Sunday, June 10, 2007

ஏ.ஆர்.ரஹ்மான் - ரொரண்டோ

-June 10, 2007-

ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி 7.30 Air Canada Centreல் ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டு பயமுறுத்திக்கொண்டிருக்க, காருக்கான தரிப்பிடம் கிடைக்காது மெட்ரோ ரொரண்டோவில் அவதிப்பட்டபடியிருந்தோம். ஏ.ஆர்.ஆர் தனது நிகழ்ச்சியை நேரத்திற்குத் தொடங்கிவிடுவார் என்பதைவிட, நிகழ்ச்சிக்கு வருகின்ற பெண்களை நாம் நேரத்திற்குச் சென்று வாசலில் நின்று வரவேற்காது போனால் அவர்களின் முகம் வாடிப்போய்விடுமே என்ற கவலையே அதிகம் எமக்குள் இருந்தது. நண்பனும், இப்படிப் பெண்கள் -ஆடை, அலங்காரத்திற்கு- நேரம் மினக்கெடுத்தி வெளிக்கிட்டு வரும்போது நாம் அவர்களை பார்த்து இரசிக்காவிட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று எனது அலைவரிசையில் நின்று உரையாடிக்கொண்டிருந்தான் (ஆனால், நண்பா செப்ரெம்பர் -உன் registrationற்குப் பின்- நாம் இப்படியெல்லாம் கலர் பார்ப்பதை ஆய்வுகள் செய்யமுடியுமா என்ன?)

P6150140

ஒரு மாதிரி காரைப் பார்க் செய்துவிட்டுப் போனால் இருக்கைகளைச் சரியாகக் காட்டும் பெண் ஒருவர், 'நீ அணிந்திருக்கும் ஆர்ஜெண்ரீனா ரீசேர்ட் நல்லாயிருக்கிறது' என்று என்னை குளிரவைத்து நண்பனைக் கொதிக்கவைத்தார். அந்த ஸ்பானிஷ் பெண்ணோடு 'கடலை போடுவதா'? அல்லது இருக்கைகளில் எங்களைக் காணாது ஆம்பல் முகம் சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதா என்று நினைப்பதற்குள் நிகழ்வு ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டது.

P6150161

நிகழ்வில் அதிகமாய் ஹிந்திப் பாடல்களைப் பாடினார்கள் (தமிழர்கள் பெரும்பான்மையாய் வருவார்கள் என்று தெரிந்தும்/ அரங்கில் இருந்தும்). அதனால் சோர்ந்து போயிருந்த எம்மை முன்னுக்கு இருந்த வட இந்தியாப் பெண்களும், பின்னுக்கு இருந்த தமிழ்ப்பெண்களும் ஆடியாடி, கத்திக்குழறி(?) உற்சாகப்படுத்தியபடியிருந்தார்கள். நணபனுக்கு *சர்வேசா அருந்தாமலே உருவேறுதல் நிகழ்ந்து, தமிழ் ஹிந்தி என்று வேறுபாடில்லாமல் எல்லாப்பாடல்களுக்கும் சாமியாடத்தொடங்கியிருந்தான். நான், அவனுக்கு அவ்வப்போது கூக்குரலிலிட்டு, ரிதம் ஏற்றி வேப்பிலை அடித்துக்கொண்டிருந்தேன். 'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே....ஹம்மா, ஹம்மா, ' என்று ரஹ்மான் உச்சஸ்தாயியில் பாடத்தொடங்கும்போது எனக்கும் உருவேறியிருந்தது; கஞ்சா அடிக்காமலேயே நானும் எங்கையோ உயர உயரப் பறக்கத் தொடங்கியிருந்தேன்.

P6150167
ஆடிக்கொண்டிருக்கும்போது, ரஹ்மானின் பாடல்களைப் போல, எனக்குப் பிரியமான பெண்ணும் ஏன் இவ்வளவு குளிர்மையாக மனதிற்குள் வந்துபோய்க்கொண்டிருக்கின்றாள் என்பது என்றுமே புரிவதில்லை....ல்லை...லை.

P6150172

நாலைந்து வருடங்களுக்கு முன் ரஹ்மானின் பாடல்கள் மீதிருந்த பைத்தியம் இப்போதில்லை. மேலும் சிவாஜி படப்பாடல்களில் அநேகமானவற்றைப் பாடியதைத் தவிர்த்து வெவ்வேறு தமிழ்ப்படங்களிலிருந்து சில பாடல்களைப் பாடியிருக்கலாம். சிவாஜியில் 'ஆம்பலை'த் தவிர மிச்சம் எல்லாம் வீணான பாடல்கள் என்பது எனது துணிவு.

P6160190

இப்படியான நிகழ்ச்சிக்குப் போயும், இறுக்கமாய் இருந்து இரசிக்கும் elite மனநிலையை, தமிழ்க் கலாசார பின்புலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்று நானும் நண்பனும் இடையிடை அலசிக்கொண்டிருந்தோம். பார்ட்டிகளுக்குப் போய் தண்ணியடித்து மனுசன்மார் டான்ஸ் ஆடி fun அடித்துக்கொண்டிருக்கும்போது, இறுக்கமாய் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களிலிருந்து இந்த உரையாடலை ஆரம்பிக்கலாம்.

P6150155

அந்தவளவில் வட இந்தியக் கலாசாரம் வித்தியாசமானது. பெண்களையும் தமது கொண்டாட்டங்களில் அநேக இடங்களில் உள்வாங்கிகொண்டிருப்பதாய் நான் வாசித்தளவில் அறிந்து வைத்திருக்கின்றேன். நல்லதை எவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். வறட்சியான தமிழ்க்கலாச்சாரம் பற்றி பின்னர் உரையாடலாம். எனெனில் எனக்கு இப்போது தூக்கம் வருகின்றது.

*beer in spanish

4 comments:

தாரா said...

டிசே,

அடுத்த வாரம் ஏ.ஆர் ரஹ்மானின் நிகழ்ச்சி வாசிங்ட்ன் டிசியில் உள்ளது. நான் போகலாமென்று இருக்கிறேன். ஆனால் டொராண்டோவிலேயே தமிழ் பாடல்கள் அதிகம் வழங்கவில்லை என்று நீங்கள் சொன்னதைப் படித்து என் ஆர்வம் குறைந்துவிட்டது! :-(

தாரா.

இளங்கோ-டிசே said...

தாரா, இந்திப்பாடல்களோடு உங்களுக்கு ஒரளவு பரீட்சயமிருப்பின் நீங்கள் ஏ.ஆர்.ஆரின் நிகழ்வை அதிகம் இரசிப்பீர்கள் (எனக்கு பரீட்சயம் மிகக்குறைவு). சில (6?) வருடங்களுக்கு முன், இங்கு நடந்த ஏ.ஆர்.ஆரின் நிகழ்விலும் இப்படி இந்திப்பாடல்கள் நிறையப் பாடியதைக் கேட்டுத்தான் பல நண்பர்கள் இம்முறை வரவில்லை. எனக்கு எப்படியெனினும் ஏ.ஆர்.ஆரின் நிகழ்ச்சியை ஒருமுறையாவது liveவாய் பார்க்கவேண்டும் என்ற விருப்பினால் இந்த எச்சரிக்கைகளை புறக்கணித்திருந்தேன். தமிழ்ப்பாடல்களையும் இந்திக்கு நிகராய்ப் பாடியிருப்பார் என்றால், அரங்கு நிறைந்திருக்கும் (முக்கால்வாசியே நிறைந்திருந்தது). தமிழ் அசல் பாடல்களைக்கூட (பிறகு அவை இந்திக்குப் போயிருந்தாலும்) -அவற்றைக்கூட- இந்தியில் பாடியதுதான் மிகவும் அலுப்பைத் தந்திருந்தது. எனினும் நிகழ்வை ஒழுங்குசெய்தவர்கள் வட இந்தியர்கள் என்பதால் நாம் நோகவும் முடியாது. நிகழ்வை ஒழுங்குசெய்தவர்களின் விருப்பிற்கேற்பத்தானே இவர்கள் பாடவும் முடியும்.

Anonymous said...

ரசனைக்காரர்தான் நீங்கள்.. என்டாலும் நீங்கள் ஆடின படத்தையுமெல்லொ எடுத்துப் போட்டிருக்கோணும்..:-))

இளங்கோ-டிசே said...

நண்பர், எனக்கும் என்னை முன்வைத்து படம்காட்ட ஆசையில்லாமலில்லை; ஆனால் என் பதிவுகளுக்கு வருகின்ற சொற்பமானவர்களையும் ஒரேயடியாகத் துரத்தியடிக்க விருப்பமில்லை :-).