Thursday, January 19, 2006

Election in Canada - 2006

கனடாத் தேர்தலும் சில (தனிப்பட்ட) எண்ணங்களும்

அனேகமாய் கொன்சவேர்ட்டிக் கட்சி இந்தமுறை வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. ஈழம், இந்தியா போன்றல்லாது, இங்கு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களை முற்றாக புரட்டிப் போடுகின்றவிதமாய் வேறுவிதமான் முடிவுகள் தேர்தல் காலத்தில் கனடாவில் (எனக்குத் தெரிந்தளவில்) வரவில்லையாதலால், ரொயினரை(Tories) இருகரம் கூப்பி வரவேற்கவேண்டியதுதான். எனினும் கொன்சர்வேடியின் சில கொள்கைகள்தான் பயமுறுத்துகின்றன. அந்தக்கட்சியில் இயல்பாய் வெளிப்படுகின்ற இனத்துவேசத்தைவிட, ஈராக்கிற்கு கனடீயப்படைகளை அனுப்பவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை, ஒர்பால் திருமண முறையை எதிர்த்தமை, இப்போது Space Missile Projectற்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகின்றோம் என்றது (ஆட்சியில் இருக்கும் லிபரல் பல்வேறு தடைகளுக்குமிடையில் இந்த ப்ரொஜக்டை ஏற்காது இருப்பதும், இதன் நிமிர்த்தத்தில் ஏற்பட்ட சச்சரவில் அமெரிக்கா வெளிவிவகாரச் செயலாளர் Condoleezza Rice கனடாவிற்கான பயணம் இடைநிறுத்தப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை), ஆயிரக்கணக்கில் படைகளைச் சேர்ந்து இராணுவ இயந்திரத்திரத்தை வலுவாக்குவதாய் பிரகடனப்படுத்துவது..... இப்படி கொன்சர்வேடியினர் பலவிதங்களில் பயமுறுத்துகின்றார்கள்.

ஆக இவர்கள் இன்னொரு அமெரிக்காவாய் கனடாவை ஆக்கப்போகின்றார்களோ என்ற அச்சமும், Stepen Harper, ஜோர்ஜ் புஷ் போல இன்னொரு சனாதனவாதியாக இலகுவில் ஆகிவிடவும்கூடிய அடையாளங்கள் துலங்குகின்றன. கொன்சர்வேடிக் கட்சியினரைத் தொடர்ந்து அவதானிக்கும் ஒருவருக்கு, இந்தக்கட்சி கனடாவுக்குரிய தனித்துவங்களை இழக்கச்செய்து, கனடாவை அமெரிக்காவின் அனைத்துக்கொள்கைகளுடனும் கேள்விகள் இல்லாது இணைத்துக்கொள்ள விரும்புகின்ற கட்சி என்பதை இலகுவாய் புரிந்துகொள்ளுவார்கள்.

7% GST வரியை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லாமற்செய்வோம் என்று உற்சாக உறுதிமொழியை கொன்சவேடியினர் அளித்தாலும், பட்ஜெட்டில் இதை நிவர்த்தி செய்ய, Helath Care, Education போன்றவற்றில்தான் கையை வைக்கப்போகின்றார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தொடர்ந்து பன்னிரண்டு வருடமாய் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியினரில் மக்கள் நம்பிக்கை இழக்க, sponsorship scandal, மற்றும் பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படமுன்னர் வெளியே இரகசியமாய்க் கசிந்தமை போன்றவை முக்கிய காரணங்களாகும். தொலைக்காட்சி விவாதங்களில் தமது கட்சியின் கொள்கைகளையும் தம்மையும் நிரூபிக்கவேண்டிய லிபரல் கட்சியினர் அதைத் தவறவிட்டமை லிபரலின் வாக்குகள் கணிசமாய் சரிந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம். விவாதங்களின்போது கொன்சர்வேட்டிக் கட்சித் தலைவர் Stepen Harper, லிபரல் கட்சித் தலைவர் போல் மார்ட்டினைப் போல கோபமும் சலிப்பும் காட்டாது, சிரித்த முகத்துடன் எல்லாக் கேள்விகளை எதிர்கொண்டவிதமும், NDP கட்சியினரின் லிபரல் மீதான கடுமையான விமர்சனமும் லிபரலுக்கு பிரதிகூலங்களாக அமைந்துவிட்டன.

கன்டாவிலுள்ள தமிழ்மக்கள் பெரும்பான்மையாக லிபரல் கட்சியினருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். என்டிபி கட்சியினருக்கு வாக்களிக்க விரும்பியிருந்தாலும், கொன்சர்வேடிக் கட்சி வென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் லிபரல் கட்சியினருக்கு வாக்களித்து இருக்கலாம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, பொதுவாய் இங்குள்ள பல சிறுபான்மை சமூகங்கள் இப்படியான நிலையில்தான் லிபரலுக்கு வாக்களிக்கின்றனர் எனத்தான் ஆய்வுகளும் கூறுகின்றன். இறுதியாய் நடந்த மூன்று தேர்தலிகளிலும், ரொரண்டோ பெரும்பாகத்தை உள்ளக்கிய ஒன்ராறியோ மாகாணத்தில் கொன்சவேடியினர் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்தமுறை சிறுபான்மையின சமூகங்களும் லிபரல் கட்சியினரைக் கைவிட்டதுதான் மிகவும் பரிதாபம். என்டிபினர், அடித்தள, நடுத்தர, சிறுபான்மையின மக்கள் மீது கொண்ட அக்கறையுடன், ஈழத்தில் சமாதானம் நிலவவேண்டும் என்பதற்காய் ஏனைய கட்சிகளை போலல்லாது தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவ்ர்கள். பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளில் என்டிபி கட்சித் தலைவர் பங்குபற்றி உரையாற்றியவர் என்பதைவிட, தொடர்ந்து ஈழமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் போன்றவற்றில் ஏனைய கட்சிகள் பங்குபெறத் தயக்கம் காட்டும்போது, கலந்து கொண்டவர்கள் என்டிபியினர் என்பது கவனதில் கொள்ளப்படக்கூடியது. Child Care, Helath Care, Education, Senior Care போன்றவற்றிற்கு, முன்வைக்கும் என்டிபியின் தேர்தல் வாக்குறுதிகள் அடித்தள, நடுத்தர மக்கள் வாழ்வின் சுட்டெண்பண்பை அதிகரிக்கச் செய்வன.

இந்தத் தேர்தலில் முதன்முதலாய் தமிழர்களின் பங்களிப்பும் இருக்கின்றது என்பது மகிழ்ச்சிதரக்கூடியது. நான் வசிக்கின்ற தொகுதியில் போட்டியிடுபவர்களில் ஒருவரில் தமிழரும் இருக்கின்றார் (தமிழில் உரையாற்றத்தயங்குபவர், ஆங்கிலத்தில் தமிழ்ப் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்குபவர், வாக்குக் கேட்கும்போது 'நான் தமிழ்ன் எனக்கு வாக்குப் போடுங்கள்' என்பது ஒருபுறம் உதைப்பது வேறுவிடயம்). ஏற்கனவே கூறியதுமாதிரி, கொன்சர்வேடிக்கட்சியின் கொள்கைகள் பலதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழர் என்ற அடையாளம் பல சமயங்களில் தேவை என்றாலும், தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்கின்றார் என்ற காரணத்துக்காய் கண்ணை மூடிக்கொண்டு அவருக்கு வாக்களிக்கமுடியாது. மேலும் தமிழ்ச் சமுகத்தில் அவரின் பங்களிப்பு என்னவென்ற வினாவும் இருக்கின்றது (ட்சுனாமியில் தன் பங்கு இருப்பதாய் அந்த வேட்பாளர் கூறினாலும், ட்சுனாமி போன்ற பெரும் அழிவில் அனைவரின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பெரிதாக எடுக்கமுடியவில்லை.)

It's time to change என்று கனடீயர்களுக்கு விளங்கினாலும், அந்த மாற்றம் கனடாவின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நம்பிக்கை தரும், என்டிபியினரை நோக்கி ஆதரவு அலையாக அடிக்காது கொன்சர்வேடியினரை நோக்கி வீசுவதுதான் ஆபத்தானதும், அவலமானதும் ஆகும்.

(கனடாப் பாராளுமன்றத் தேர்தல் வரும் திங்கட்கிழமை (சனவரி 23) நடைபெறவுள்ளது. இந்த வார வைகறையில் வெளிவந்தது, சில திருத்தங்களுடன் இங்கே)

5 comments:

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நல்ல பதிவு டீஜே. இந்தத் தேர்தல்தான் எலலாத் தேர்தல்களிலும் சுவாரசியமானது என்பது எனது கருத்து.

-கிஸோ

Anonymous said...

அந்தத் தமிழர் எந்தக் கட்டிசார்பில் போட்டியிடுகிறார்?

இளங்கோ-டிசே said...

நன்றி கிஸோ. அனானிமஸ், நான் இருக்கும் தொகுதியில் போட்டியிடும் தமிழர் கொன்சர்வேடிக் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்றார்.

இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கு நன்றி அருவி.
.....
நீங்கள் கூறியதுமாதிரி தமிழ்க்கனடீயர்கள் குழப்ப நிலையில்தான் நிற்கின்றார்கள் என்றுதான் நானும் கேள்விப்பட்டேன். இங்குள்ள தமிழ்ப்பத்திரிகைகளைத் தவிர, தமிழ்வானொலிகள், தொலைக்காட்சி என்று எதுவும் கேட்காது பார்க்காது இருப்பதால் இந்த ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் குறித்து அவ்வளவாய் அறியமுடியவில்லை.
....
நண்பர்கள் சிலரைச்சற்று முன்னர் சந்தித்தபோதுதான், இங்குள்ள தமிழ் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கும் சில விவாதங்களை அறிந்துகொண்டேன். மற்றும்படி //அமெரிக்கா தொடர்பாக கனடாவின் கொள்கையில் பெரியமாற்றத்தினை எங்கனம் எதிரபார்ப்பது! நாசுக்காக நடந்துகொள்வார்கள்.// குறித்து சற்று யோசிக்கவேண்டியுள்ளது. Stepen Harpeஜ, வோசிங்டன் போஸ்ட் கூட, /The ad draws on a Washington Times newspaper article that said Canada could elect the most pro-American leader in the western world./ என்று பிரசுரிப்பதுதான் இன்னும் பயமுறுத்துகின்றது.
........
நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது, இந்த முறை தமிழ் மக்கள் என்டிபிக்கு வாக்களிப்பதுதான் சாதகமாயிருக்கும் என்றுதான் விவாதித்திருந்தோம். எனெனில் அது கொன்சர்வேடிக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கச் செய்து, எண்டிபியினரோடு அல்லது ப்ளாக் கியூபெக்கோடு கூட்டணி அமைக்கின்றபோது, தீவிர வலதுசாரிக்கொள்கைகளுக்குள் கனடாவைக் கொண்டுசெல்வதைத் தடுக்கும்.