரியோ அல்லது ஜனவரி உயிர்மை இதழில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையில் இந்த 'நடிகரகளுக்கு' அந்த மாதிரி சாத்துப் போட்டிருக்கின்றார் :-).