Thursday, January 05, 2006

நான் போனபோது....(எமினெம்)

நான் கேட்கின்ற ராப் பாடல்களில் பாடல்வரிகளால் என்னை அதிகம் கவர்ந்துகொண்டிருப்பவர்கள், Eminemமும், Kanye Westம். ஒவ்வொரு பாடல்களிலும் கதைசொல்லும் முறைமை அவர்களின் அதிக பாடல்களில் இருக்கும், அதுபோல் எள்ளலும்கூடத்தான். எமினெமின் பாடல்கள் குறித்தும் இன்னபிற அவரது விடயங்கள் குறித்தும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப் பாடலை(கீழே பார்க்க) மொழிபெயர்க்கும் ஆசை துளிர்த்தது. அண்மையில் வெளிவந்த எமினெமின், Curtain Calls - The Hits என்ற இசைத்தட்டை வெளிவந்த அடுத்தநாளே வாங்குவதற்கு, இந்தப்பாடல் மட்டுமே முக்கிய காரணமாயிருந்தது. மொழிபெயர்த்து, ஆறப்போட்டு, திருத்தங்கள் செய்தும், இன்னும் இதில் திருப்தி வரவில்லை. இனியும் இதில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவுக்கு வந்தபின்னே இங்கே பதிவிலிடுக்கின்றேன் :-(. நண்பர்கள் அனைவரின் திருத்தங்களும், குட்டுக்களும் வர்வேற்கப்படுகின்றன.

நான் போனபோது....

ஓம்....
இது எனது வாழ்க்கை
நான் நினைக்கின்றேன், எனது சொந்த வார்த்தைகள்

எப்போதாவது நீங்கள் ஆழமாய் நேசித்தவருக்கு உங்கள் கரங்களை நீட்டியிருக்கின்றீர்களா?
பாவனைகளாய் அல்ல, இல்லை.
உண்மையாகவே கரத்தைக்கொடுத்தீர்களா?

உங்கள் இதயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று தெரியும்போது,
உங்களுக்குத் தெரியும்
நீங்கள் அவர்களின் காவலர் என்றும்
அவர்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் அழிப்பீர்கள் என்றும்.

ஆனால் என்ன நடக்கும்?
வினை உங்களுக்கெதிராய்த் திரும்பி கடித்துக் குதறும்போதும்,
எதற்காய் எழுந்து நின்றீர்களோ அவையே உங்களை அவமானப்படுத்தும்போதும்.
என்ன நடக்கும்,
நீங்களே (அவர்களின்) வேதனைகளின் மூலமாய் மாறும்போது...

'அப்பா, (இங்கே) பாருங்கள், நான் என்ன செய்தேன் என்று.
அப்பா விமானத்தைப் பிடிக்கப் போகவேண்டும்
'அப்பா, அம்மா எங்கே? என்னால் கண்டுபிடிக்கமுடியாதுள்ளது, எங்கே அவர்?'
எனக்குத் தெரியாது, போய் விளையாடுங்கள் கெயிலி.
குழந்தாய், அப்பா பிஸி.
அப்பா இந்தப்பாடலை எழுதிக்கொண்டிருகின்றார், பாடல் தன்பாட்டில் தன்னை எழுதிக்கொள்ளாது.
நான் ஒருமுறை உங்களை ஆட்டிவிடுகின்றேன், பிறகு நீங்கள் உங்கள்பாட்டில் ஊஞ்சல் ஆடவேண்டும்

பிறகு அதிலிருந்து மீண்டு, எனது பாடலில் கூறுகின்றேன்
அவளை(கெயிலியை) நேசிப்பதாய்,
கெயிலியைச் சிதைத்த அவரின் அம்மாவின் கரங்களைப் பற்றியபடி.

இது ஸிலிம் ஷேடி, ஓம் குழந்தாய், ஸிலிம் ஷேடியின் பைத்தியம்
ஷேடி என்னை உருவாக்கினார், ஆனால் இன்றிரவு ஷேடி பாடப்போகின்றார்

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


நான் இந்தக்கனவை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றேன்
நான் கெயிலியை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கின்றேன்
அவள் அலறுகிறாள், அவள் நான் பாடுவதை விரும்புவதில்லை.
'நீங்கள் அம்மாவை அழவைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்? ஏன் அம்மா அழுகின்றார்?'
குழந்தாய் அப்பா இனி உங்களைவிட்டுப்போகமாட்டார். 'அப்பா நீங்கள் பொய் கூறகின்றீர்கள்'
'நீங்கள் எப்போதும் இதையே சொல்லுவியள்; போன தடவையும் இதைத்தான் சொன்னனியள்'
'ஆனால் எங்களை விலத்திப்போகாதீர்கள்; அப்பா நீங்கள் எனக்குரியவர்'.
கடதாசிப் பெட்டிகளை முன்வாசலில் அடுக்கித் தடுக்கிறாள் அவள்
'அப்பா ப்ஸீஸ், போகவேண்டாம். இல்லை, போவதை நிறுத்துங்கள்.'

தனது பொக்கெட்டிலிருந்து சிறிய நெக்லஸ் லொக்கரை எடுக்கிறாள்
இதில் (எனது)படம் உள்ளது, 'இது உங்களைப் பாதுகாக்கும். உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்!'

நான் நிமிர்ந்து பார்க்கின்றேன்
கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்க்கின்றேன்
இந்தச் சவச்சுவர்கள் பேசிக்கொண்டுதானிருக்கின்றன. எனெனில் என்னால் அவை பேசுவதைக் கேட்கமுடியும்.
சுவர்கள் கூறுகின்றன, நீ சரியாகச் செய்வதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் மட்டுமே உள்ளது, அது இன்றைய இரவு.
கால தாமதமாவதற்குள், இப்போது வெளியே போய் அவர்களுக்கு உனது நேசத்தைக் காட்டு.
நான் எனது படுக்கையிலிருந்து வெளியே நடக்க
அது ஒரு மேடையாக மாறுகிறது; 'அவர்கள்' போய்விட்டார்கள்.
வெளிச்சவிளக்குகள் ஒளிர்கின்றன; நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


அறுபதினாயிரம் மக்கள், எல்லோரும் தங்கள் இருக்கையிலிருந்து எழும்பிக் குதித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
திரை மூடுகின்றது, அவர்கள் எனது பாதங்களில் ரோசாப்பூக்களை எறிகின்றார்கள்.
நான் அவர்களை வணங்கி, வந்தற்காய் நன்றி கூறுகின்றேன்
அவர்கள் பெருங்குரலில் அலறுகின்றார்கள், நான் இறுதியாய் ஒரு பார்வையைச் சனத்துக்குள் எறிகின்றேன்.
கீழே பார்க்கின்றேன். நான் பார்ப்பதை என்னால் நம்ப்முடியவில்லை.

'அப்பா, இது நான். அம்மாவுக்கு உதவுங்கள். அவரது கரங்களில் இரத்தம் பெருகுகின்றது.'
ஆனால், குழ்ந்தாய் நாங்கள் ஸ்வீடனில் இருக்கின்றோம்; எப்படி ஸ்வீடன் வந்தீர்கள்?
நான் உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன் அப்பா; நீங்கள் கூறினீர்கள், எங்களை விட்டு விலகிப்போக மாட்டீர்கள் என்று.
நீங்கள் பொய் சொன்னீர்கள் அப்பா; இப்போது அம்மாவைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்'
நான் உங்களுக்காய் இந்த நாணயத்தை வாங்கிவந்தேன்.
அது சொல்கிறது; 'உலகத்திலேயே சிறந்த அப்பா நீங்கள்தான் என்று'
அதை மட்டுமே நான் விரும்பியது,உங்களுக்கு இந்த நாணயத்தை நான் கொடுக்க விரும்பினேன்.
இப்போது அனைத்தும் விளங்குகிறது. நல்லது. நானும் அம்மாவும் (உங்களை விட்டுப்) போகின்றோம்.
குழ்ந்தாய் சற்றுப் பொறு. 'காலம் கடந்துவிட்டது அப்பா, நீங்களே உங்கள் முடிவைத் தேர்வு செய்தீர்கள். '
இப்போது வெளியே போய் அவர்களுக்குக் காட்டுங்கள், எங்களை விட அவர்களை அதிகம் நேசிக்கின்றீர்கள் என்று.
அதுதான் அவர்களுக்கு வேண்டியது. அவர்களுக்குத் தேவை மார்ஷல்.
அவர்கள் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள் .

இது பெரிய அதிசயமில்லை, என்னால் இனி தூங்கமுடியாது, இன்னொரு குளிசையை எடுக்கவேண்டியதுதான்.
ஓம். நீ நிச்சயம் இப்படித்தான் இருப்பாய். நீ ராப் பாடுவாய். நிஜமான வார்த்தை.

எனக்கு கைதட்டல்கள் கேட்கிறது. ஆனாலதைப் பார்க்கமுடியாதிருக்கிறது.
எப்படி இது சாத்தியம்?? திரை என்னில் விழுந்துகொண்டிருக்கின்றது.
நான் (இயல்புக்கு) திரும்புகின்றேன். நிலத்தில் துவக்கொன்றைக் காண்கின்றேன், லோட் பண்ணுகின்றேன்
எனது மூளையில் அதை குறிவைத்து கத்துகின்றேன்; 'ஷேடி நீ சா', பிறகு வெடிக்க வைக்கின்றேன்.

வானம் கருமையாகிறது, எனது வாழ்வு ஒளிர்கிறது.
நான் செல்லவெண்டிய விமானம் விபத்தில் சிக்கி எரிகிறது, சாம்பலாகும்வரை.
(இது நிகழ்ந்து) நான் விழிக்கையில், அலாரம் அலறுகிறது, பறவைகள் பாடுகின்றன.
இது ஒரு இலைதுளிர் காலம். கெயிலி ஊஞ்சல் ஆடுகின்றாள்.
நான் கிம்மிடம் நேரே நடந்து சென்று முத்தமிட்டு அவளை மிஸ் பண்ணினதாக கூறுகின்றேன்.
கெயிலி புன்னகைத்து தனது தங்கையை நோக்கி கண்களைச் சிமிட்டுக்கிறாள்.
Almost as if to say.....

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


மொழிபெயர்த்த மூலப்பாடல்

1 comment:

இளங்கோ-டிசே said...

முக்கியமாய் arm என்பதை கரத்துக்காய் அல்லது ஆயுதத்திற்காய் பாவிக்கப்பட்டது என்ற குழப்பம் இருக்கிறது....
மற்றது underdogஜ எப்படி தமிழில் மொழிபெயர்ப்பது என்பதுவும் அதை எப்படி இந்தப்பாடல்வரிகளில் பொருத்துவது என்றும்.... :-(