-தமிழ்ச்செல்வியை முன்வைத்து-ஷ்ரேயா (தமிழ்ச்செல்வி) அறிமுகமாகும் காட்சி நமது தமிழ்ப்பண்பாட்டிற்கு முன்னுதாரணமாய்க் கொள்ளக்கூடியது. ஓம்...(இது கந்தன் அருளிய பிரணவமந்திரம் அல்ல) கோயில்தான் ஷ்ரேயா அறிமுகமாகின்றார். அவர் அந்தப்பொழுதில் அணிந்திருந்தது சேலையா அல்லது half--saree யா (பாவாடை& தாவணியா) என்பது ஆழமான ஆய்வுக்கு வழிகோலக்கூடியது.
இரண்டாவது காட்சியில் ஷ்ரேயாவைப் 'பொண்ணு பார்க்கப்படுவதனான படலத்தில்' ஆடுகின்றார், பாடுகின்றார்..அவ்வாறு எங்களைப் பயமுறுத்திப் பார்த்துத் தோற்கின்றார். படத்தில் முதல் முதலாக அவரது இடுப்புத் தாவணி கொஞ்சம் விலகுகிறது.
அடக்க ஒடுக்கமாய் சாறி கட்டும் தமிழ்ப்பெண்ணாகவிருக்கும் ஷ்ரேயா (அதனாற்றான் சிவாஜி சார் காதலிக்கிறார்). சிவாஜியின் காதலியானவுடன் இடுப்பு இன்னபிற cleavages தெரிய ஆட்டமாடுகின்றார். இதன் மூலம் தமிழ் கலாசார பெண்கள், ஆண்களைக் காதலிப்பார்களாயின் அவர்களுக்கு எந்த (அரைகுறை) ஆடையும் அணியும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற போதனையை இப்படம் கற்றுத்தருகின்றது. காதலித்தவுடன் உரிமை, உடமை, பொஸஸ்சிவ்னெஸ் இருபாலார் 'இடை'யும் கூடுமென்று அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள். ஆனால் நமது தமிழ்க் கலாசாரத்தில் தொப்புள் என்ன பரப்பளவில் தமது காதலிகளுக்கு இருக்கின்றது என்று பொதுவெளியில் காட்டவும் தயங்காத மிகத் திறந்த மனதுடையவர்களாக தமிழ் ஆண் சிங்கங்கள் இருக்கின்றார்கள் என்பதை இப்படம் தொப்புள் சாட்சிகளுடன் ஆவணப்படுத்துகின்றது. அந்தளவில் கல்தோன்றா மண்தோன்றா மூத்த குடிகள் நாமென்பதையும் நாகரிகத்தைப் பிறருக்கு கற்றுத்தந்தவர்கள் நாமே என்ற வரலாற்றை மீளவும் தூசி தட்டவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
ஜோசியத்தின்படியே எல்லாம் நிகழும் என்றபடியால், நீங்கள் காதலித்தாலும் ஜோசியம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டும். டீப்பாய் காதலித்தால் என்ன, ரிப்-ரொப்பாய் காதலித்தால் என்ன, ஜோசியம்/ஜோசியர் காதலிக்கக்கூடாது என்றால் காதலிக்கக்கூடாதுதான்...இல்லையெனில் பெரும் பாரதூரமான் விளைவுகள் உருவாகும், அத்றகு முக்கிய உதாரணமே ஷ்ரேயாவின் கண்ணில் வரும் கிளிசரின் கண்ணீர்த்துளிகள் (அல்லது தமிழ்க் கலாசாரத்தின் கறுப்புத்துளிகள் எனவும் சொல்லலாம்)
ஷ்ரேயா மெல்லிய நீல சேலையில் அழகாக இருக்கின்றார். ஆகவே இனி அனைத்துத் தமிழ்ப்பெண்களும் மெல்லிய நீல நிற சாறியைத் நமது தமிழ் அடையாளக் கலராக ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை....அது see-throughவாய் இருக்கவேண்டும். பின் பக்க blouse, emptyஆக இருத்தல் விருப்பத்தக்கது. எனெனில் பிறகு தொப்புளுக்கு ஒரு நீதி தமக்கு ஒரு நீதியா என முதுகு கோபிக்கக்கூடும்.
ஷ்ரேயாவுக்கு காதல் வரும் காட்சியில் ரெயினுக்கும் முன் சிவாஜி சாரின் கால் (ஓமொன்று சொல் இல்லாட்டி தற்கொலை என்ற சபதத்தின்படி)தண்டவாளத்தில் சிக்குகிறது. அந்தப்பெரிய உருப்படியைக் கண்டு நிற்பாட்டமுடியாத வண்டலூர் ரெயின் ஷ்ரேயா தன் தாவணியைத் தூக்கிப்போட்டு blouse யோடு ஓடும்போது மட்டும் நிற்கிறது (ஆகவே அந்த ரெயின் ஒரு ஆண் என்பது நிரூபணமாகிறது). அப்படியே குனிந்து நிற்கும் ஷ்ரேயாவை கமரா மேலிருந்து தன் கலைத்தாகத்தோடு படம் எடுக்கிறது இந்நூற்றாண்டில் தவறவிடக்கூடாத நூறு ஒளிப்படங்களில் ஒன்றென ரைம்ஸில் வரக்கூடிய அரிய காட்சி அது.
தொப்புள் காட்டாவிட்டால் தமிழ் ஆண்கள் டூயட் பாடமாட்டார்கள் என்பதால் தொப்புளைக் காட்டாமல் ஒருபாட்டும் ஷ்ரேயா ஆடிவிடவில்லை.. அவ்வப்போது தடாகத்தில் மெல்லிய ஆடைகளுடன் நீந்தவும் செய்கிறார். ஆனால் தலை துவட்டும் காட்சியைக் காணவில்லை. அவருக்கு 'ஜலதோசம்' பிடித்துவிடுமே என்று படம் முடியும்வரை உங்கள் உள்ளம் -என்னைப்போல அதிர்ந்தால் - நீங்கள் ஒரு மனிதாபிமானமுள்ள தமிழ் ஆண் என்பது உறுதிப்படுத்தப்படும்..
இடைவெளிக்குப் பின் நெடும் நேரமாய் ஷ்ரேயாவைக் காணவில்லை. சிலவேளை ஸ்கிரினிலிருந்து வெளியே வந்து ஒய்வெடுக்க அரங்கின் இருக்கையில் எங்காவது இருக்கின்றாரோயெனத் தேடத்தொடங்கினேன். மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் சேலை கட்டியிருக்கவில்லை என்பதாலும் தொப்புளின் பரப்பை வெளியே பறைசாற்றிக்கொண்டிருக்காததாலும் அவர்கள் தமிழ்ப்பெண்களாக இருக்கச் சாத்தியமில்லை. (ஆனால் தமிழில் கசமுசாவென்று கதைத்துக்கொண்டிருந்தார்கள்).
சிவாஜியின் laptop சிபிஜக்கு காட்டிக்கொடுத்து சின்னத்திரை வில்லி மாதிரி வந்து ஷ்ரேயா ஒருகாட்சியில் கண்ணீர் வடிக்கிறார். அப்போது மட்டும் அவரது இடுப்பு தாவணியால் மறைக்கப்பட்டிருந்தது.
இறுதிக்காட்சியில் ஷ்ரேயா ஸ்கிரினில் hi hi (or bye bye) என கையைக்காட்டுகிறார். மூன்று மணித்தியாலமாய் தமிழ்க் கலைத்தாகம் கொண்ட ஒரு படத்தைப் பார்த்த்தால் கையில் வைத்திருந்த ஆறு ரிக்கெட்டுக்களை ரென்சனின் சுக்குநூறாக கிழித்திருந்தது கூட எனக்குத் தெரியவில்லை என்பதில் இந்தப்படத்தின் அருமை பெருமை உங்களுக்குப் புரியும். அருமையான படத்தில் அற்புதமாய் நடித்த ஷ்ரேயாவுக்கு அந்த கடதாசித்துண்டுகளை ஸ்கிரினை நோக்கி எறிந்து எனது அன்பைக் காணிக்கையாக்கினேன்.
------------------
நானாவது பரவாயில்லை, எனக்கு ஓசியில் ride கொடுத்து ஓசியில் ரிக்கெட்டும் எடுத்துத் தந்த நண்பனுக்கு எப்படியிருக்கும்? அவனுக்காகவே இந்தப்பதிவு சமர்ப்...பணம்!
தோழா, ஷ்ரேயா போல ஒரு தமிழ்ப்பெண் உனக்குக் கிடைக்க கடவுக.
------------------
சிவாஜி சாருக்கு அவனவன் பாலாபிஷேகம், பூந்தி இலட்டு அபிஷேகம், நடுரோட்டில் ஆடறுத்து ரத்தாபிஷேகம் என்று செய்யும்போது, நம் தமிழ்ப்பெண் ஷ்ரேயாவிற்கு என்னாளானது... ஒரு பெங்குவின் ஆட்டம்!
.