Monday, January 30, 2006

இயல் விருது - 2005

ஒரு விருதும், என் விசனமும்

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் (உயிர்மையில் என்று நினைக்கின்றேன்) கனடாவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட சிறந்ததுதான்.

4 comments:

Badri Seshadri said...

பணம் ஏழை தமிழக/ஈழ எழுத்தாளர்களுக்குப் போய்ச்சேரவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது அறக்கட்டளையை ஏற்படுத்தி வைக்கலாம். ஆனால் விருது என்று பெயரிட்டால் அது எந்தப் பின்னணியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குப் போய்ச்சேரவேண்டும்.

இல்லாவிட்டால் அந்த விருதுக்கு மரியாதை இருக்காது.

இளங்கோ-டிசே said...

இயல்விருது- 2005, மதி எழுதிய கட்டுரையை இங்கே பார்க்கலாம்

இளங்கோ-டிசே said...

பத்ரி, நான் ஏழை என்று குறிப்பிட்டது வழியில்லாது இருப்பவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. எழுத்தாளர்கள் அனேகருக்கு இயல்பாய் இருக்கின்ற சுயமரியாதை காரணமாக, அவ்வாறான அறக்கட்டளைப்பணத்தை நிராகரிக்கவே செய்வார்கள் (சாருநிவேதிதாவும் விளக்கு உட்பட பலவிருதுகளைக் கிண்டலத்து நல்லதொரு கட்டுரை எழுதியிருக்கின்றார்). இந்த விருதில் கொடுக்கப்படும் பணாத்தோடு, விருது பெறுபவர் கனடா வருவதற்கான பயணச் செலவும் வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். நீங்கள் விருதுக்குரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்கின்றீர்கள்... வேண்டும் என்றால் அறக்கட்டளையை நிறுவலாம் என்றும் யோசனை கூறுகின்றீர்கள். நான் அதை மறுபுறத்தில் நின்றுவினாவுகின்றேன்.... மரியாதை செய்யவேண்டும் என்றால் ஒரு பாராட்டு விழாவை செய்துவிடலாம்....இயல் விருதை வழங்கத்தேவையில்லை என்கிறேன்.
....
அ.முத்துலிங்கம், கனடாவில் கொடுக்கும் விருதுகளை எப்படிக் கொடுக்கின்றார்கள் என்று எல்லாம் தோண்டி தோண்டி துப்பு துலக்கிகொண்டு, அவரது பங்களிப்பு இருக்கின்ற இயல்விருதின் தேர்வுகள்/தெரிவுகள் குறித்து தொடர்ந்து மெளனஞ்சாதிப்பது ஏன் என்றும் புரியவில்லை(எங்கேயாவது இந்த விருதுக்குரிய முறைமைகள்பற்றி ஏற்கனவே விளக்கம் கொடுத்திருந்தால், யாராவது தெரியப்படுத்தினால் நல்லது)

வசந்தன்(Vasanthan) said...

அதுசரி,
படங்காட்டலும் பயமுறுத்தலும் எண்டு தலைப்பு வச்சுக்கொண்டு இப்படி எழுதலாமோ?
இதுகள் நையாண்டிப் பதிவுகளாய் கருதப்படாதோ?
ஏன், மற்ற வலைப்பக்கத்துக்கு என்ன நடந்தது?