Tuesday, October 25, 2005

சுந்தர ராமசாமி

நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்

சுந்தர ராமசாமியின் மறைவுக்கான நினைவஞ்சலிக் கூட்டம், ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்தது. வழமைபோல நான் 'நேரத்துக்கே' சென்றதால் அ.முத்துலிங்கம், சு.ராவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்ததைத்தான் எனது ஆரம்பமாகக்கொள்கின்றேன். அ.முத்துலிங்கம், கனக செல்வநாயகம், தேவகாந்தன், திருமாவளவன், சேரன், வ.ந.கிரிதரன், பா.அ.ஜயகரன், எம்.கே.மகாலிங்கம், 'காலம்' செல்வம், சிவதாசன் என்று பலர் சு.ராவுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்தனர். 'சு.ராவுடனான படைப்புக்களுக்குள் போகாமல் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்' என்று தலைமை வகித்த எம்.கே.மகாலிங்கம் கேட்டதால், அனேகர் சு.ராவுடனான தமது தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சு.ரா பழகுவதற்கு அருமையான மனிதர் எனவும், தான் பேசுவதற்கான வெளியை (space) உருவாக்குவதில் கவனம் எடுப்பதைவிட, எதிரே இருப்பவர் பேசுவதற்கான வெளியை எப்போதும் உருவாக்கி கொண்டிருந்தவர் என்பதை நான் சு.ரா பற்றி இவர்களின் பேச்சினூடாக விளங்கிக்கொண்டேன். அனைவரின் உரைகளிலும், சு.ராவின் சடுதியான இழப்பை சற்றுத் தாங்க முடியாதது போல இருந்தது. சு.ரா தனது இறுதிக்காலத்தில், ஒரு புதிய நாவலை எழுதிக்கொண்டிருந்தார் என்றும் அது எவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை என்றார் அ.முத்துலிங்கம். சிவதாசன், சு.ரா தனது இறுதிப் பயணத்தைச் சடங்குகள் இல்லாமற் செய்ததன் மூலம், 'பிராமணர்', 'பிராமணியம்' போன்று அவருக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இல்லாமற் செய்திருக்கின்றார் எனத்தன் பேச்சில் குறிப்பிட்டு அப்படிச் செய்ததற்காய் தலைவணங்குகின்றேன் என்றார். தேவகாந்தன், சு.ரா, ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள் நடத்திய கூட்டத்திலும், கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவிலும் சு.ராவின் பங்கும் பெருமளவில் இருந்தது என்று குறிப்பிட்டார். திருமாவளவன், தனது முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்டதற்கு சு.ராவே காரணமென்றார். இரண்டாவது தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதுப்படுகின்ற காலத்தில், பசுவய்யாவின் கவிதைகளை தினம் ஒன்றாவது படித்திருக்கின்றேன், அந்தவகையில் சு.ரா தனக்கு குருவென்றார். 'காலம்' செல்வம் சுரா நட்புக்காய் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார், முக்கியமாய் குமுதம் போன்றவற்றை சு.ரா விமர்சித்துவிட்டு தீராநதியில் எழுதப்போனது நட்பின் நிமிரத்தம் என்றார். அதை, தான் விமர்சித்தபோது, ஒத்துக்கொண்டு அது தனது நெருங்கிய நண்பர் மணாவுக்காய்தான் நேர்காணலைக் கொடுத்திருந்தேன் என்று குறிப்பிட்டாராம். சு.ரா சென்னைக்கு வரும்போது கட்டாயம் ஒவ்வொருமுறையும் இரண்டு பேரைச் சந்திப்ப்பேன் என்று கூறியபோது, தான் ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் ஆக்கும் என்று நினைத்தால், சின்னக்குத்தூசியையும், மணாவையும் என்று சு.ரா கூறியபோது தனக்கு அது ஆச்சரியமாக இருந்தது என்றார் 'காலம்' செல்வம். எந்தக் குறிப்பும் இல்லாமல் சு.ராவின் சில கவிதைகளையும், நாவல்களில் வரும் பகுதியையும் அப்படியே செல்வம் ஒப்பித்தபோது, சு.ராவின் பாதிப்பு எவ்வளவு செல்வத்திடம் உள்ளது என்று விளங்கியது. முக்கியமாய், தனக்கு எமர்ஜென்சிக்காலத்தில் இந்திராகாந்திக்கு எதிராய் சு.ரா எழுதிய கவிதை பிடிக்கும் என்றார். அதிலும் 'இது உறக்கம் அல்ல தியானம்' என்ற வரிகள் தன்னை ஒருகாலத்தில் பாதித்தது என்று செல்வம் குறிப்பிட்டது நினைவிலுண்டு. சு.ராவுகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டால் நன்றாகவிருக்கும். எனெனில் அந்த விருதின் மூலம் அவரது படைப்புகளை ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்த்து அரசு வெளியிடும் என்பதால் சில்லறைப் படைப்புகளுக்குப் பதிலாய் சு.ராவின் படைப்புக்கள் பிற மொழி பேசுபவர்களை அடைந்தால் நல்லதே என்று வ.ந.கிரிதரன் குறிப்பிட, காலம் செல்வம் இடைநிறுத்தி, 'என் முன்னோர்களுக்கு கிடைக்காத விருதை எனக்குத் தந்தால் அவர்கள் முகத்திலேயே வீசி எறிவேன்' என்று சு.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கின்றார் என்பதை நினைவு கூர்ந்தார்.

வழமைபோல கூட்டம் முடிவதற்கு முன்னரே,வெளியில் நின்று சில நண்பரகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன். ரொறண்டோவில் நடந்த சு.ராவுடனான, தளையசிங்கத்தின் 'ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி' விவாதத்தைப் பற்றிச் சில விடயங்களை வ.ந.கிரிதரன் நினைவுபடுத்தினார். அப்போது நான் கனடாவுக்கே வரவில்லை என்பதால் அதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 'காலம்' செல்வமும் இணைந்துகொள்ள, 'அந்த மாதிரி சு.ராவின் பாதிப்பு உங்களுக்கு இருக்கிறது' என்று நான் வழமை போல வாயைப் பிளந்து சொல்ல, முந்தி 'காலம் என்றால் சு.ரா, சு.ரா என்றால் காலம்' என்று ஒரு காலம் இருந்தது என ஒரு நண்பர் குறிப்பிட்டார் :-) . வேறொருவர், சு.ரா என்றவுடன் சில நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஆனால் ஜெயமோகனுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல ஒரு நாவலும் இல்லை என்றார். ஜெயமோகன் ஏன் பேச்சின் நடுவில் ஓடி வந்தார் என்றால் அதற்கு நான்தான் காரணம். 'காலம்' செல்வம் யாரோ ஒருவருக்கு 'இவன் நமது கூட்டாளி' என்று அறிமுகப்படுத்தி 'என்ன நான் சொல்வது சரிதானே?' என்று என்னைக் கேட்க, 'ஓம் எல்லோருக்கும் கூட்டாளிதான், அது சரி நமது கூட்டணி இப்போது காலச்சுவட்டுடனா அல்லது ஜெயமோகனுடனா?' என்று நான் திரும்பிக் கேட்கும்போதுதான் சும்மா இருந்த ஜெயமோகனும் பேச்சினிடையே வந்துவிட்டார். மற்றப்படி, நான் முன்பு வேறு சில பதிவுகளில் குறிப்பிட விரும்பினாலும், பல நண்பர்களுக்கு அவர்கள் மீது நான் எழுத்தில் வைக்கும் விமர்சனங்கள் தெரிந்தும், விமர்சனம் வேறு நட்பு வேறு என்று இயல்பாய் அவர்கள் பேசுவதை பெரிய விடயமாகக் கருதுவதைக் குறிப்பிடவேண்டும்.. காலம் புத்தகங்களுக்கு விமர்சனங்கள் வைத்திருக்கின்றேன். தேவகாந்தனின் 'கதா காலம்' புத்தக வெளியீட்டு விழாவுக்கும் எனது கருத்தை எழுதியிருக்கின்றேன். அ.முத்துலிஙகத்தின் படைப்புக்களை பல பொழுதுகளில் கடுமையாகவே விமர்சித்திருக்கின்றேன். சுமதி ரூபன், திருமாவளவன் போன்றவர்களுடன் சில விடயங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் எவரும் முகத்தைத் திரும்பிக்கொண்டு போகாதது ஆறுதலாயிருந்தது. காலம் செல்வத்தோடு நகைச்சுவையாகக் கதைக்க முடிந்தது. அ.முத்துலிஙகம் 'எப்படி இருக்கின்றீர்? என்றபோது, அவரது சுகம் குறித்து (சற்று சுகவீனமாய் இருக்கின்றார்) கேட்கமுடிந்தது. தேவகாந்தனுடன் 'பறை'யில் புதிதாய் எழுதும் தொடர் பற்றி இரண்டு வரி பேச முடிந்தது. சுமதி ரூபனிடம், இலண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது என்று விசாரிக்க முடிந்தது. திருமாவளவன், றஷ்மியின் புதிய
தொகுப்பை காசு வாங்காமலே தந்து வாசி என்று அதே பழைய நட்புடன் இருந்தார்.

கலைச்செல்வன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் மரணங்கள், இன்னும் இந்த நண்பர்களைப் புரிந்துகொண்டு பழகவேண்டும் என்ற தவிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகக்குறைந்தது அவரவர்களின் உடல் நலங்களிலாவது கவனமாக இருங்கள் என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகின்றது. சேரனைச் சிலவருடங்களுக்கு முன் கண்டதற்கும் இப்போது பார்ப்பதற்கும் தன்நிலை குறித்து கவலை இல்லாது திரிவது போன்ற எண்ணத்தை தர, சற்றுக் கவலையாய் இருந்தது. நாங்கள் வெளியே நிற்கவும் கூட்டமும் முடிந்துவிட்டது. எம்.கே மகாலிங்கம் என்னைக் கண்டுவிட்டு, 'உம்மையும் இரண்டு வரி பேசச் சொல்லலாம் என்று தேடினால் நீர் வெளியில் வந்துவிட்டீர்?' என்றார். எழும்பி நின்று இரண்டு வரி பேசுவதற்குள், நாலைந்துமுறை பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், 'எனக்கு சு.ராவோடு தனிப்பட்ட அனுபவம் என்று ஒன்றுமில்லைத்தானே' என்று சமாளித்துவிட்டேன்.

கண்ணன் குறிப்பிட்ட மாதிரி, சு.ரா ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார் போலத்தான் எனக்கும் தோன்றியது. மேலும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்க்காத பிக்கல் பிடுங்கள் இல்லா வாழ்வையும், தனது பிள்ளைகளையும் பிறர் குற்றஞ் சொல்லமுடியாத நிலையில் ஒரு தகப்பனாய் நின்று வளர்த்துவிட்டும் போயிருக்கின்றார். அந்த வகையில் சு.ராவின் வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது. பா.அ.ஜயகரன் குறிப்பிட்ட மாதிரி, இனித்தான் சு.ராவை நிரம்ப (மீள)வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்ற கருத்தைத்தான் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியெ எனக்காய் கொண்டு வந்த செய்தியாக இருந்தது. தமது மறைவின் பின்னும் தமது இருப்பை அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் விட்டுச் செல்பவர்கள் உயர்ந்த படைப்பாளிகள், சு.ராவும் அவர்களில் ஒருவர்.

Saturday, October 22, 2005

sura
இன்று பழைய குப்பைகளைக் கிளறியபோது கண்ணில்பட்ட நாட்குறிப்புப் பதிவொன்று. நான் ஒருபோதும் நாட்குறிப்புக்கள் தொடர்ந்து எழுதியவனல்ல. 2000ம் ஆண்டு நாட்குறிப்பைப் பார்த்தபோது, நாலைந்து பக்கங்கள்தான் எழுதியிருந்தது தெரிந்தது (பிறகு வந்த வருடங்களில் அந்த நாலைந்து பக்கங்களைக்கூட எழுதியதில்லை). சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புக்கள் வாசித்தபோது எழுதிய குறிப்பாய் இருந்ததால், ஒரு நனவிடைதோய்தலாய்ப் பார்க்கமுடிந்தது.

file1
இந்தக் 'கவிதையும்' கிட்டத்தட்ட அந்த ஆண்டுகளில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இப்போது நிதானமாய்ப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியின் 'உன் கவிதையை நீ எழுது'வின் பாதிப்பு (அல்லது அப்பட்டமான கொப்பி மாதிரியும்) இருந்ததாயும் தெரிகிறது.McMaster University தமிழ் மாணவர்கள் வெளியிட்ட (விழிப்பு) புத்தகமொன்றிலும், நண்பன் ஒருவன் ஆசிரிய குழுவில் இருந்தபோது இது வெளிவந்திருந்தது. இப்படி இந்தப்பொழுதில் எழுதியிருப்பேனா என்பது ஒருபுறமிருக்க, அந்தக்காலத்தில் எப்படியிருந்திருக்கின்றேன் என்று ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

ஜந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளை ஒருமுறைச் சுரண்டிப்பார்க்கவும், சுந்தர ராமசாமியின் அந்தக்காலத்துப் பாதிப்புப் பற்றியும் நினைவு கொள்ளவும் இந்த இரு குறிப்புக்களும் உதவுவதால், அவற்றுக்கும் நன்றி :-).

Saturday, October 15, 2005

நினைவு கூர்தல்: சுந்தர ராமசாமி

PA140010

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-சுந்தர ராமசாமி (1985)

Thursday, October 13, 2005

பிள்ளையார்

PA100001

'அப்பம் முப்பளம் செய்து அருளிய தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே'
பிள்ளையா எனக்கு மிகப்பிடித்த கடவுள். பிள்ளையாரில், எப்போது இருந்து பிடிப்பு ஏற்பட்டது என்று யோசித்துப்பார்த்தால், போரின் நிமிர்த்கம் இடம்பெயர்ந்து அகதியாக அளவெட்டியில் ஒரு வீட்டில் தங்கி நின்ற சமயத்தில்தான் வந்திருக்கவேண்டும் போலத் தோன்றுகின்றது. அளவெட்டி, பிள்ளையார் கோயில்களுக்கும் அம்மன கோயில்களுக்கும் பிரசித்தி பெற்றவை. கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில், அழகொல்லைப் பிள்ளையார் கோயில், பெருமாக்கடவை பிள்ளையார் கோயில் என்ற சில கோயிலக்ள் இப்போதும் ஞாபகத்திலுண்டு. நாங்கள் இருந்த வீட்டுக்கருகில்தான் பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயில் இருந்தது. அதன் அரைவாசிப்பக்கம் வயல்களால் சூழப்பட்டிருக்கும். அழகான ஒரு கேணியும் இருந்ததாய் நினைவு. அந்தச் சூழலும், பழமையின் மணம் வீசிக்கொண்டிருக்கும் கோயிலோடு அங்கிருந்த பிள்ளையாரைப் பிடித்துவிட்டது. இந்தக் கோயிலின் முன்றலில்தான் தமிழ் இளைஞர்கள் தீவிரமாக ஆயுதப்போராட்டத்தில் நுழைந்த சமயத்தில், போராட வந்த சகோதர இளைஞர்களாலேயே உமைகுமாரனும் இறைகுமாரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் (பெயர்கள் சரியா?). அதன்பிறகு பிள்ளையாரை எல்லா இடங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்திருக்கின்றேன். பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் 'பிள்ளையார் துணை' என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார் (காலம் கடந்தாலும்,அதற்கு நன்றி பிள்ளையாரப்பா). ஆனால் இப்போது திரும்பி கடந்த காலத்தை கொத்துரொட்டி செய்வதற்காய் ரொட்டியை விசுறுகின்றமாதிரி திரும்பிப் புரட்டிப் பார்த்தால், எனக்கும் பிள்ளையாருக்கும் நிறைய எதிர் முறையான குணாதியசங்கள் இருந்திருக்கின்றதெனப் புரிகின்றது. முதலாவது, பிள்ளையாருக்கு அருகில் எந்த பெண்ணும் துணையாக இருப்பதில்லை (பிள்ளையாருக்கு இச்சா கிரியா என்று இரு துணைகள் இருக்கின்றதாய் எங்கையோ வாசித்தது நினைவில் இருந்தாலும) கோயில்களில், படங்களில் தனித்துதான் இருக்கிறார்). நான் அத்ற்கு முற்றிலும் எதிர்மாறானவன் (இதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா என்று நீங்கள் முணுமுணுப்பது தெளிவாய் டெசிபெல்லில் கேட்டாலும், கூறுவது என் கடமை). இன்னுமொன்று பிள்ளையார் நல்ல muscular bodyஜக் கொண்டவர் :-). பிள்ளையாருக்கு தொப்பை கூட எவ்வளவு அழகாய் இருக்கிறது பாருங்கள்.

donald_portrait

பிள்ளையார் என்னை மறந்துவிட்டிருந்தால் அவருக்கு நினைவுபடுத்த என்னுடைய பதின்மத்தில் (அதுதான் எண்பதுகளில்) எடுத்த ஒரு படத்தையும் போட்டுவிடுகின்றேன். படம் எடுத்தவர்: கார்த்திக், எடுத்த அமைவிடம்; நான் மாவிட்டபுரம் கோபுரத்தின் உச்சியில் நிற்கையில் கார்த்திக் ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து எடுத்தது.

(சரஸ்வதி பூசையில் பிள்ளையாருக்கும் உணவு படைக்கையில் எழுந்த நனவிடைதோய்தல்)

Saturday, October 01, 2005

படம் பார்த்தது குறித்து படம் காட்டுதல்

கஜினி

முதலிலேயே கூறிவிடுகின்றேன். இதை எழுதுவதற்கு அஸின் மற்றும் அஸின் மட்டுமே காரணம். ஆங்கிலப்படத்தின் சாயலில்தான் இதை எடுத்திருக்கின்றார்கள் என்று வாசித்திருந்தேன். நான் அந்தப் படத்தை பார்க்காததால் எதுவும் சொல்வதற்கில்லை. மற்றப்படி மலையாள, தெலுங்குப் படங்களை அப்படியே மாற்றி தமிழில் எடுக்கும்போது எழாத முணுமுணுப்புக்களைப் போல ஆங்கிலப்படங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் படங்களையும் பார்த்துவிட்டு போகின்றேன் (தமிழில் எடுக்கப்பட்ட கமலின் சில படங்களை மூல ஆங்கிலப்படங்களை விடவும் மிகவும் இரசித்துப் பார்த்திருக்கின்றேன்) . நேர்மையான இயக்குநர்கள் என்றால் மூலத்தை குறிப்பிடச்செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.



கஜினி வழமையான ஒரு பொழுதுபோக்குப் படம். அதில் லொஜிக்குகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினால், படம் nothing என்று ஒருவர் இலகுவாய் நிரூபித்துவிட்டுப் போய்விடுவார். வழமையான 'தமிழ்க்கலாச்சார' ஆபாச குடும்ப செண்டிமெண்டல்கள் இல்லாமல் இருந்தது பிடித்திருந்தது. வன்முறைக் காட்சிகள் சிலவேளைகளில் மிக அதிகமாய் இருக்கின்றது. என்னைக் கேட்டால் சிறுபிள்ளைகளை இந்தப் படத்துக்கு கூட்டிச்செல்லவேண்டாம் என்றுதான் கூறுவேன். எங்களுக்கும் முன் சீட்டில் இருந்த சிறுவன் பயந்து பதட்டபடி இருந்ததைக் கண்டிருந்தேன்.

அஸினின் நடிப்பு மிக இயல்பாயிருந்தது ( When i was watching this movie, I thought if i've got a partner like Asin's character in this movie, would be more fun :-). Alright guys...நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது எனறு உங்கே திட்டுவது கேட்கிறது. சரி கனவாவது கணடுவிட்டுப்போகின்றேன்). நகைச்சுவைப் பகுதியை அஸினுக்கு கொடுத்தே விட்டதுமாதிரி இருந்தது; நன்கு சிரிக்க வைக்கின்றார். எனது ப்ளொக்கர் படத்தில் அஸினைப் போட்டதற்கு, 'அஸின் இப்படி நடித்திருக்கின்றாரே நீ அவரின் படத்தைப் போடலாமா?' என்று எவரும் கேட்கமுடியாத அளவுக்கு நன்கு நடித்திருக்கின்றார். நயந்தாரா ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை (இறுதியில் மழையில்) ஓடிக்கொண்டிருக்கின்றார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டி பயமுறுத்துகின்றார்கள் (வல்லவன் பட சர்ச்சையில் சிக்கியவுடன் நயந்தாராவின் உதடுகளைக் காட்டாவிட்டால் சிறைக்குள் போட்டுவிடுவோம் என்று யாராவது சொன்னாரகளோ தெரியாது).



ஒளிப்பதிவு மிக அருமை, ராஜசேகருடையது. இறுதிக்காட்சிக்காய் புதுவித கமரா பாவிக்கப்பட்டது என்றும், இரட்டை வேடங்களுக்கு அது மிகச்சிறப்பாக உதவும் என்றும் ராஜசேகர் கூறியதை எங்கையோ வாசித்தது நினைவு.

சிறுமிகளை வேலைக்கு என்று கூப்பிட்டு மும்பாய்க்கு (?) விபச்சாரத்துக்கு அழைத்துச் செலகையில் அஸின் அவர்களைக் காப்பாற்றி விட்டு வில்லனிடம் கூறுவார்... "பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சினைகள்....மடாதிபதிகள், வைத்தியர்கள், வக்கீல்கள், வேலை செய்யும் இடங்க்ள்.....இப்பதானேடா பெண்கள் சமையலறைக்குள் இருந்து வெளியுலகத்துக்கு வரத்தொடங்கி இருக்கின்றார்கள்....இப்படியெல்லாம் நீங்கள் செய்யத்தொடங்கினால், மீண்டும் சமையலறையே போதும் என்று அவர்கள் முடங்கிவிடவல்லவா போகப்போகின்றார்கள்' என்று (இது எனது short term memory lostல் இருந்து loss பண்ணாமல் எழுதியது; முற்று முழுதாகச் சரியானதல்ல). அப்படிக் கேள்வி கேட்டது மிகவும் பிடித்திருந்தது (அது வில்லனுக்கு மட்டுமல்ல; படம் பார்த்துக் கொண்டிருந்த நம்மையும் பார்த்துத்தான்). அதுவும் அஸின் வாயால் கேட்டது.......



எல்லாப் பெரிய விசயங்களும் சின்னக் கேள்விகளிருந்துதானே ஆரம்பிக்கின்றது.


(இந்தப்படங்களும், அரைகுறைப் பதிவும் அஸினுக்கு)
p.s: These photos are not related to the movie, Kajani and thankx to asinonline.com