கியூபாவில் கடைக்கு, வங்கிக்கு, மற்றும் போகின்ற இடங்களில் நாங்கள் சந்தித்தவர்களில் அநேகர் நாங்களும் கியூபர்கள் என்றவகையில் எங்களுடன் ஸ்பானிஷ் மொழியிலேயே உரையாடத் தொடங்கிருந்தார்கள். எமக்கு சென்னோரிட்டா, கிராசியஸ், சர்வேசா போன்ற 'பொறுக்கி'யெடுத்த சொற்களைத் தவிர வேறோன்றும் ஸ்பானிஷ் மொழியில் தெரியாது; அத்துடன் நாங்கள் கியூபர்கள் அல்ல என்றபோது, பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்று அநேகர் சொல்லியிருந்தார்கள். ஆகவே அடுத்த முறை, கியூபா போகின்றபோது ஸ்பானிஷ் மொழி அறிந்துகொண்டுபோய் கியூபர்களாக மாறிக் கலக்குவதாய்த் தீர்மானித்திருந்தோம். இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் தந்த உற்சாகத்தில் நண்பன் பயணியர் கையேட்டை விரித்துவைத்து ஒன்றிலிருந்து பத்துவரை ஸ்பானிஷில் சொல்லக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தான் என்பது வேறுவிடயம். அங்கிருந்த மக்கள் மிக நட்பாயிருந்தார்கள்; அதேபோன்று பலருக்கு 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை' போல கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெயரும் விருப்பமும் இருக்கிறது.
கியூபாவில் நின்ற நாட்களின் மலரும் நினைவுகளை அவிழ்த்தால், நிறைய மலர்கள் நறுமணத்துடன் வலையில் மலரக்கூடும். அதெல்லாம் இப்போது வேண்டாம். அங்கே கொய்த சிலவற்றைப் பதிவு செய்கின்றேன். இரண்டு கால்களுடன் அலைந்து திரிந்த 'இயற்கை'யை இரசிக்கவே எங்களுக்கு நேரம் போதாமல் இருந்தபோது புகைப்படப்பெட்டிக்குள் வந்த இயற்கை அப்படி இப்படித்தான் இருக்கும். மன்னிக்குக!
இப்பொது ஏன் கியூபா பற்றி நினைவுக்கு வந்தது என்றால், மைக்கல் மூர் (ஃபரனைட் 9/11ற்கு பிறகு) SICKO என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கின்றார். எப்படி அமெரிககாவில் Health System இருக்கின்றது என்பதை கியூபாவின் Health System யோடு ஒப்பிட்டு எடுத்திருக்கின்றார். கியூபா புரட்சியின் பின், ஃபிடல் காஸ்ரோ போன்றவர்களால் கியூபாவின் மருத்துவ அமைப்பு மிகச்சிறப்பாக (அனைவருக்கும் இலவசமாக) இயங்கிவருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. இம்மாத இறுதியில் திரையரங்கிற்கு வரவிருக்கும் SICKOவை முடிந்தால் பாருங்கள். இணையத்தில், உங்கள் படம் திரையங்கில் வெளியிடமுன்னரே வெளிவந்துவிட்டதே என்று மூரிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு அது பற்றி கவலையில்லை, தனது பெயரைக் களவெடுத்து தங்களது படம் என்று போடாமல் வேறு என்ன செய்தாலும் பரவாயில்லை. படம் எடுத்ததன் நோக்கமே பரவலாய் பலரைப் போய்ச்சேரவேண்டும் என்று மூர் குறிப்பிட்டிருந்தார். 9/11 ஆல் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளையும் கியூபாவிற்கு அழைத்துச்சென்று அங்கே படமெடுத்தத்தற்காய் அமெரிக்க அரச இயந்திரத்தால் தீவிர விசாரணைக்கும் மைக்கல் மூர் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 comments:
"இயற்கை" படங்களை இங்கே போடாமல் தவிர்த்ததற்காக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்
முனியாண்டி, எல்லாம் 'எதிர்காலம்' பற்றிய பயந்தான் :-).
கியூபா மருத்துவத்துறை பற்றி ஓரு விபரணச் சித்திரம் பார்த்துள்ளேன்.
மூர் தயாரிப்புகள் பிடிக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட படம் பார்க்கமுயல்கிறேன்.
நம் நாட்டை நினைக்க வைக்கும் பூக்களின் படங்கள்.
நன்றி யோகன். SICKOவைப் பார்த்துவிட்டு நீங்களும் ஒரு பதிவு எழுதுங்கள்.
.....
கனடாவிலிருந்து பல ஈழத்தமிழர்கள் மருத்துவ மேற்படிப்பிற்காய் கியூபா போவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். படிப்பதற்கான செலவு மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம்.
இப்போ படம் நல்லா தெரியுது டிசே
நன்றி
Post a Comment