Wednesday, May 30, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு இரத்தும்...

இதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்

எதிர்வரும் ஜூன் 02 நடைபெற இருந்த வலைப்பதிவர் சந்திப்பு -தவிர்க்கக் கூடிய காரணங்களால்- இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

siva1

மற்றும்படி -தொடர்புகொண்ட- தமிழியல் மாநாட்டுக்கு சமூகமளிக்கும் நண்பர்களைச் சந்திக்கலாம். வேறு சில வலைப்பதிவுகள் எழுதாத நண்பர்களும் வருகை தருவார்கள் என நம்புகின்றேன். வலைப்பதிவர்கள் என்ற தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே தவிர்க்கப்படுகின்றது. அவ்வளவே :-).

siva3

--------------------------------

வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன். என்கின்றபோதும் நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.

Wednesday, May 16, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு?

வருகின்ற மே 31-ஜூன் 02 வரை தமிழியல் மாநாடு ரொரண்டோவில் நடைபெறவுள்ளது. சென்ற முறை கட்டணம் இல்லாது அனுமதித்தவர்கள், இம்முறை மதியவுணவு தருகின்றோம் கட்டணம் கட்டி வாருங்களென பயமுறுத்திக்கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இம்மாநாட்டில் வலைப்பதிவுகள் எழுதுபவர்களும் கலந்துகொள்ளக்கூடும் என ந்மபுகின்றேன்.

எனவே ஜூன் 02, சனிக்கிழமை அன்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாமொரு அறிமுகக் கலந்துரையாடலைச் செய்யலாம் என்று நம்புகின்றேன். வலையில் பதிபவர்கள் மட்டுமில்லாது, வலைப்பதிவுகளை வாசிப்பவர்களும் கலந்துகொண்டால் இனியதொரு பொழுதாய் அது அமையக்கூடும்.

பின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.

மின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு: dj_tamilan25@yahoo.ca

Saturday, May 12, 2007

இதமாகட்டும் இந்தச் சனிக்கிழமை

A dream


அதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின ஆளுமைகளினூடாக பேசுவதைப் பார்க்கலாம். இவ்விரு பாடகர்ளும் பிற ராப்/R&B பாடர்களின் பாடல் வரிகளிலிருந்து வித்தியாசமாய் எழுதுபவர்கள். பல பாடகர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுப்பதுடன், பாடல்களை அவர்களுக்காய் இசைகோர்த்து தயாரித்தும் கொடுப்பவர்கள். Will I Am, Black Eyed Peasன் முக்கிய ஒரு பாடகர். இப்பாடல் Freedom writers என்ற படத்திற்காய் தயாரிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் எமினெத்திற்கு பிறகு எனக்கு அதிகம் பிடித்த இன்னொரு பாடகர் Common.

Promiscuous


Nelly Furtado நமது நாட்டுக்காரி. கனடாவின் கிழக்குப்பகுதியான வன்கூவரில் பிறந்து வளர்ந்தாலும், போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். அண்மையில் வந்த அவரது Loose இறுவட்டு பெருமளவில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. Grammy போல, கனடாவின் முக்கிய இசைவிருது நிகழ்வான Junoவில் Nelly முக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தவர் . இந்தப்பாடலைப் பார்த்து ஆடாமல் இருந்தால்தான் அதிசயம்.

Timberland தனது நிறுவனத்திலும் Nellyஐ ஒரு பாடகராக இணைத்திருக்கின்றார். தனித்தனிப் பாடலாக Tamberland பிறருக்காய் பாடிய/தயாரித்த பாடல்களை இரசித்த எனக்கு, அவரின் அண்மையில் வெளிவந்த Shock Value இறுவட்டை வாங்கிக்கேட்டபோது ஏமாற்றமாயிருந்தது. இதே Timbarland தயாரிக்க அதில் பாடவிருந்த M.I.Aன் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Nobody wanna see us 2gether, don't matter...


Akon புகழின் உச்சியில் (வேறு விடயங்களிலும் கூட) ஏறிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்திருப்போம். ஆபிரிக்க (செனகல்) நாட்டுப் பின்னணியில் வந்தவர்; பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர். இப்படியொரு ஆபிரிக்கர், அமெரிக்க R&B /Rap ல் பெருமளவு இரசிகர்களைக் கொண்டிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளகூடியது. அவரின் இரண்டாவது இறுவட்டான Konvicted பல Billboard சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கின்றன. எமினெமோடு smack thatம், Snoop Dogg டன், I wanna love you பாடலும் தொடர்ந்து எங்கும் ஒலி/ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

R.Kelly ஐயும் Shaggy ஐயும் கலந்து நினைவுபடுத்தும் ஒரு குரல் Akonனினது. Akonன் இந்தப்பாடலோடு, R.Kelly யின் Ignition பாடலையும் மற்றும் R.Kelly, Cassidyயோடு பாடிய் Hotel ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது புரியும். கறுப்பினத்தவர்களில் கூட கறுப்பாய் இருப்பது குறைத்து மதிப்பிடுகின்றது என்பதை அதிக நேர்காணலில் Akon அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஏன் தான் இவ்வளவு கறுப்பாய் இருக்கின்றேன் என்று சில கறுப்பினச் சிறுவர்களால் கூட கேட்கப்படும்போது எவ்வாறான சிந்தனைகள் சிறுவர்களிடம் புகுத்தப்படுகின்றது என்று கவலைப்பட்டிருக்கின்றார்.

இப்பாடல், தாங்கள் காதலிப்பதை வேறொருவரும் விரும்பவில்லை என்பதைக் கூறுகின்றது. ஆனால் எமது காதலுக்கான உரிமைக்காய் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிறது. Fight for our right to love என்பது அநேகருக்குப் பொதுவாய் இருக்கிறது போலும்.

Sunday, May 06, 2007

நான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பும்

Spider-man-1 பார்த்த முதலாவது சந்தர்ப்பம் அழகானது (அது ஒரு கனாக்காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம்). இரண்டாவது படம் எப்படிப் பார்த்தேன் என்று நினைவினில்லை. மூன்றாவது படம் வெள்ளி மாலையில் இங்கு திரையங்குகளில் வந்திறங்கியபோது, அண்ணாவின் மகனோடும் (கீர்த்தி), நண்பனோடும் பார்ப்பது என்று முடிவுசெய்து வெளிக்கிட்டோம். ஆனால் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கு ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் எல்லாக் காட்சிகளும் நிரம்பிவிட்டிருந்தன். இணையத்தின் ஊடாக பதிவு செய்து போயிருக்கலாம் என்றாலும், குறித்த நேரத்திற்குப் போவதில் வல்லவர்கள் என்பதால், அப்படிப் பதிவு செய்து போக நான் பிரியப்படவில்லை.

என்றாலும் இன்று (வெள்ளி) ஸ்படைர் மான் பார்க்காது வீட்டிற்குத்திரும்புவது எமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்து நகரின் வெவ்வேறு திசைகளில் இருந்த மூன்று தியேட்டர்களுக்கு காரை விரட்டினோம். ஆனால் அங்கும் இருக்கைகள் நிரம்பிவிட்டிருந்தன. பின்னிரவுக் காட்சிகளுக்குப் போயிருக்கலாமென்றாலும் அண்ணாவின் மகன் நித்திரையாகிவிடுவான் என்பதால் நாளை போவோமென திரும்பி வந்திருந்தோம்.

இனியென்ன செய்வது? கீர்த்தியை வீட்டில் இறக்கிவிட்டு, இவ்வெள்ளியை எப்படிக் கழிப்பது என்று நானும் நண்பனும் நினைத்தபடி, வருடமொன்றுக்குப் பின்பாக -manualவாக- காரைக் கழுவிக்கொண்டு, வளாக நண்பர்கள் சிலரை அழைத்தோம். சரி, இன்று Toronto (Raptors) Vs New Jersey (Nets) basketball playoff game போகிறது அதையாவது பார்ப்பமென்று ஒரு loungeற்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கினோம். வழமைபோல நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோமோ அந்த அணி தோற்றுப்போகும் என்ற 'விதி'யிருப்பதால் Raptors playoff ஆட்டத்திலிருந்து (4-2) இல்லாமற்போயிருந்தார்கள். இந்தமுறையாவது சிலவருடங்களுக்கு முன்புவரை நானிருந்த/எனக்கு மிகப்படித்த நகரமாகிய ஒட்டாவாவின் ஹொக்கி அணியாவது (Ottawa Senators) stanley cup ஐ வெல்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் பாலிப்பாராக.

இவ்வாறாக, chicken wings ஐயும், french fries ஐயும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு நண்பர்கள் நாம் நனவிடை தோய்ந்துகொண்டிருந்தோம். நனவுகளை இன்னும் கொஞ்சம் அழகாக்க தண்ணியை வித்தியாசமான வர்ணங்களில் அவ்வப்போது mix பண்ணிக்கொண்டிருந்தோம். மற்றப்பக்கம் சற்று இருட்டான dance floorல் DJ spin பண்ணத்தொடங்கியிருந்தார். Ne-Yoவும், Casseyயும் கிறங்கலான குரல்களில் பாடிக்கொண்டிருக்க, 'இப்படி சின்னப்புள்ளத்தனமாய் பாடலாமா' என்று 50Centம், Jim Jones வந்து அடிக்கடி அவர்களை அதட்டிக்கொண்டிருந்தார்கள். பதின்மங்களை அப்போதுதான் தாண்டியவர்கள் என்று நினைக்கத்தக்க பெண்கள் சிறகுகளை விரித்து dance floorல் high highயாய் பறக்கத்தொடங்கியிருந்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆடமுடியவில்லையே என்று - மனசால் இப்போதும் பதின்மத்தில் இருந்தாலும் ஆண்டுகளில் அதைத்தாண்டி எங்கையோ தூக்கியெறியப்பட்ட என்னைப்போன்றவர்கள்- வயசை உயர்த்திக்கொண்டிருக்கும் கடவுளை இரண்டு நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டு, பக்கத்திலிருந்த wing machine
ல் பிட்ஸாவும், சிக்கினும் வாங்கி வயிற்றுக்குள் அமுத்தினோம்.

வானம் மற்றும் மனம் மப்பாய் இருப்பது (போல) தோன்றிய எனக்கு அடுத்த நாள் கீர்த்தியை பகற்காட்சியிற்கு கூட்டிக்கொண்டுச்செல்வதாய் கொடுத்த வாக்குறுதி மேகத்தைப் போல மிதந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் சனிக்கிழமை விடிய 12.10 p.m எழும்பியபோது (நேரத்தில் பிழையல்ல), தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மூன்றாம் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தோழரொருவர் அதிகம் கவலைபட்டுக்கொண்டிருந்தார். மனுசருக்கு ஸ்பைடர் மான் பார்க்க முடியாதிருக்கின்றதெனும் முக்கிய பிரச்சினையிருக்க, உங்களுடைய பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வழமைபோல தத்துவப் புடலங்காயை அறிவைச் சீவிக்கொடுத்தபின், கீர்த்தியையும் நண்பனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப்போனால் அங்கே ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ரிக்கெட் கிடைக்கும் என்றார்கள். இன்றைக்கு தோல்வியுடன் திரும்பிப்போவதில்லையென மதிய உணவுப் பசிக்காய் pizza-pizzaவில் ஓடர்பண்ணிவிட்டு mallற்கு போய்க்கொண்டிருந்த பெண்களை patioவிலிருந்து sight அடிக்கத்தொடங்கினேன். திரும்பவும் என் மனவிசாரம் வேதாளம் போல மேப்பிள் மரத்தில் ஏறத்தொடங்கியது; எனக்கு மட்டும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது, நான் இரசிக்கின்ற பெண்களுக்கு மட்டும் ஏன் வயசு ஏறுவதேயில்லையென்று.

குறிப்பிட்ட நேரத்தை விட, ஒன்றரை மணித்தியாலம் பிந்தி படத்தை நாங்கள் பார்க்க ஆரம்பிக்க, படத்தின் இடைநடுவில் அண்ணா தொலைபேசி அழைத்து தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னேரம் வேறொரு நிகழ்வுக்குப் போகவேண்டியிருப்பதால் கெதியாய் கீர்த்தியைக் கூட்டிக்கொண்டு வாவென்று. உள்ளே ஸ்படைர் மான் தன்ரை girl-friendஐ propose செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையில்தான் இப்படி proposal செய்யமுடியாதிருக்கிறது படத்திலாவது பார்ப்பமென்றால் அதற்குமா இப்படி குறுக்கீடுகள் வரவேண்டும்? அரங்கைவிட்டு வெளியே போய் தொலைபேசியில் கதைத்தபின் உள்ளே வந்து பார்த்தால் வேறு காட்சியிற்கு கதை நகர்ந்திருந்தது.
-------------
எங்கே ஸ்படைர் மானின் கதையென்று கேட்கின்றீர்களா? மேலே நான் எழுதியதை வாசித்தபோது எப்படி உங்களுக்கு விசர் வந்ததோ அதைவிட இரண்டு மடங்கு விசர் எனக்கு அந்தப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. ஆகவே,நான் பெற்ற இன்பத்தை நீங்களும் ......!

இப்படியாக அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து pursuit of happynessஐயும், வடிவேலின் 'நகைச்சுவை கதம்பம்' என்ற டிவிடியையும் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
-------------
....எனினும் கீர்த்தியிற்கு படம் பிடித்திருந்ததாய்ச் சொன்னான். Meet the Robinsonsஐ இன்னும் கூடவாய் இரசித்தேனென்றான். TMNT பார்க்கவேண்டுமென்றான்.

குழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது.