Saturday, July 07, 2007

சில நிகழ்வுகள்: மப்பும் மந்தாரமுமான படங்கள்

Beats, Breaks & Culture



பலவேறு நாட்டுக் கலாச்சார நிகழ்வுகள் ஒன்ராறியோ வாவியோடு ஒட்டிய ரொரண்டோ பெரும்நகர்ப்பகுதியில் கோடையின் ஒவ்வொரு வாரவிறுதிகளில் நடைபெற்றுவருகின்றது. களரி உட்பட தென்னாசியா நிகழ்வுகளும் நடைபெறுகின்றது என்றறிந்து வெள்ளிக்கிழமைபோக, நாங்கள் அரங்கை அடையமுன்னரே அந்நிகழ்வுகள் முடிவடைந்திருந்தது. எனினும் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன.



Jazz நிகழ்வு மிக அற்புதமாக இருந்தது. இதற்கு முன்னரும் -பத்து நாட்களாய்- தொடர்ந்து ரொரண்டோவில் நடந்துகொண்டிருந்த Jazz festival நிகழ்வொன்றில் கலந்துகொள்ள முடிந்திருந்தது ஒரு இனிய அனுபவம்.



பொழுது சாயும் பின் அந்தி நேரம், வாவி நீரில் அசையும் படகுகள், மென்மையாக வீசும் காற்று இவை அனைத்தும் காதலிக்கும் மனதை மட்டுமில்லை, முரண்பட்ட மனிதர்களைக்கூட நேசிக்கமுடியுமென்றதொரு கதகதப்பான மனநிலையைத் தந்ததென்பது உண்மைதான். (பக்கத்தில் காதலியொருத்தி இருந்து Jazzஐ இரசித்தால்/slow stepsல் ஆடினால் அதைப்போலொரு சொர்க்கமுமில்லை)



இன்னிசை மழை


(எஸ்.பி.பாலசுப்பிரமணியம்)

சென்ற வாரவிறுதியில், எஸ்பிபியும், ஜேசுதாசும் (முதன்முதலாய் கனடாவில் இருவரும் ஒரே அரங்கில் சேர்ந்து பங்கேற்கும்) நிகழ்வொன்று நடந்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்வைப்போல இதைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று ஆவல் எனக்கு இருக்கவில்லை. ஒரு நண்பர், இறுதிநேரத்தில் அவரது துணைவியார் வரமுடியாத காரணத்தால் தன்னோடு சேர்ந்து வருகின்றாயா என்று வினாவினார். இலவசமாகக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏன் தவறவிடுவான் என்று போயிருந்தேன்.


(எஸ்.பி.பி & ஜேசுதாஸ்)

நண்பருக்கு என்னைவிட பதினைந்து வயது கூடவாயிருக்கும் (அவருடன் உரையாடும்போது அவரது முன்னாள் இயக்க அனுபவங்களைக் கேட்பது/முரண்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று :-) ). எனவே அவருக்கு இடைக்கால (80களின் பாடல்கள்) பாடப்படுவதைக் கேட்பது பிடித்தமாயிருந்தது. பெரிய அரங்குக்கு (15,000-20,000; ஏ.ஆர்.ஆரின் நிகழ்வும் இங்கேதான் நடந்தது) ஜேசுதாஸின் குரல் எடுபடவில்லை; எஸ்பிபியின் குரல்தான் பொருத்தமாயிருந்தது.


(எஸ்.பி.பி & சித்ரா)

எனக்கு ஆடவைக்கவேண்டிய பாடல்கள் வேண்டியிருந்தது அல்லது நித்திரை வரும்போல இருந்தது. ஆனால் அவர்கள் 80களில் ஹிட்டாக இருக்கக்கூடிய பாடல்களையே பாடாது தவிர்த்திருந்தது நண்பருக்கும் (எனக்கும்) ஏமாற்றமாயிருந்தது. கடைசியாக பல்லேலக்காவிற்கும், தளபதி பாடல்களுக்கும் தான் உற்சாமடைந்து நிகழ்வைக் கொஞ்சமாகவேனும் கொண்டாடக்கூடியதாக இருந்தது. ஜேசுதாஸ் பாடியதில், 'கடலினக்கரை போயினரே'யும், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையேயும்' பிடித்திருந்தது. பாடகர் மகேஷ், 'அப்படிப்போடு', 'திருட்டுப்பயலே' போன்ற பாடல்களைப் பாடி என்னைப் போன்றவர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தினார். மற்றது சின்மய் அழகாக இருந்தார்.


(பா.விஜய்)

இசைநிகழ்வில், பா.விஜய் நிகச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். நயாகராவில் நனைந்தபோது, சுடச்சுட கோப்பி தயாரித்துமாதிரி ஒரு நீண்டகவிதையை தான் எழுதியதாய் வாசித்துக் காட்டினார். நயாகரா ஒரு ஆணா, பெண்ணா என்ற தத்துவ விசாரம் வந்ததாய் அதில் கூறி (என்னை) விசர்ப்படுத்தினார். வழமைபோல் -நம்மைப்போன்ற அனைத்து ஆண்களும் கூறுவதுமாதிரி- நயாகரா பெண்தான் என்று ஆராய்ச்சி செய்து பா.விஜயும் பொறுமையைச் சோதித்தார் (வைரமுத்துவின் -ரிதம் பட- 'நதியே நதியே' என்ற நல்லதொரு பாடல், பா.விஜயின் கவிதையைக் கேட்டபோது நினைவுக்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை). பா.விஜய் பெண்ணுக்குரிய குணங்களை ஒப்பிட்டுக்கொண்டுவந்துவிட்டு, திடீரென்று ஆஜானுபான நதி என்று உணர்ச்சிவசப்பட்டிருந்தார். தமிழ் (ஆண்) இலக்கியத்தில் பெண்ணை விபரிக்க ஆஜானுபான என்ற சொல்லை எப்போது மாற்றியெழுதினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை சொல்லப்பட்டு வந்துகொண்டிருக்கும், 'பெண்மை'க்குரிய குணாதிசயத்தை, இப்படி மாற்றியமைத்திருந்தால் அது நல்லதும் கூடத்தான்.


நட்சத்திரத் திருவிழா


சுடச்சுட நல்ல ரிதத்தோடு தயாராகும் கொத்துரொட்டி

நட்சத்திரத் திருவிழா என்றபெயரில், இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் வானொலி ஒன்று திறந்த/மூடிய அரங்குகளில் வர்த்தகச்சாவடிகள், விளையாடு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள் என்று இன்றும் நாளையும் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அண்ணாவின் மகன், spelling bee நிகழ்வில் பங்குபற்றியதால் அவனின் நிகழ்வைப் பார்க்கவும், ரொரண்டோ பொம்பிளைப் பிள்ளைகளைச் சுகம் விசாரிக்கவும் சென்றிந்தேன். 'ஊருக்குள்ளே வயசுப்பெண்ணுகள் சவுக்கியமா' என்று இந்திரா பட, 'மாரிமுத்து' பாடலை தயவுசெய்து நினைவில் கொண்டுவரவும். இளநீர், நுங்கு, முழுநெல்லிக்காய், ஜம்புக்காய், ரம்புட்டான் என்று அரிதில் கிடைக்காத சிலவற்றை உருசித்துப் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்ததைத் தவிர வேறு ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு நடக்கவில்லை. பின்னேர நிகழ்வில், கிளித்தட்டு, வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை(?), உதைபந்தாட்டம் போன்றவை இருப்பதாகச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் நின்று இரசிக்கும் பொறுமையில்லாது, வாரவிறுதி நித்திரை என்னையும் எனது நண்பனையும் வீட்டுக்கு அடித்துத் துரத்தியிருந்தது. என்றாலும் எங்கள் ரொரண்டோ கேர்ஸைப் போல அழகானவர்கள் உலகில் அரிதுதான் (அஸினைத்தவிர).


விநோத உடைப்போட்டியில்



'வசீகரா' பாடிக்கொண்டிருந்த ஒரு பதின்மவயதுப் பாடகி



சுடச்சுட வறுத்துத்தந்த கச்சான்



வர்த்தகச் சாவடிகளிலேயே நன்றாக வியாபாரம் போய்க்கொண்டிருந்த பகுதி உணவுப்பகுதிகள்தான்.

No comments: