Saturday, May 12, 2007

இதமாகட்டும் இந்தச் சனிக்கிழமை

A dream


அதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின ஆளுமைகளினூடாக பேசுவதைப் பார்க்கலாம். இவ்விரு பாடகர்ளும் பிற ராப்/R&B பாடர்களின் பாடல் வரிகளிலிருந்து வித்தியாசமாய் எழுதுபவர்கள். பல பாடகர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுப்பதுடன், பாடல்களை அவர்களுக்காய் இசைகோர்த்து தயாரித்தும் கொடுப்பவர்கள். Will I Am, Black Eyed Peasன் முக்கிய ஒரு பாடகர். இப்பாடல் Freedom writers என்ற படத்திற்காய் தயாரிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் எமினெத்திற்கு பிறகு எனக்கு அதிகம் பிடித்த இன்னொரு பாடகர் Common.

Promiscuous


Nelly Furtado நமது நாட்டுக்காரி. கனடாவின் கிழக்குப்பகுதியான வன்கூவரில் பிறந்து வளர்ந்தாலும், போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். அண்மையில் வந்த அவரது Loose இறுவட்டு பெருமளவில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. Grammy போல, கனடாவின் முக்கிய இசைவிருது நிகழ்வான Junoவில் Nelly முக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தவர் . இந்தப்பாடலைப் பார்த்து ஆடாமல் இருந்தால்தான் அதிசயம்.

Timberland தனது நிறுவனத்திலும் Nellyஐ ஒரு பாடகராக இணைத்திருக்கின்றார். தனித்தனிப் பாடலாக Tamberland பிறருக்காய் பாடிய/தயாரித்த பாடல்களை இரசித்த எனக்கு, அவரின் அண்மையில் வெளிவந்த Shock Value இறுவட்டை வாங்கிக்கேட்டபோது ஏமாற்றமாயிருந்தது. இதே Timbarland தயாரிக்க அதில் பாடவிருந்த M.I.Aன் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Nobody wanna see us 2gether, don't matter...


Akon புகழின் உச்சியில் (வேறு விடயங்களிலும் கூட) ஏறிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்திருப்போம். ஆபிரிக்க (செனகல்) நாட்டுப் பின்னணியில் வந்தவர்; பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர். இப்படியொரு ஆபிரிக்கர், அமெரிக்க R&B /Rap ல் பெருமளவு இரசிகர்களைக் கொண்டிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளகூடியது. அவரின் இரண்டாவது இறுவட்டான Konvicted பல Billboard சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கின்றன. எமினெமோடு smack thatம், Snoop Dogg டன், I wanna love you பாடலும் தொடர்ந்து எங்கும் ஒலி/ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

R.Kelly ஐயும் Shaggy ஐயும் கலந்து நினைவுபடுத்தும் ஒரு குரல் Akonனினது. Akonன் இந்தப்பாடலோடு, R.Kelly யின் Ignition பாடலையும் மற்றும் R.Kelly, Cassidyயோடு பாடிய் Hotel ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது புரியும். கறுப்பினத்தவர்களில் கூட கறுப்பாய் இருப்பது குறைத்து மதிப்பிடுகின்றது என்பதை அதிக நேர்காணலில் Akon அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஏன் தான் இவ்வளவு கறுப்பாய் இருக்கின்றேன் என்று சில கறுப்பினச் சிறுவர்களால் கூட கேட்கப்படும்போது எவ்வாறான சிந்தனைகள் சிறுவர்களிடம் புகுத்தப்படுகின்றது என்று கவலைப்பட்டிருக்கின்றார்.

இப்பாடல், தாங்கள் காதலிப்பதை வேறொருவரும் விரும்பவில்லை என்பதைக் கூறுகின்றது. ஆனால் எமது காதலுக்கான உரிமைக்காய் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிறது. Fight for our right to love என்பது அநேகருக்குப் பொதுவாய் இருக்கிறது போலும்.

No comments: