Thursday, February 09, 2006

பலதும் பத்தும்

திருமாவளவன், அண்மையில் ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையைக் கேட்டபோது இரண்டு விடயங்கள் முக்கியமானதாய்ப்பட்டது.
(எனது வார்த்தைகளில்/அறிதலில்)
(1) சாதியத்தை ஒழிக்க முயலாமல் தமிழ்ச் தேசியம் பேசுகின்றவர்கள் அனைவரும் போலிகள். சாதியம் ஒழிக்கப்படுகின்றபோது மட்டுமே தமிழ்தேசியம் உண்மையில் எழுச்சி பெறும்.
(2) பெரியார், ஒரு சேரியில் பிறந்தவராய் இருந்திருந்தால், பெரியாரின் இருப்பு இத்தனைக்கும் அங்கீகரிக்கப்பட்டிருக்குமா, அவரது வாதங்கள் அம்பலத்தில் ஏறியிருக்குமா என்பதை யோசித்துப்பார்க்கலாம்.


தேசியம் ஒரு கற்பிதம் என்று முற்றுமுழுதாக ஒதுக்கமுடியாவிட்டாலும், அது குறித்த பெரிய நம்பிக்கைகள் எனக்கு இல்லை. மனிதனாக அனைத்து எல்லைகளையும் கடக்க விரும்புகின்றவனாக இருந்தாலும், எதிரே இருப்பவன் நான் இன்ன இனம், இன்ன மொழி என்று பேசி, என்னையும் ஒரு இன அடையாளத்துடன், மொழியுடன் தொடர்புபடுத்தி தாழ்வாக உரையாடும்போது மட்டும், தேசியம் என்ற ஒரு அடையாளம் எனக்குத்தேவைப்படுகின்றது. அதாவது உனது இனத்துக்கு, உனது மொழிக்கு, எந்த விததிலும் தாழ்ந்ததோ உயர்ந்தோ அல்ல, எனது மொழியும் எனது இனமும் என்பதற்கு மட்டும் எனக்கு அடையாளங்கள் தேவைப்படுகின்றது. அவ்வளவே..... மற்றும்படி சக மனிதனாய், இனம், மொழி என்பவற்றைக் கடந்து பேசுகின்ற எவருடனும் அடையாளங்களுக்கான தேவைகள் இருப்பதில்லை. அப்படி உணரவேண்டிய நிலைமைகள் வருவதுமில்லை.

திருமாவளவன் கூறுகின்ற -சாதி ஒழிப்பில்லாது தேசியம் இல்லை- என்பதை ஈழத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசியப் 'பெருமை' பேசிக்கொண்டிருப்பவர்களும் கொஞ்சம் கவனதில் கொள்ளலாம். புலம்பெயர்ந்த சூழலில், தங்களின் கொடூர சாதிய முகங்களை தமிழ் தேசியத்துக்குள் புதைத்துக்கொண்டு திரிகின்றவர்களைக் காண்கின்றபோது, இவர்கள் நாளை நமது சமூகத்துக்கான சட்டங்களையும் அதிகாரங்களையும் நிறைவேற்றுபவர்களாக மாறினால் ஈழ/புலம்பெயர் தமிழ்ச் சூழல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அவலமாக இருக்கிறது
...........
இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரையும் அம்பேத்காரையும் எதிர் எதிர் முனையில் நிறுத்தி விவாதப்புள்ளிகளை உருவாக்குவது அபாயகரமானது. நிச்சயம் பெரியாரும்,அம்பேத்காரும் ஒருவரல்ல. ஆனால் அவர்கள் எதிரிகளுமல்ல (We are not same, but we are for each other என்று உறவுகளுக்கிடையில் கூறப்படும் சொற்றொடர்களை இவர்களின் கருத்துக்களுடனும் பொருத்திப்பார்க்கலாம்). ஒருவர் நிரப்பாத இடைவெளியை மற்றவரைக் கொண்டு நிரப்புவதே இன்றைய சூழலில் அவசியமே தவிர வெற்றிடங்களைத் தொடர்ந்து வெற்றிடங்களாக விடுவது, எதிர்ச்சக்திகளுக்கு ஆதாரமாய்ப் போய்விடக்கூடும். வள்ளலாரை, நாராயணகுருவை, விவேகானந்தரை, இன்னபிற சித்தர்களை, சூஃபிகளை எப்படி மதங்கள் சுவீகரித்துக்கொண்டனவோ, அப்படியான ஒரு எதிர் நிலைக்குள் இவர்களைத் தள்ளிவிடுவது தவிர்க்கப்படவேண்டும். காந்தியைக் கூட, இன்றையபொழுதில் தலித்துக்கள், பெரியாரியவாதிகள், மார்க்சிச்வாதிகள் விமர்சனங்களுடன் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற குரல்கள் தமிழ்ச் சூழலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பெரியாரின் இந்தப்பேச்சை வாசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் என்று பெரியார் கூறுவதை பார்ப்பனீயம் (ஆணாதிக்கம் மாதிரி) என்றே எனது வாசிப்பில் எடுத்துக்கொள்கின்றேன். பார்ப்பனீயச் சிந்தனைகளை, ஆதிக்க சக்திகளாக வளர்ந்த பிற சாதிகளும் சுவீகரித்துக் கொண்டு தங்களின் கீழ்மட்டத்தில் உள்ள சாதிகளை ஒடுக்கியபடிதானே இருக்கின்றன (ஈழத்தில் வெள்ளாளத்திமிரும் அடுத்த நிலைகளில் வருகின்ற சாதிகளும், பஞ்சமரை ஒடுக்கச் செய்வதைப்போல). ஆணிவேர் பார்ப்பனியமாய் இருந்தாலும், ஆதிக்கசாதிகளாக வளர்ந்த மற்றச்சாதிகளின் சாதியச்சிந்தனைக் கிளைகளும் ஒட்ட நறுக்கப்படவேண்டும் என்ற புரிதல் அனேகருக்கு இருக்கக்கூடும்.
.......
இடியப்பம் எப்படிச் செய்வது என்ற சுவாரசியமான செயல்முறையை வாசித்தபோது, இடியப்பத்தைப் போல சிக்கலும் நுட்பமும் நிறைந்த கருத்துச் சொல்லும் ஒருவரைப் பற்றி எழுதப்பட்டதையும் வாசிக்க நேர்ந்தது.
அது இங்கே

‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா? பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.

ஈழம் குறித்து இவர் கருத்தென்ன? அதில் இவர் பங்கென்ன? மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ?


இணைப்புகளுக்கு நன்றி: www.keetru.com

7 comments:

SnackDragon said...

நல்ல அவதானங்களைச் சுட்டினீர்கள் டிசே.

மு. சுந்தரமூர்த்தி said...

டிஜே,
கருணாநிதி மீதான பாமரனின் விமர்சனத்தையொட்டி ஒரு hypothetical கேள்வி. ஈழத்தமிழர்கள் தெய்வமாக மதிக்கும் எம்.ஜி.ஆர். உயிரோடிருந்திருந்தால் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஈழம்/புலிகள் விஷயத்தில் அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்?

இளங்கோ-டிசே said...

கார்த்திக், சுந்தரமூர்த்தி கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.
.....
சுந்தரமூர்த்தி, ஈழத்தமிழர்கள் அனைவரும் (ஈழத்தமிழர்கள் சிலர், பலர் என்று நீங்கள் குறிப்பிடாததால்) எம்ஜிஆரை 'தெய்வமாக' மதிகின்றார்களா என்பது ஒருபுறம் இருக்க (ஆக்ககுறைந்தது நான் கருணாநிதியைப் போலல்லாது எம்ஜிஆரை முதன்முதலில் அறிந்துகொண்டது ஒரு நடிகராக....எனது தந்தையாரின் திராவிட, கலைஞர் ஆதரவில் எம்ஜிஆர் எதிர்த்துருவமாக-ஒரு நடிகராக மட்டுமே- நிறுத்தப்பட்டிருந்தார்...இது இங்கே தேவையில்லாத விடயமும் கூட). ஒரு - hypothetical - ஆக ஈழம்/புலிகள் விஷயத்தில் சொல்வதென்றால், எம்ஜிஆர், கருணாநிதியைப்போல, ராஜதந்திரமாய் தனக்கு கிடைப்பதைக் கணக்கிலெடுத்து ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்திருக்கமாட்டார் என்று மட்டும் ஒரு அவதானமாய்ச் சொல்லலாம். ஜெயலலிதா மாதிரி தனக்குப் பிடித்ததை தனக்குச் சரியெனப்படுவதை (ஆதரவோ எதிர்ப்போ எதுவெனினும்)வெளிப்படையாக எம்ஜிஆர் அறிவித்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.
......
பாமரனின் கேள்வியை எளிமையாக்கினால் ஏன் கருணாநிதி -புலிகளைப் பிடிக்காவிட்டால் கூட- ஈழத்தமிழர் பற்றி எதையும் கூறுவதில்லை? என்பதாய் இருக்கும்.
இல்லாவிட்டால், வலைப்பதிவர் பலரைப்போல கருணாநிதியும், புலியெல்லாம் ஈழத்தமிழர், ஈழத்தமிழர் எல்லாம் புலி
என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாரோ தெரியாது.
.......
தண்ணீர் தேசத்தைப் பாடிவிட்டு பக்கத்திலிருந்த கண்ணீர் தேசத்தை கைநழுவி விட்ட கவிஞரே என்று வைரமுத்துவைப் பார்த்து இங்கு ஒருவர் கேட்டமாதிரி, கருணாநிதியிடமும், பக்கத்திலிருக்கும் புலிகளின் தலைவரை, விட்டுவிட்டு க்யூபாவிலிருக்கும் பிடல் காஸ்ரோவைப் பார்ப்பது நியாயமா என்று எம்ஜீஆரைத் தெய்வமாக மதிக்கும் ஒரு ஈழத்தமிழர் கேட்காவிட்டால் சரி (கருணாநிதி தான் இன்னமும் சந்திக்காத,ஆனால்
சந்திக்க அதிகம் பிரியபடும் தலைவர் காஸ்ரோ என்று எங்கையோ சொன்னதை வாசித்த ஞாபகத்தில் இதைக் கூறுகின்றேன் :-) ).

மு. சுந்தரமூர்த்தி said...

பதிலின் நீளம் கருதி முதலில் இரண்டாவது விஷயத்தை எழுதிவிடுகிறேன்.

//பாமரனின் கேள்வியை எளிமையாக்கினால் ஏன் கருணாநிதி -புலிகளைப் பிடிக்காவிட்டால் கூட- ஈழத்தமிழர் பற்றி எதையும் கூறுவதில்லை? என்பதாய் இருக்கும். இல்லாவிட்டால், வலைப்பதிவர் பலரைப்போல கருணாநிதியும், புலியெல்லாம் ஈழத்தமிழர், ஈழத்தமிழர் எல்லாம் புலி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாரோ தெரியாது.//

இப்போதைய தமிழக, வலைப்பதிவு சொல்லாடலில் ஈழம்-புலிகள் என்பது பிரிக்கமுடியாததாகி விட்ட சூழ்நிலையில் அவர் ஈழத்தமிழர் என்று பேசினால் புலிகளை ஆதரிக்கிறார் என்று அர்த்தப்படுத்தமாட்டார்களா? அவரையும், நீங்கள் குறிப்பிடுகிற வலைப்பதிவர்களையும் விடுங்கள். ஈழத்தமிழர்களையும்-புலிகளையும் பிரித்துப்பேசுவதை புலிகளும், புலி ஆதரவு வலைப்பதிவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

//ஈழம்/புலிகள் விஷயத்தில் சொல்வதென்றால், எம்ஜிஆர், கருணாநிதியைப்போல, ராஜதந்திரமாய் தனக்கு கிடைப்பதைக் கணக்கிலெடுத்து ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்திருக்கமாட்டார் என்று மட்டும் ஒரு அவதானமாய்ச் சொல்லலாம். ஜெயலலிதா மாதிரி தனக்குப் பிடித்ததை தனக்குச் சரியெனப்படுவதை (ஆதரவோ எதிர்ப்போ எதுவெனினும்)வெளிப்படையாக எம்ஜிஆர் அறிவித்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.//

இதை எதிர்ப்பார்த்தேன். நான் கேட்டதற்குக் காரணமே இதுதான். நீங்கள் மட்டுமல்ல, மணிரத்தினத்தின் சினிமாவிலிருந்து டீக்கடை விவாதங்கள் வரை கருணாநிதி-எம்ஜிஆர் இருவரின் இறுகிய பிம்பங்கள் என்பதாவன முன்னவர் எதையும் சுயநலத்துக்காகவே செய்பவர், ஊழல் பேர்வழி, நேர்மையற்றவர், பயந்தாங்கொள்ளி...., பின்னவர் தன்னலமில்லா பொன்மனச்செம்மல், ஊழல் செய்யாதவர், நேர்மையானவர், மகா தைரியசாலி.... என்பது போன்ற கடந்த ஆண்டுகளின் ஊடகப் பிரச்சாரங்களால் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டவை என்பது என் நீண்டகால அவதானிப்பு. இவ்விஷயங்கள் பலவற்றில் என் சொந்த கணிப்பு பொது கணிப்புகளுக்கு நேர்மாறானது. ஈழப்பிரச்சினையில் இருவர் மீதான உங்கள் கணிப்புக்கும் இந்த அடிப்படைகளே காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும் சொல்கிறேன்.

ஈழப்போராட்டம் கூர்மையடைந்த பிறகான காலகட்டத்தைத் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் மூன்று கட்டங்களாக பிரித்துக்கொள்ளலாம்: (1) 83 முதல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை; (2) இந்திய ராணுவம் இலங்கை சென்றது முதல் ராஜீவ் காந்தி கொலை வரை; (3) ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர்.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக கொந்தளிப்பு தோன்றிய முதற்கட்டத்தில் ஈழப்போராட்டத்தை ஆதரிக்காத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை, இந்திய அரசு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உள்பட. இதற்கான புவிசார் அரசியல் காரணங்கள் இப்போது போதுமான அளவு அலசி ஆராயப்பட்டுவிட்டன. இச்சூழ்நிலையில் தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராளிக்குழுவை ஆதரித்தது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அரசியல் கட்சி-போராளிக் குழு உறவுகள் அவற்றின் பிரபலம், சித்தாந்த அடிப்படையில் அமைந்தவை. அந்த அளவில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரை புலிகளுக்கும், புலிகளுக்கு எம்ஜிஆரையும் பிடித்துப்போனதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. எதிர்க்கட்சி என்ற அளவில் திமுகவிற்கு கிடைத்தது டெலோ. (எம்ஜியார் திமுகவை எப்படி கையாண்டோரோ அதே போல புலிகளும் டெலோவைக் கையாண்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.) இவற்றை வைத்து எம்ஜியாருக்கு ஈழவிடுதலையில் தனி அக்கறை, கருணாநிதியின் செயல்பாடுகள் சுயநலம் சார்ந்தது என்பதெல்லாம் மிகையான கற்பனை.

அடுத்து இந்திய ராணுவ நடவடிக்கைக் காலத்தில் எம்ஜிஆர் இந்திய அரசோடு அனுசரித்துப் போனார். எதிர்க்கட்சியில் இருந்த, கருணாநிதி எதிர்த்தார். எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து திமுக காட்டில் மழைபெய்ய ஆரம்பித்த பிறகு புலிகள் கருணாநிதியோடு நெருங்கினர். ஆனால் அதுவும் கருணாநிதியின் சுயநலம் ஆகிவிடுகிறது. ஆட்சியிலிருந்தபோதும் கருணாநிதி ராணுவ நடவடிக்கையை எதிர்த்து, மத்தியில் தேசிய முன்னணியின் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்திய ராணுவத்தை திரும்பப்பெறவும் முக்கிய காரணமாக இருந்து தேசத்துரோகிப் பட்டத்தையும் சம்பாதித்துக்கொண்டதற்கும் ஆட்சிக்காலத்தில் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமல் சாதகமாக இருந்தார் (உ-ம் பத்மநாபா கொலையாளிகளை தப்பிக்கவிட்டது) என்ற காரணத்தால் ஆட்சியை இழந்ததற்கும் சுயநலம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

“பாரத ரத்னா” எம்ஜிஆர் இதுபோன்ற தவறுகள் செய்யமாட்டார். ஆட்சியை இழக்கவும் மாட்டார். எம்ஜியாரின் உத்தி எப்போதுமே மத்திய அரசுக்கு, அது யாராக இருந்தாலும், இணக்கமாக நடந்துக்கொள்வது மட்டுமே (பாரத ரத்னாவே இந்த விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு தான்). தன்னைவிட அதிகாரமிக்கவர்களை எதிர்ப்பது என்பது எம்ஜிஆருக்கு எப்போதும் முடிந்ததில்லை (அதிமுகவை அகில இந்திய அதிமுக ஆக்கியதிலிருந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது வரை). எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காலத்திலும், காளிமுத்து, P.H. பாண்டியன் போன்றவர்களின் மூலமாக செய்துவிட்டு தான் நல்ல பிள்ளையாகவே இருந்திருக்கிறார் (உ-ம். காளிமுத்து-யோகேந்திர மக்வானா தினசரிச் சண்டைகள், பாண்டியன் ஆனந்த விகடன் ஆசிரியரைச் சிறையிட எம்ஜிஆர் விடுதலை செய்தது போன்றவை). ஆக தனக்குப் பிடித்ததை ஜெயலலிதா மாதிரி வெளிப்படையாக செய்வார் என்பது எம்ஜிஆரைப் பற்றி தவறான மதிப்பீடு (அந்த வகையில் 90க்கு முந்தைய கருணாநிதிக்குப் பிறகு ஜெயலலிதாவின் தைரியத்தின் மீது எனக்கும் மரியாதை உண்டு).

கடைசியாக ராஜிவ் கொலைக்குப் பிறகு பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் புலிகளை ஆதரிக்கத் தயாராக இல்லை. எம்.ஜி.ஆர். இருந்திருந்தாலும் இதே நிலைதான் இருந்திருக்கும் என்பது என் தீர்க்கமான முடிபு. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால், ஈழப் போராளிகள் மீது அப்படி ஒரு பிடிப்பு இருந்திருந்தால் ராஜிவ் கொலையே நடக்காமலும் இருந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தாலும் எம்ஜிஆர் தன் அக்கறையை, ஆதரவை தொடர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே. அதுவும், கருணாநிதியை ஜெயின் கமிஷனில் போட்டு வறுத்தெடுத்ததைப் போன்று எம்ஜிஆரை செய்திருந்தால் அவருடைய ஈழவிடுதலை மீதான அக்கறை எவ்வளவு தூரம் தாக்கு பிடித்திருக்கும் என்பதை கற்பனை செய்துப்பார்க்க முடியவில்லை (சுதந்திரப் போராட்டகாலத்தில் கள்ளுக்கடை மறியிலில் ஈடுபட்டு ஒரு முறை சிறை சென்றதைத் தவிர எம்ஜிஆர் எந்த போராட்டத்திலும் கலந்துகொண்டதோ, சிறை சென்றதோ இல்லை. திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோது சுயநலத்திற்காக கூட தான் நேரடியாக போராடியது கிடையாது. அவருடைய ரசிகர்கள் தாம் போராடி சிறைக்குப் போனார்கள்).

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் ஏதோ கருணாநிதி மட்டும் தான் சுயநலத்திற்காக நேரத்துக்குத் தகுந்தமாதிரி ஆட்டம் ஆடுவார் என்ற விமர்சனத்தில் உள்ள அபத்தத்தைச் சுட்டிக்காட்டவே. இந்திய அரசை எதிர்த்துக்கொண்டு, இருக்கும் ஆட்சியை இன்னொரு முறை இழப்பதற்குத் தயாராக இருந்ததை சுயநலத்துக்கான ராஜதந்திரம் என்றால் என்ன சொல்வது? இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளுக்கு அளவுக்கு மீறி இடம்கொடுத்து, இந்திய ராணுவத்தை அவமதித்தார் என்று இந்திய தேசியவாதிகளிடம் ஒரு பக்கமும், ஈழத்தமிழர்களை ஆதரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியவாதிகளிடம் இன்னொரு பக்கமும் இடிபடுவது கருணாநிதிக்கு மட்டுமே நடக்கும். தமிழ்/தமிழ்நாடு என்ற குறுகிய மனப்பான்மையை விட்டுவிட்டதற்காக தேசியவாதிகளிடமும், புலிகளை பிரச்சினையில்லாத காலத்தில் ஆதரித்தார் என்பதற்காக தமிழ்தேசியவாதிகளிடமும் ஒருசேர பாராட்டைப் பெறும் அதிர்ஷ்டம் எம்ஜியாருக்கு மட்டுமே வாய்க்கும்.

என்னுடைய புரிதலின்படி பெரியாருக்குப் பிறகு தமிழ்ச்சூழலில் போராட்ட குணம் கொண்ட தலைவர் கருணாநிதி; பெரியாருக்குப் பிறகு அதிகமாக தூற்றப்பட்டவரும் கருணாநிதி ஒருவரே. இப்படி அதிகமாகத் தூற்றப்படுவதற்குக் காரணம் தூற்றுபவர்கள் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல பலன்பெற்றவர்களும் ஒருசேரத் தூற்றுவதாலேயே. பெரியாருக்கு இல்லாத பதவிமோகமும், அவரை அழுத்தாத குடும்பப் பாசமும் கருணாநிதியை ஆட்டிப்படைப்பதால் அவருடைய போராட்ட குணம் தொடர்ந்து மழுங்கி வந்திருக்கிறது. அதுவே பாமரன் செய்துள்ளதைப் போன்ற விமர்சனத்துக்கும் அவரை ஆளாக்குகிறது. தற்கால அரசியல் அடிப்படையில் அது சரியாகவே தெரியலாம். ஒருவேளை அவர் மறைவுக்கு பின்னால் ஆர அமர யோசிக்கும் போது, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் நோக்கும்போது, சாதகமான பிம்பம் வெளிப்படலாம். ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழப்போராட்டத்தில் அவருடைய நிலைப்பாடு என்பது வாய்மூடிக்கொண்டு மௌனமாக இருப்பது என்பதாக மட்டுமே முடியும். 1989ல் இந்திய ராணுவ நடவடிக்கையை எதிர்த்து, திரும்பப் பெறுவதில் அவருடைய பங்களிப்புக்காக குறைந்தபட்ச நன்றியை செலுத்தவும், ஆட்சியை இழந்து அவதூறுக்கும், ஜெயின் கமிஷனின் அவமானப்படுத்தலுக்கும் ஆளானதற்காக அனுதாபப்படவும் முடியாவிட்டாலும், அவர் ஆட்சியில் இருந்தால் தீவிர ஈழ ஆதரவாளர்களை பொடாவில் உள்ளே தள்ளாமல் இருப்பார் என்ற அளவிலாவது இந்த வயோதிக வயதில் அவரை வசைபாடாமல் இருக்கலாம்.

இளங்கோ-டிசே said...

சுந்தரமூர்த்தி,
ஈழத்தமிழர்/புலிகளைப் பிரித்துப்பார்க்கலாமே என்று நான் கேட்ட கேள்விக்கு எதிர்க்கேள்வி கேட்கின்றீர்கள். இதை இப்படிப்பாருங்கள், சிங்கள் இனவாத அரசாங்கங்கள், இந்திய அரசு போன்றவற்றை விமர்சனம் செய்கின்றபோது அது உள்ளடக்கும் முழுமக்களையும் உங்களைப் போன்றவர்கள் உள்ள்டக்குகின்றீர்களா என்பதைப் பொறுத்தது.

புலி ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், புலி-ஈழத்தமிழரை பிரித்துப்பார்ப்பார்களா என்று அவர்களிடம்தான் கேட்கமுடியும். என்னிடம் கேட்டால் இரண்டும் வேறுபட்டவை என்றுதான் தெளிவாகச் சொல்வேன். ஆகக்குறைந்து, ஈழம்-புலிகள் பிரச்சினைகள் பற்றி ஆதியும் அந்தமும் தெரியாத கனடீய அரசியல்வாதிகள் கூட புலிகள்-ஈழத்தமிழர் என்று பிரித்துப்பார்த்து கருத்துச் சொல்லும்போது கருணாநிதிக்கு இதுவெல்லாம் புரியாதா என்ன?

//முன்னவர் எதையும் சுயநலத்துக்காகவே செய்பவர், ஊழல் பேர்வழி, நேர்மையற்றவர், பயந்தாங்கொள்ளி...., பின்னவர் தன்னலமில்லா பொன்மனச்செம்மல், ஊழல் செய்யாதவர், நேர்மையானவர், மகா தைரியசாலி.... என்பது போன்ற //
எல்லாப் பெருங்கதையாடல்களயும் பொதுப்படையாக -நான் கூறாதபோது-என்னிலும் கட்டிவிடுகின்றீர்கள். எம்ஜிஆர் ஊழல் செய்யவில்லை என்றோ, பெண்கள் விடயத்தில் அவரை ஒப்புக்கொள்கின்றேன் என்றோ... இன்னபிற விடயங்களை இப்போது ஆராய நான் வரவில்லை. ஈழம்/புலி ஆதரவு-எதிர்ப்புதான் எங்கள் விவாதப்புள்ளியாக இருக்கும்போது மற்றப் புள்ளிகளை விவாதிப்பது அவசியமுமற்றது.

மேலும் எம்ஜிஆர் நேரடியாகக் தனது கருத்தைக் கூறியிருப்பார் என்பதுதான் எனது விவாதப்புள்ளி. தேவையான நேரத்தில் வாய் திறக்காது விடுவது ஆபத்தானதும் அவலமானதும் என்கின்றேன். உங்களுக்கு நினைவிருக்குமா தெரியவில்லை சில வருஙக்ளுக்கு முன், ஈழம் சம்பந்தமான் பிரச்சினைக்கு செக் - சிலாவாக்கியா போன்றதுதான் நல்ல தீர்வாக இருக்கும் என்றார் முதலில் கருணாநிதி. பிறகு நிலைமை தனக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிந்தபோது வழமைபோல ஒரு சர்க்கஸ் அடித்தார். ஆகக் குறைந்தது கருணாநிதி, செக் - சிலாவாக்கியா என்று வாய் திறந்து கூறியபோது ஈழ/புலமபெயர்ந்த மக்கள் அடைந்த மகிழ்ச்சி கருணாநிதியின் மீது இன்னமும் இழக்கப்படாத நம்பிக்கையை (ஜெயலலிதா மகிந்தாவை சந்திக்காததையெல்லாம் பெரிய விடயமாக எடுக்காதது, ஜெயலலிதா மீதில்லாத ந்மபிக்கைக்கு சான்று) உபகுறிப்பாய் இங்கே சேர்த்தும் கொள்ளலாம்.

கருணாநிதியுடன் எம்ஜீஆரும் இன்று இருந்திருந்தால் எனது சார்பு கருணாநிதிக்கு இருந்திருக்கும் என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு (இப்போது ஜெயலலிதா- கருணாநிதியில், கருணாநிதியின் பக்கம் சார்பு இருப்பது போல), சில விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கின்றேன்.

இராஜீவ் கொலையோடு திமுகவின் ஆட்சி போனதை விடுங்கள். அதற்கு முன், தமிழக மக்களின் ஆதரவு எப்படி ஈழம்/ஈழப்போராட்டங்களுக்கு இருந்தது என்று பாருங்கள். அதுவேதான் கருணாநிதிக்கு குரல் கொடுக்க வைத்திருக்கின்றது...அப்படியே இந்திய இராணுவத்தை வரவேற்காத அணுகுமுறையும் என்று கூட விதண்டாவாதம் செய்யலாம். பத்மநாப கொலையாளியைத் தப்பவிட்டதுக்கு கருணாநிதியின் உள்ளார்ந்த ஆதரவு என்பதைவிட அவர் அன்றைய தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தார் என்றே கொள்ளமுடியும்.. ஒரு இயக்கத்தில் தொடர்புபட்டு தமிழக்த்தில் இருந்த ஒரு இயக்க நண்பர் கூறினார். தமிழகத்தில் எல்லா இயக்கங்களும் செய்த அநியாயங்கள் கொஞச நஞ்சமல்ல. அந்த மக்கள் தங்கள் மீது உயிரையே வைத்திருந்தார்கள் என்பதைச் சாதகமாக்கி அனைத்து அநியாயங்களையும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.. தங்கள் இயக்கப் பெண்ணை நக்கலடித்த ஒரு ஓட்டோக்காரரை மண்டையில் போட்டதைக் கூட மன்னித்தவர்கள் அவர்கள் என்றார். ஆக கருணாநிதியோ (எம்ஜிஆரோ) தமிழக மக்களின் நாடித்துடிப்பைப் பார்த்து தங்கள் அரசியலை நடத்திருக்கின்றார்களே தவிர, உண்மையான ஈழமக்கள் ஆதரவில் இல்லை என்பதை வேறு மாதிரியும் நிறுவலாம்.

//என்னுடைய புரிதலின்படி பெரியாருக்குப் பிறகு தமிழ்ச்சூழலில் போராட்ட குணம் கொண்ட தலைவர் கருணாநிதி// என்று நீங்கள் கூறுவதுமாதிரி, எனது தந்தையைப் போன்ற தீவிர கருணாநிதி ஆதரவளார்கள், அரசியல களத்தில் பெரியாரைவிட கருணாநிதியின் நகர்வுகள் நிதானமும், வியக்கத்தக்கவையும் ஆனவை என்பதில் - அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள்- என்றவகையில், எனக்கு விமர்சனம் இல்லை.

//இந்த வயோதிக வயதில் அவரை வசைபாடாமல் இருக்கலாம்.// என்பதை ஏற்கமுடியுமா தெரியவில்லை. கருணாநிதி ஒருகாலத்தில் போராட்டக்காராய் இருந்தார்- இப்போது இல்லை- என்பதுதான் நானும் சொல்ல வருவது. முந்திச் செய்ததைப் பார்த்து இப்போது விமர்சிக்க கூடாது என்றால், யூதர்களை உலகமகாயுத்தங்களில் கொன்றுகுவித்துவிட்டார்கள், ஆகவே பாலஸ்தீனியத்தில் அவர்கள் செய்வதைப் பார்த்து சத்தம்போடாது வாயை மூடிக்கொண்டு போ என்பதற்கு நிகாரானது. அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பற்காய் அவர் செய்த அனைத்து அக்கிரமங்களையும் மூடிமறைத்து தியாகி ஆக்குவதற்கு சமமானது. கருணாநிதி நல்ல விசயங்களைச் செய்துவிட்டார் (ஏன் கருணாநிதியை -ஜெயலலிதாவை விட- அனேகர் விமர்சிக்கின்றோம் என்றால் கருணாநிதியிடம் இன்னும் இழந்துவிடாதிருக்கும் நம்பிக்கை என்பதுதான் வேறுவிடயம்) இனி விமர்சிக்கக்கூடாது என்றால், புலிகள் ஈழத்தமிழர்களுக்காய்ப் போராடுகின்றார்கள் ஆகவே அவர்கள் விடும் தவறுகளை விமர்சிக்கக்கூடாது என்று கூறுவதைப்போல.

எந்தப் பெரிய கட்சிகளும் புலி-ஈழம் பற்றிக் கருத்துக் கூறாது என்கின்றீர்கள்...ஆனால் பா.ம.க, ம்.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்றவை இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கு அடுத்து(ஆக்ககுறைந்து நான்கையும் சேர்த்து கூட்டணியாகிப் பார்த்தால்) வரக்கூடியதை ஒரு அவதானமாகக் கொள்ளலாம்.

//ஒருவேளை அவர் மறைவுக்கு பின்னால் ஆர அமர யோசிக்கும் போது, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் நோக்கும்போது, சாதகமான பிம்பம் வெளிப்படலாம். ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழப்போராட்டத்தில் அவருடைய நிலைப்பாடு என்பது வாய்மூடிக்கொண்டு மௌனமாக இருப்பது என்பதாக மட்டுமே முடியும். 1989ல் இந்திய ராணுவ நடவடிக்கையை எதிர்த்து, திரும்பப் பெறுவதில் அவருடைய பங்களிப்புக்காக குறைந்தபட்ச நன்றியை செலுத்தவும், ஆட்சியை இழந்து அவதூறுக்கும், ஜெயின் கமிஷனின் அவமானப்படுத்தலுக்கும் ஆளானதற்காக அனுதாபப்படவும் முடியாவிட்டாலும், அவர் ஆட்சியில் இருந்தால் தீவிர ஈழ ஆதரவாளர்களை பொடாவில் உள்ளே தள்ளாமல் இருப்பார் //
இதை ஏற்றுக்கொள்கின்றேன்.
.....
அண்மையில் இரண்டு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். இந்திரா காந்தி, -1983 கலவரத்தின்பின்- ஏன் பங்களாதேசிற்கு செயததைப் போன்று, தனது படைகளை அனுப்பி, ஈழத்தமிழருக்கு தனி நாட்டையோ அல்லது சுயாட்சியையோ கொடுத்து நிரந்தரத் தீர்வை வழங்காது, பல இயக்கங்களுக்கு ஆயுதங்களை வாரிவழங்கி ஒரேசமயத்தில் வளர்த்துவிட்டவர்? என்று கேட்டிருந்தேன். அங்கே இருந்து யோசிக்க ஆரம்பிப்பது கூட இந்திய-ஈழ அரசியல் களங்களைப் புரிந்துகொள்ள இன்னொரு கோணத்தில் உதவும் என்று -என்னளவில்- நினைக்கின்றேன். நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

1. ஈழவிடுதலைப் போராட்டத்தை புலிகள் monopolize செய்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் புலிகள்-ஈழ மக்கள் என்ற சமன்பாடும், இந்திய அரசு-இந்திய மக்கள் என்ற சமன்பாடும் ஒரே மாதிரியானவையல்ல. (ஒரு பேச்சுக்காக) புலிகளை ஆதரிக்க முடியாத கட்டாயத்தில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர் 'ஈழமக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன். அதற்காக போராடும் கருணாவை ஆதரிக்கிறேன்' என்று சொன்னால் அதற்கு எதிர்வினை எப்படி இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. அதே மாதிரி கருணாநிதியையும், கனேடியத் தலைவர்களை ஒப்பிடுவதும் சரியில்லை. தமிழரை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தமோ, பிறகு புலிகளைக் காட்டி பூச்சாண்டி காட்டும் மிரட்டல்களோ அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை.

2. கருணாநிதி-எம்.ஜி.ஆர் குறித்து பிம்ப உருவாக்கலுக்கான அடிப்படைகளையே அப்படியே நீங்களும் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று சொல்லவில்லை. அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'ஒருவர் சுயநல ரஜதந்திரி இன்னொருவர் நேரடியாக சொல்லக்கூடிய நேர்மையாளர்' என்ற பிம்பங்களை வைத்தே அவர்களின் ஈழ/புலிகள் ஆதரவு-எதிர்ப்பு நிலைப்பாடுகளையும் அணுகுவதாக எனக்குத் தோன்றியது. அது சரியான பார்வையல்ல என்பதே என் வாதம். என் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

3. நான் மூன்று காலப்பகுதியாக பிரித்திருந்தேன். நீங்கள் இரண்டாக பிரித்திருக்கிறீர்கள். அதனடிப்படையில் இருந்தபோது 89-90 இல் கருணநிதியின் அணுகுமுறைகளுக்கு தமிழக மக்களின் ஈழ ஆதரவே காரணம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தீவிர ஆதரவு-தீவிர எதிர்ப்பு என்ற இரண்டையும் செய்தது fரிஙெ குழுக்களே. பெரும்பான்மை அதுபற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது என்னுடைய நேரடியான அவதானம். ஆகவே கருணாநிதியின் செயல்பாடுகளுக்கு சுயநலம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பது என் வாதம் (அப்போது இழப்பதற்கு ஆட்சி இருந்தது, பெறுவதற்கு ஏதுமில்லை என்பதால்). இதையும் நீங்களும் ஒப்புக்கொள்ளவேண்டுமென்பதில்லை. இதையே திருப்பிப் போட்டால், இப்போது ஈழமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லாததால் தான் கருணாநிதி இதுபற்றி பேச மறுக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

4. கருணாநிதியை விமர்சிக்கக்கூடாது என்பதில்லை (உங்கள் ஒப்பீடுகளும் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை). ஏற்கனவே புலிகளை ஆதரித்தன் பலனாக ஆட்சியிழப்புக்கும், அவதூறுகளுக்கும் ஆளான ஒருவர் மீண்டும் அதைப் பற்றி வாய்திறக்க வேண்டும் (வாய் திறந்தால் மீண்டும் ஜெயின் கமிஷன் பூதம் கிளம்பும் என்ற நிலையில்) எதிர்பார்ப்பது அதிகம். ஆதரித்தபோது சுயநலத்திற்காக ஆதரித்தார் என்பதும், பேசாமல் இருக்கும்போது அக்கறையில்லை என்று சாடுவதும் நேர்மையற்ற கண்மூடித்தனமான தாக்குதல் என்பதே என் கருத்து.

5. நான் பெரிய கட்சி என்று நினைப்பது திமுக, அதிமுக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையே. நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்சிகள் என்பார்வையில் உதிரிக்கட்சிகள் (இதை எதிர்மறையான தொனியில் சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூட்டது. அவற்றின் ஆதிக்கம் சில பகுதியினர் மீது மட்டும் என்ற அர்த்தத்தில்). ராஜிவ் காந்தி கொலையுண்ட காலத்தில் இவர்கள் எல்லோருமே கூட அடக்கி வாசித்தவர்கள் தாம் (ஜெயின் கமிஷன் விசாரணைகளுக்கும், அவதூறுக்கும் இவர்கள் நேரடியாக உள்ளாகவில்லை என்பதையும் கருத்தில் கொள்க).

இதற்கு மேல் நான் இவ்விஷயதில் சொல்வதற்கு வேறெதுவுமில்லை.

இளங்கோ-டிசே said...

நன்றி சுந்தரமூர்த்தி. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு தலைவர்களுக்கும் தனிப்பட்ட சிக்கல்கள்,தேவைகள், ராஜதந்திரங்கள் இருக்கின்றது என்றவளவில் கருணாநிதியின் பலங்களை பலவீனங்களை ஏற்று அவரை மதிக்கின்றேன். மற்றும்படி பெரியாருக்கு பிறகு கருணாநிதிதான் போராட்டக்குணம் உள்ள தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை (அவரவர் கருத்துக்கள் அவரவர்க்கே என்பதால் உங்கள் எண்ணத்தை மறுக்கின்றேன் என்று அர்த்தம் இல்லை). பெரியாரின் சிந்தனைகளை இன்னொரு தளத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் கனலை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாது தந்திர அரசியல் ஆடுவதற்கு மட்டும் பாவித்தவர் என்றளவில் கருணாநிதியில் பெரிய ஈடுபாடில்லை..(தி.கவைப் பற்றி ஒன்றும் கூறத்தேவையில்லை)